கைகலப்புக் காரணமாகத்தான் சிறை வாகனம் சேதமடைந்தது – சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மது அருந்தச் சென்றனர் என்று குற்றச்சாட்டு!

Friday, May 4th, 2018

யாழ்ப்பாண சிறைச்சாலை ஜெயிலர் ஒருவர் உட்பட 3 சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமகன்களுக்கு இடையே மதுபான விடுதியொன்றில் சினிமா பாணியில் கைகலப்பு இடம்பெற்றது.

அதன்போதே சிறைச்சாலை வாகனம் சேதமாக்கப்பட்டது என்று யாழ்ப்பாணம் நீதிவான் மன்றில் நேற்றுத் தெரிவிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் கே.கே.எஸ் வீதியில் சுற்று வட்டத்துக்கு அருகில் அமைந்திருக்கின்ற மதுபான விடுதியிலேயே இந்தக் கைகலப்பு கடந்த மாதம் 27 ஆம் திகதி இடம்பெற்றது. யாழ்ப்பாணம் சிறைச்சாலை வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக சிறைச்சாலை ஜெயிலர் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

அதனால் வாகனம் மீது தாக்குதல் நடத்தினார் என்ற குற்றச்சாட்டில் ஒருவரைப் பொலிஸார் கைது செய்தனர். அவர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

சந்தேகநபர் சார்பில் அவரது சட்டத்தரணி நகர்த்தல் பத்திரம் சமர்ப்பித்தார். அந்த வழக்கு நீதிமன்றில் நேற்று விசாரணைக்கு வந்தது. யாழ்ப்பாணம் நீதிமன்ற மேலதிக நீதிவான் திருமதி காயத்திரி சைலவன் முன்னிலையில் விசாரணை இடம்பெற்றது. சந்தேக நபரும் அவரது நண்பர்கள் சிலரும் யாழ்ப்பாணம் கே.கே.எஸ் வீதியிலுள்ள மதுபான விடுதியில் அன்றைய தினம் மது அருந்திக்கொண்டிருந்தனர்.

அங்கு மது அருந்த வந்த யாழ்ப்பாணம் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மூவருக்கும் சந்தேகநபருக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டு கைகலப்பாக மாறியது என்று சட்டத்தரணி குற்றஞ்சாட்டினார்.

அதனால் இரு தரப்பும் மேல் மாடியிலிருந்து தாக்குதலில் ஈடுபட்டவாறு இறங்கி வந்து வீதிவரை கைகலப்பில் ஈடுபட்டனர். அதன்போதே சிறைச்சாலை வாகனத்தின் கண்ணாடி உடைந்தது.

சம்பவ இடத்துக்கு சிறப்பு அதிரடிப் படையினர் வந்தபோது ஏனையோர் தப்பிச்சென்று விட சந்தேகநபர் மாத்திரம் கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவங்களை நிரூபிப்பதற்கு மதுபான விடுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கமராவின் பதிவுகள் உள்ளன.

சந்தேகநபர் முறைப்பாட்டாளரான சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் பொறுப்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அதனால் அவருக்கு அச்சுறுத்தல் உண்டு. எனவே சந்தேகநபரை பிணையில் விடுவிக்க வேண்டும் என்று சந்தேகநபரின் சட்டத்தரணி மன்றில் சமர்ப்பணம் செய்தார்.

இதேவேளை மன்றில் முற்பட்டிருந்த பொலிஸார் இரவு நேரம் மனநோயால் பாதிக்கப்பட்ட கைதியொருவரை தெல்லிப்பழை மருத்துவமனைக்குக் கொண்டுசென்ற சிறைச்சாலை வாகனமே வீதியில் நின்ற மதுபோதைக் கும்பலால் தாக்கப்பட்டது என்று குறிப்பிட்டனர்.

இரு தரப்பு சமர்ப்பணங்களையும் ஆராய்ந்த மேலதிக நீதிவான், முறைப்பாட்டாளரின் பாதுகாப்பில் சந்தேகநபரைத் தடுத்து வைப்பது அச்சுறுத்தலானது எனச் சுட்டிக்காட்டி அவரை பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.

சிறைச்சாலை ஜெயிலர் உள்பட 3 உத்தியோகத்தர்கள் சிறைச்சாலை வாகனத்தில் மது அருந்தச் சென்றதாக கூறப்படும் சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Related posts:

ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் போதைப்பொருட்களுக்கு அடிமை - புனர்வாழ்வளிக்கும் தேசிய அதிகார சபையின் ஆ...
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நாளை இலங்கைக்கு வருகை - இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் கைச்...
மாகாணங்களுக்கு இடையில் பயணங்களை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளவர்கள், சுகாதார வழிகாட்டல்களை உரியவா...