திருடர்களுக்கு தண்டனை நிச்சயம் – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன!  

Friday, January 19th, 2018

பிணைமுறி விசாரணை அறிக்கையிலும் மகிந்த காலத்து ஊழல் மோசடி அறிக்கையிலும் முன்வைக்கப்பட்ட நடவடிக்கைகளையும் உரியமுறையில் நடைமுறைப்படுத்தித் திருடர்களுக்குத் தண்டனை வழங்கவும் திருடப்பட்ட மக்கள் பணத்தை மீண்டும் அறவிடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

எல்பிடிய பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

அரசியல் விரோதிகள் எதனைக் கூறியபோதும் நான் நியமித்த ஆணைக்குழு இந்த நாட்டில் இதுவரையில் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களில் மிகவும் தூய்மையாகவும் வெற்றிகரமாகவும் செயற்பட்ட ஆணைக்குழுவாகும். ஆணைக்குழுவின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு மூன்று புதிய சட்டங்களை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மீண்டும் மத்திய வங்கியில் அத்தகைய ஊழல், மோசடி நடைபெறாதிருப்பதை உறுதி செய்தல், தேவையான புதிய சட்டங்களை ஆக்குதல், களவாடப்பட்ட மக்கள் பணத்தை உடனடியாக மீண்டும் பெற்றுக் கொள்ளுதல் போன்றனவே அவையாகும்.

இலஞ்சம், ஊழல், மோசடி விசாரணைச் சட்டத்தைத் திருத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது நிறைவடைந்துள்ளன. அமைச்சரவைக் கூட்டத்தில் நான் உறுப்பினர்களுக்குச் சிறப்பு உரை நிகழ்த்தினேன். மக்களின் பணத்தைத் திருடுதல், அரச சொத்துக்களை முறையற்றுப் பயன்படுத்துதல், மக்களுக்கு தொந்தரவுகளை ஏற்படுத்துதல், தேசவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுதல் போன்ற பாவக் காரியங்களின் விளைவுகளை விளக்கியதுடன், அவற்றிலிருந்து விலகி முன்னோக்கிச் செல்ல வேண்டியதன் தேவையைச் சுட்டிக்காட்டினேன். ஏதிர்வரும் 10 ஆம் திகதி உள்ளுராட்சித் தேர்தலில் அனைவரிடமும் எதிர்பார்ப்பதும் அத்தகைய தூய ஆட்சியையேயாகும் என்றார்.

Related posts: