கே.கே.எஸ் வீதியினூடான மாணவர் பேருந்துகளுக்கான சேவை நேரம் சீர்செய்யப்படும் – கோண்டாவில் சாலை தெரிவிப்பு!
Monday, March 19th, 2018
யாழ்ப்பாணம் – கே.கே.எஸ் வீதியினூடாக யாழ்ப்பாண நகரம் வரை செல்லும் பாடசாலை மாணவர்களுக்கான அரச பேருந்தின் சேவை நேரத்தினை ஒழுங்கு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோண்டாவில் பேருந்து நிலைய சேவை வழங்கும் பிரிவு தெரிவித்துள்ளது.
காங்கேசன்துறையில் இருந்து கே.கே.எஸ் சாலையின் ஊடாக பாடசாலை மாணவர்களுக்கான சேவையை இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து ஒன்று மேற்கொண்டு வருகின்றது.
காலை 6.40 மணியளவில் சேவைகளை ஆரம்பித்து படிப்படியாக மாணவர்களை ஏற்றிச்சென்று பாடசாலைகளில் இறக்கி வருகின்றது. இவ்வாறு செல்லும் போது யாழ்ப்பாண நகரில் உள்ள பாடசாலைகளுக்கு மாணவர்களை இறக்கி விடும் போது 7.45 மணியைக் கடந்து விடுகிறது.
பாடசாலைகளின் கல்விச் செயற்பாடுகள் அனைத்தும் 7.30 மணிக்கு ஆரம்பமாகின்ற நிலையில் நேரம் தாழ்த்தி செல்வதால் கற்றல் நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதாக மாணவர்களுடன் பெற்றோரும்; கவலை தெரிவித்தனர்.
இந்நிலையில் பாடசாலை மாணவர்களின் நன்மை கருதி ஆண், பெண் மாணவர்களுக்கான தனியான பேருந்துகள் சேவையில் ஈடுபடுகின்றது என்றும் கே.கே.எஸ் வீதியில் பயணிக்கும் போது அதிகளவான பாடசாலைகள் உள்ளதால் மாணவர்களைப் பொறுமையாக ஏற்றி இறக்குவது அவசியம்.
ஆகவே மாணவர்களின் பாடசாலை ஆரம்ப நேரத்தை கருத்தில் கொண்டு ஓர் இரு நாட்களுக்குள் மாணவர்களுக்கு சாதகமான நேரத்தில் பயணத்தை மேற்கொள்ளுவதற்கு வழிவகைகள் செய்வதற்கு உரியவர்களுக்கு தகவல் வழங்கப்படும் என கோண்டாவில் பேருந்து நிலைய சேவை வழங்கும் பிரிவை தெரிவித்துள்ளது.
Related posts: