எவரும் எந்தச் செயலகத்திலும் பிறப்புச் சான்றிதழைப் பெறலாம்; யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் அறிவித்துள்ளது!

இலங்கையின் எப்பாகத்திலும் பிறந்த எந்தவொரு குடிமகனும் தனக்கு அருகிலுள்ள பிரதேச செயலகத்தில் பிறப்புச் சான்றிதழைப் பெற்றுக்கொள்ள முடியும் என யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் அறிவித்துள்ளது. பிறப்புச் சான்றிதழ் ஒருவருக்கான அடிப்படை சட்ட ஆவணமாகும். ஒருவரின் பிறப்பை உறுதிப்படுத்தி அவர் எந்த நாட்டின் பிரஜை என்பதையும் நிரூபிப்பதுக்கு அதுதேவை.
ஆடையாள அட்டை எடுக்க, திருமணத்தைப் பதிவு செய்ய, பாடசாலைகளில் குழந்தைகளைச் சேர்க்க, கடவுச்சீட்டு எடுக்க, குடும்ப அட்டையில் பெயர் சேர்க்க, வயதை நிரூபிக்கவென பல தேவைகளுக்கு இந்த ஆவணம் இன்றியமையாதது ஆகும். இவை மாத்திரமல்ல ஒருவர் இறந்த பின்னரும் அவருடைய சந்ததிகளின் பல தேவைகளுக்கும் இது தேவைப்படுகின்றது.
முன்னர் மக்கள் தமது பிறப்புச் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்வதில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி இருந்தனர். தாம் பிறந்த இடங்களுக்குச் சென்றே பிறப்புச் சான்றிதழ்களைப் பெற்று வந்தனர். இதனால் அலைச்சலுக்கும், பணச் செலவுக்கும் முகங்கொடுத்து வந்தனர். தமது காரியங்களை நிறைவேற்றுவதில் தாமதங்களையும் எதிர் கொண்டனர்.
எனினும், மேற்படி அறிவிப்பானது மக்களுக்கு ஒரு இனிப்பான செய்தியாகும். இது தொடர்பில் மாவட்டச் செயலகம் மேலும் தெரிவித்திருப்பதாவது:
எந்த மாவட்டத்தில் பிறந்தவர்களாயினும் தமக்கு அருகில் உள்ள பிரதேச செயலகத்தில் பிறப்புச் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளும் வகையில் தற்போது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் பிறப்பு நிகழ்ந்த மாவட்டச் செயலகத்திலும், பின்னர் மாவட்டத்தின் குறித்த பிரதேச செயலகங்களிலும் பெற்றுக் கொள்ளும் நடைமுறையே இருந்துவந்தது. தற்போது பிறப்பு நிகழ்ந்த மாகாணத்தின் எப்பகுதியிலும் சான்றிதழைப் பெற்றுக்கொள்ளும் நடைமுறை உள்ளது.
இருப்பினும், இனிமேல் நாட்டின் எப்பாகத்தில் பிறந்தவர்களும் நாட்டின் எந்தப் பிரதேச செயலகத்திலும் சான்றிதழைப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|