நந்திக்கடல், நாயாற்றை ஆழமாக்குவதற்கு திணைக்களத்தின் அனுமதி பெறவேண்டும் – முல்லை மாவட்ட அரச அதிபர்!

Saturday, September 15th, 2018

நந்திக்கடல் மற்றும் நாயாற்று சிறுகடல் பகுதிகளை ஆழப்படுத்துவதற்கு திணைக்களங்களின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொண்டு ஆழமாக்கும் திட்டத்தை செயற்படுத்த வேண்டியுள்ளது என முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வரட்சியினால் ஏற்பட்ட அதிக வெப்பம் காரணமாகவே நந்திக்கடல் பகுதியில் கடந்த வருடம் போன்று மீன்கள் உயிரிழந்துள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு நந்திக்கடல் பகுதியில் நேற்று முன்தினம் பெருமளவான மீன்கள் இறந்து கரையொதுங்கியுள்ளதுடன் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுகின்றது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் நந்திக்கடல் மற்றும் நாயாற்று சிறுகடல் பகுதிகளை ஆழப்படுத்துவதற்கு இந்த வருட வரவு – செலவுத் திட்டத்தின் கீழ் நிதி கிடைக்கப்பெற்றுள்ளது.

இதனை ஆழப்படுத்துவதற்கு சில தடைகள் காணப்படுகின்றன.

அதாவது வனஜீவராசி திணைக்களத்தினால் நாயாறு மற்றும் நந்திக்கடல் ஆகிய பிரதேசங்கள் தேசிய பாதுகாப்பிற்குரிய பிரதேசங்களாக பிரகடனப்படுத்தப்பட்டிருப்பதால் அந்த திணைக்களங்களின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொண்டு இத் திட்டத்தை செயற்படுத்த வேண்டியுள்ளது.

இது தொடர்பான கடந்த மாதத்தில் கூட்டம் ஒன்றை கூடி உரிய திணைக்களங்களுடன் கலந்துரையாடி தீர்மானம் எடுத்துள்ளோம்.

மீளவும் இதனை செயற்படுத்தலாம் என்பது தொடர்பில் ஆராய்ந்து இந்த வருடத்தில் இதனை செய்வதற்கு எண்ணியிருக்கின்றோம் அல்லது அடுத்த வருடத்தில் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணக்கூடியதாக இருக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: