பலாலியில் விமான சேவையை ஆரம்பிக்க இந்திய நிறுவனம் விருப்பம்!

Saturday, August 24th, 2019


இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமான பலாலியில் விமான சேவையினை மேற்கொள்வதற்கு பல விமான நிறுவனங்கள் விருப்பம் வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிவில் விமானசேவை அதிகார சபையின், விமான போக்குவரத்து மற்றும் பொருளாதார ஒழுங்கமைப்பு பணிப்பாளர் ரேஹான் வன்னியப்பா கருத்து தெரிவிக்கையில், பலாலி விமான நிலையத்துக்கான சேவைகளை ஆரம்பிக்க பல இந்திய விமான நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. குறிப்பாக அலையன்ஸ் எயர் நிறுவனமும் தனது விருப்பத்தை வெளியிட்டுள்ளது.

குறிப்பாக பலாலி விமான நிலையத்தில் இருந்து தென்னிந்தியாவுக்கு விமான சேவைகளை நடத்துவதற்கு அது தன்னுடைய விருப்பத்தை வெளியிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, வரும் ஒக்ரோபர் மாதம் இங்கிருந்து விமான சேவைகள் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

எயர் இந்தியா நிறுவனத்தின் துணை நிறுவனமான, அலையன்ஸ் எயர் நிறுவனம், இந்தியாவில் 54 நகரங்களை இணைக்கும் வகையில், உள்நாட்டு விமான சேவைகளை நடத்தி வருகிறது.இந்த நிறுவனத்திடம், பலாலி விமான நிலையத்துக்கு இயக்கக் கூடிய, 70 – 72 ஆசனங்களைக் கொண்ட ATR 72-600 ரகத்தைச் சேர்ந்த 18 விமானங்களும், 48 ஆசனங்களைக் கொண்ட ஒரு ATR 42-320 விமானமும் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பலாலி விமான நிலையத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு முகவர் அமைப்புகளான குடிவரவு மற்றும் சுங்கத் திணைக்களங்களின் செயற்பாடுகளை ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

இந்தநிலையில், குறுகிய காலஅவகாசத்தில் பலாலியில் குடிவரவு மற்றும் சுங்க பணிகளை ஆரம்பிக்க முடியும் என, குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் பி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். பலாலியில் செயற்பாடுகளை ஆரம்பிக்குமாறு கேட்கப்பட்டுள்ளது. பலாலி் விமான நிலையம் செயற்பாட்டுக்கு வரும் போது நாங்களும் எமது பணிகளை ஆரம்பிக்கத் தயாராக இருப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

போயிங் B737 மற்றும் எயர்பஸ் A320 விமானங்களை இயக்கக் கூடிய வகையில், மூன்றாவது அனைத்துலக விமான நிலையமாக, பலாலி விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

Related posts: