புதுவித மலேரியா தொற்று: வடக்கில் மீண்டும் உயிர் ஆபத்து!

Saturday, October 28th, 2017

யாழ்.மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலின் தாக்கத்துடன் மலேரியா காய்ச்சலுக்கான அனோபிளிஸ் ஸ்ரெபன்சி என்னும் நுளம்பும் அடையாளம் காணப்பட்டிருக்கின்றது. மக்களுடைய விழிப்புணர்வும், ஒத்துழைப்பும் இல்லாவிட்டால் டெங்கு மற்றும் மலேரியாக் காய்ச்சல்களைப் பரப்பும் நுளம்புகளைக் கட்டுப்படுத்தவே இயலாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

வடமாகாணத்தில் முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், வவுனியா மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் வெகுவாக குறைந்துள்ளது. அதே சமயம் யாழ்.மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் மிக அதிகமாகக் காணப்படுகின்றது. குறிப்பாக யாழ்.மாவட்டத்தில் 2 மரணங்களும் நிகழ்ந்திருக்கின்றன. இந் நிலையில் டெங்குக் காய்ச்சலைக் கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றது. விசேடமாக வெளிமாவட்டங்களில் இருந்து சுகாதாரப் பணியாளர்கள் யாழ்.மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்டு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அதே சமயம் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்களில் மலேரியா காய்ச்சலை பரப்பும் அனோபிளிஸ் ஸ்ரெபன்சி என்ற நுளம்பு அடையாளம் காணப்பட்டிருக்கிறது. யாழ்.மாவட்டத்தில் முதலில் யாழ்.ரயில் நிலையப் பகுதியில் இந்த நுளம்பு அடையாளம் காணப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து நல்லூர் பகுதிகளிலும் இந்த நுளம்பு அடையாளம் காணப்பட்டுள்ளது.

எனினும் எவருக்கும் நோய்த் தாக்கம் உண்டானமை கண்டு பிடிக்கப்படவில்லை. இந்நிலையில் மழை காலம் ஆரம்பமாவதால் பொதுமக்கள் விழிப்பாக செயற்படவேண்டும்.

அதேசமயம் பொதுமக்களின் விழிப்புணர்வு இல்லாமல் டெங்கு காய்ச்சல் மற்றும் மலேரியா காய்ச்சல் போன்றவற்றைப் பரப்பும் நுளம்புகளைக் கட்டுப்படுத்த இயலாது. எனவே மக்கள் விழிப்புணர்வுடன் செயற்பட்டு நுளம்பைக் கட்டுப்படுத்த சுகாதார அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

Related posts: