பொலிஸார் அசமந்தம்: நீதிமன்றம் அதிருப்தி – பொலிஸ் அதிகாரிகளை நீதிமன்றம் அழைத்து நீதிவான் அறிவுறுத்தல்!

Friday, June 15th, 2018

யாழ்ப்பாணம் சிறப்பு குற்ற விசாரணைப் பொலிஸ் பிரிவினரின் விசாரணை நடவடிக்கைகளில் நீதிமன்றம் கடும் அதிருப்தி வெளியிட்டதுடன் உதவிப் பொலிஸ் அத்தியட்சகரை திறந்த மன்றில் அழைத்து அறிவுறுத்தல் வழங்கியது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் இடம்பெறும் 5 இலட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட பண மோசடிகள் தொடர்பான முறைப்பாடுகளை ஏற்று அவற்றை நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்த யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தின் கீழ் சிறப்பு குற்ற விசாரணைப் பிரிவு உள்ளது.

இந்தப் பிரிவின் கீழ் யாழ்ப்பாண மாவட்டத்தில் இடம்பெறும் காசோலை மோசடிகள் உள்ளிட்ட வழக்குகள் நீதிமன்றங்கள் ஊடாக முன்னெடுக்கப்படுகின்றன. இந்தப் பிரிவினரால் தொடுக்கப்படும் வழக்குகள் ஒவ்வொரு புதன்கிழமையும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் விசாரணைக்கு எடுக்கப்படும்.இந்தப் பிரிவின் வழக்குகள் யாழ்ப்பாணம் நீதிவான் சி.சதீஸ்தரன் முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தன.

யாழ்ப்பாணம் சிறப்பு குற்ற விசாரணைப் பிரிவினரின் விசாரணை நடவடிக்கைகள் மந்த கதியில் இடம்பெறுகின்றன. ஒழுங்கமைப்பு இன்றி இடம்பெறும் விசாரணைகளால் குற்றஞ்சாட்டப்படுபவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே இந்தப் பிரிவினர் ஒழுங்கீனமாக நடைபெறுவதால் வழக்குகளைத் தள்ளுபடி செய்யவேண்டும் என்று குற்றஞ்சாட்டப்படுபவர்கள் சார்பில் முன்னிலையான மூத்த சட்டத்தரணிகள் மன்றில் சமர்ப்பணம் செய்தனர்.

மூத்த சட்டத்தரணிகளின் சமர்ப்பணத்தை ஆராய்ந்த மன்று யாழ்ப்பாணம் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸ் தலைமையகப் பொறுப்பதிகாரி ஆகிய இருவரையும் திறந்த மன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டது.

யாழ்ப்பாணம் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸ் தலைமையகப் பொறுப்பதிகாரி திறந்த மன்றில் முன்னிலையாகினர்.சிறப்பு குற்ற விசாரணைப் பிரிவினர் வழக்குகளை முன்னெடுக்கும் போக்கை அவதானிக்குமாறு பொலிஸ் அதிகாரிகளுக்கு நீதிவான் அறிவுறுத்தினார்.

நீதிமன்றில் வழக்கு நடவடிக்கைகளை ஒழுங்கமைப்பாக முன்னெடுக்க வேண்டும். சிறப்பு குற்ற விசாரணைப் பிரிவின் உத்தியோகத்தர்களின் நடவடிக்கை தொடர்பில் குற்றச்சாட்டுகள் எழுகின்றன. அவை சீர்செய்யப்பட வேண்டுமென்று பொலிஸ் அதிகாரிகளுக்கு நீதிவான் பணித்தார். வழக்கு நடவடிக்கைகளில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு மன்றிடம் மன்னிப்புக் கோருகின்றோம். அவை ஒழுங்கமைக்கப்படும் என்று பொலிஸ் அதிகாரிகள் மன்றுக்கு உறுதியளித்தனர்.

Related posts: