மாணவர்களின் பாதுகாப்புக்கு பெற்றோர் ஆசிரியர் இணைவு அவசியம் – வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் !

Friday, July 20th, 2018

பிள்ளைகளின் பாதுகாப்பு இன்றைய காலகட்டத்தில் மிக முக்கியமாக இருக்கின்றது. பிள்ளைகள் பாடசாலை முடிவுற்று வீடு செல்லும்போது பெற்றோரும் ஆசிரியர்களும் இணைந்து பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். பிள்ளை பாடசாலைக்குச் செல்லாத சமயத்தில் பெற்றோர் பிள்ளையின் வகுப்பு ஆசிரியருக்கு பிள்ளையின் பாதுகாப்புக் கருதி உடன் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் சத்தியசீலன் தெரிவித்தார்.

மடு கல்வி வலயத்திலிருந்து கடந்த 2016, 2017 ஆம் ஆண்டுகளில் தரம் 5 புலமைப்பரிசில், ஜி.சி.ஈ. சாதாரண தரம், உயர்தரம் மற்றும் மாகாண மட்ட தேசிய மட்ட விளையாட்டுப் போட்டிகளில் தோற்றிச் சாதனை படைத்த மாணவர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு மடுவலயக் கல்விப்பணிப்பாளர் மாலினி வெனிற்றன் தலைமையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

கல்வி என்பது எமக்கு முக்கியமான மூலதனம். எமது பிள்ளைகளே வருங்காலத்தின் விலை மதிக்க முடியாத சொத்துக்கள். எனவே நாம் அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். அவர்களுக்கு தன்னம்பிக்கையை ஊட்ட வேண்டும்.

பிள்ளைகள் பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெறும்போது அவர்களை வாழ்த்த வேண்டும். மாறாக நாம் ஏனைய பிள்ளைகளுடன் ஒப்பிட்டு அவர்களை குறை கூறுவதைத் தவிர்க்க வேண்டும்.

இந்த பிரதேசம் பல பிரச்சினைகளை சந்தித்த பிரதேசமாகும். மக்கள் இடம்பெயர்ந்து பின் தற்பொழுது மீள்குடியமரும் பிரதேசமாக இருக்கின்றது. அதனடிப்படையில் இந்தப் பிரதேசத்தை முன்னுரிமைப்படுத்தி பலவிதமான அடிப்படைத் தேவைகளை முழுமை செய்து வருகின்றோம். ஆசிரியர் வளங்களை பொறுத்த மட்டிலும் நாங்கள் நாங்கள் இந்தக் கல்வி வலயத்துக்கே முன்னுரிமை வழங்கி வருகின்றோம்.

பிள்ளைகளின் கல்வி மட்டத்தை உயர்த்துவத்றகாக ஜி.சி.ஈ. சாதாரணதரப் பரீட்சையின் பெறுபேறுகளை உயர்த்துவதற்காக பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வகுப்பு பரீட்சைகளிலே குறைந்த புள்ளிகளை பெறும் மாணவர்களின் கல்வி மட்டத்தை உயர்த்துவதற்கான திட்டங்களையும் நாம் செயல்படுத்துகின்றோம்.

பிள்ளைகளுக்கு கல்வியை மட்டுமல்ல எமது விழுமியங்களையும் பண்பாட்டையும் கற்றுக்கொடுக்க வேண்டும்.

இப்பொழுது பட்டதாரிகள் வேலையற்றவர்களாக வேலைக்காக போராடும் நிலையை நாம் பார்க்கின்றோம். இந்த நிலை எமது பிள்ளைகளுக்கு தொடரக்கூடாது. இந்த உலகத்தில் எந்தத் துறைக்கு முக்கியத்துவம் இருக்கிறது. எந்தத் துறையில் எமது பிள்ளைகளை இட்டுச் சென்றால் தொழில்வாய்ப்பைப் பெற முடியும் என்பதை நாம்தான் அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும்.

தாதியர் வேலை வாய்ப்புக்காக ஆட்சேர்ப்பு மேற்கொள்ளும்போது எமது மாகாணத்திலிருந்து விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ள முடியாது இருக்கின்றது. மூன்று பாடங்களிலே சாதாரண சித்தி பெற்ற விஞ்ஞானத்துறை மாணவர்களை கண்டுபிடிக்க முடியாத நிலை இருந்து வருகின்றது.

ஆகவே விஞ்ஞானத்துறை மற்றும் கணிதத்துறைகளுடன் புதிதாக ஆரம்பிக்கப்பட்டிருக்கும் துறைகளில் பிள்ளைகள் ஈடுபட நாம் அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்றார்.

Related posts:

சுவசெரிய நோயாளர் காவு வண்டி சேவைக்கு நாளாந்தம் 5,300 க்கும் மேற்பட்ட அழைப்பு - இராஜாங்க அமைச்சு!
வாய்ப்புகளை பயன்படுத்தி வெற்றிகொள்ள ஒன்றிணைவோம் - எதிர்க்கட்சிகளுக்கு சபையில் பிரதமர் தினேஷ் குணர்த்...
ஹமாஸ் அமைப்பு தெற்கு இஸ்ரேல் மீது ரொக்கட் குண்டு தாக்குதல் - பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் போர் பிரகடனம் ...