வாய்ப்புகளை பயன்படுத்தி வெற்றிகொள்ள ஒன்றிணைவோம் – எதிர்க்கட்சிகளுக்கு சபையில் பிரதமர் தினேஷ் குணர்த்தன அழைப்பு!

Friday, March 24th, 2023

சர்வதேச நாணய நிதியத்தின் நிதி ஒத்துழைப்புக்கான உறுதிப்பாட்டுடன் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு எமக்கு புதிய கதவு திறக்கப்பட்டுள்ளது என பிரதமர் தினேஷ் குணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இதனை ஆரம்பமாகக் கொண்டு உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, பெரிஸ் கிளப் மற்றும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளும் எமக்கு உதவுவதற்கு முன் வந்துள்ளதாக குறிப்பிட்ட பிரதமர், இந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வதற்கு அனைவரும் ஒத்துழைப்புடன் செயற்படுவது அவசியம் என்றும் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் அனைவரதும் ஒத்துழைப்பு அவசியம் என ஜனாதிபதி விடுத்த வேண்டுகோளை அனைவரும் ஏற்றுக்கொண்டு செயற்பட வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

சில தரப்பினரால் முன்வைக்கப்பட்ட விமர்சனங்கள் முற்றிலும் தவறானது என்பதுடன் அது பொய்யாகியுமுள்ளது என குறிப்பிட்ட பிரதமர், நெருக்கடியான நிலையிலிருந்து மீள்வதற்கான கதவு திறக்கப்பட்டுள்ளது என்றும் இது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமானதல்ல நாட்டு மக்கள் அனைவருக்குமான வாய்ப்பாகும் என்றும் அவர் சபையில் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கை தொடர்பில் நேற்று முன் தினம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சபையில் ஆற்றிய விசேட உரை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் நேற்று இரண்டாவது நாளாகவும் நடைபெற்றது. அந்த விவாதத்தில் உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர் –

எமது நாட்டுக்கு அன்னிய செலாவணியைக் கொண்டுவருபவர்களுக்கும் ஏற்றுமதி துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் நாம் கூறுவது தற்போதைய நிலையில் அதிகமாக அதனைக் கொண்டு வருவதற்கு செயற்படுங்கள் என்பதே. கடந்த ஆறு மாதங்களில் எமக்கு அந்நிய செலாவணியாக 359 மில்லியன் டொலர்கள் கிடைத்துள்ளன. அதனை மேலும் அதிகரிக்கச் செய்யுமாறு நாம் அவர்களைக் கேட்டுக் கொள்கின்றோம்.

190 நாடுகள் சர்வதேச நாணய நிதியத்தின் உறுப்புரிமையைப் பெற்றுள்ளது. அந்த நாடுகள் பல்வேறு கஷ்ட நேரங்களிலும் அதன் உதவிகளை பெற்றுக்கொள்ள முடியும். இதன்படி எமது தெற்காசிய நாடுகளிலும் பல நாடுகள் அவ்வாறான உதவிகளை பெற்றுள்ளன.

கடந்த 7 மாதங்களாக நாடு மிக நெருக்கடியான நிலையை சந்தித்தது. எனினும் அவ்வாறான கடினமான காலத்திலும் நாம் எந்தவொரு அரசாங்க ஊழியரையும் பணியில் இருந்து நிறுத்தவில்லை. அவர்களின் தொழில்களை பாதுகாக்க தேவையான வேலைத்திட்டங்களை முன்னெடுத்தோம்.

அந்நிய செலாவணி தற்போது அதிகரித்து வருகின்றது. சுற்றுலாத்துறையினரின் வருகையும் அதிகரித்து வருகின்றது. இதன்மூலம் எமது நிதி இருப்பை அதிகரித்துக்கொள்ளவும், அதனுடன் தொடர்புடைய மக்களுக்கான வருமான அதிகரிப்பும் உருவாகும்.

அதேவேளை, சம்பள அதிகரிப்புக்களை மேற்கொள்ள முடியுமான சந்தர்ப்பத்தில் அதனை மேற்கொள்ள முடியும் என ஜனாதிபதி தமதுரையில் குறிப்பிட்டிருந்தார். நெருக்கடியான நிலையில் இருந்து மீண்டு வருகின்றோம்.

தற்போது திறக்கப்பட்டுள்ள புதிய கதவை வெற்றிகரமானதாக முன்னெடுப்பதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இந்த சந்தர்ப்பத்தை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: