பாடக்கொப்பிகளை திருத்துவது கட்டாயம் – வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களம்!

Thursday, February 22nd, 2018

பாடசாலைகளில் மாணவர்களின் பாடக்கொப்பிகள் ஒவ்வொன்றும் அந்தப் பாடங்களின் ஆசிரியர்களால் பார்க்கப்பட்டு, திருத்தப்படுதல் வேண்டும். அதிலிருந்து ஆசிரியர்கள் தவறக்கூடாது. இவ்வாறு வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் சகல பாடசாலைகளுக்கும் வலயக் கல்வி அலுவலகங்கள் ஊடாக சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அதில் உள்ளதாவது:

வகுப்பறைப் பதிவேடு (நீல மட்டைப் புத்தகம்) முழுமையாக நிரப்பப்பட்டிருத்தல் வேண்டும். ஆசிரியர் அறிக்கைப் புத்தகம் முழுமையாக பேணப்பட வேண்டும். அதிபர் அறிக்கைப் புத்தகம் முழுமையாகப் பேணப்பட வேண்டும். பாடசாலைகளின் உள்ளக மதிப்பீடு மற்றும் ஆசிரிய ஆலோசகர்களின் பாடசாலைத் தரிசிப்புக்கள் போன்ற விடயங்கள் இவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

பாடசாலையில் மாணவர்களின் பயிற்சிக் கொப்பிகள் அந்தந்த வகுப்புகளின் பாடங்களில் ஆசிரியர்களால் திருத்தப்படுதல் அவசியமானது. ஆவை மேலதிகாரிகளால் மேற்பார்வை செய்யப்படுதல் வேண்டும். இதன்மூலம் மாகாண, வலய, கோட்ட, பாடசாலை மட்டச் செயற்பாடுகளை வினைத்திறனாகவும் விளைதிறன் மிக்கதாகவும் மாற்றவேண்டும் என்றுள்ளது.

வகுப்புகளில் பெரும்பாலான மாணவர்களின் பாடக்கொப்பிகள் குறித்த பாடங்களின் ஆசிரியர்களால் பார்வையிடப்படுகிறபோதும், திருத்தப்படுகிறபோதும் குறிப்பிட்ட சிலரது பாடக்கொப்பிகள் திருத்தப்படுவதில்லை என்று தெரியவந்துள்ளது. ஆசிரியர்களால் கவனிக்கப்படாத மாணவர்கள் உரிய முன்னேற்றத்தை அடையத் தவறிவிடுகின்றனர் என்பது தெரியவந்துள்ளது. அதனால் இந்த அறிவுறுத்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று வடக்கு மாகாணக் கல்வித் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts: