நாலாம் திகதிக்குப் பின்னரும் அரசியல் நெருக்கடி நீடிக்க வாய்ப்பு!

Monday, April 2nd, 2018

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றியடைந்தாலோ அல்லது தோல்வியடைந்தாலோ தெற்கில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் தொடருமென்றே அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பொதுத்தேர்தல் நடைபெற்று ஓராண்டுக்குப் பின்னர் நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான அதிகாரம் 19 ஆவது திருத்தச்சட்டத்தின் மூலம் அரச தலைவரிடமிருந்து பறிக்கப்பட்டது. நான்கரை ஆண்டுகள் சென்ற பின்னரே சபையின் அனுமதியுடன் அரச தலைவரால் நாடாளுமன்றத்தைக் கலைக்கமுடியும்.

இதனால் உடனடியாக பொதுத்தேர்தலொன்று நடைபெறுவதற்கான வாய்ப்பில்லை. அதுவரையில் அரசியல் குழப்பம் தொடருமென்றே அரசியல் ஆய்வாளர்களாலும் விமர்சகர்களாலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டுவரை கூட்டு அரசின் பயணம் தொடருமென எதிர்பார்க்கப்பட்டபோதிலும் எதிர்வரும் 4 ஆம் திகதியுடன் அது முடிவுக்கு வருமென்றே சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.

ரணிலுக்கு எதிராக கூட்டு எதிரணியால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி பெறும் பட்சத்தில் அதற்கு ஆதரவளித்த சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் மகிந்த அணியுடன் கைகோர்த்து எதிரணியில் அமர்வார்கள். அரசின் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலமும் இல்லாது போகும்.

சாதாரண பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க ஐக்கிய தேசியக் கட்சி முற்படும். இதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு கோரப்படும். அவ்வாறில்லாவிட்டால் ஜனாதிபதி மைத்திரி அணியில் அதிருப்தி நிலையில் இருக்கும் உறுப்பினர்களை ஐக்கிய தேசியக் கட்சி வளைத்துப் போடக்கூடும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts:

பாதுகாப்பான முறையில் எடுத்துவரப்படவில்லை: கொழும்பிலிருந்து வந்த தபால்களை விநியோகிக்க மறுத்து யாழ் த...
முதலாவது தடுப்பூசியை பெற்றுக்கொண்ட அனைவருக்கும் இரண்டாவது தடுப்பூசியை உரிய காலத்தில் பெற்றுக்கொடுங்க...
குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு சீன அரசாங்கத்தினால் வீட்டுத் திட்டம் - அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக...