எச்சரிக்கைகளால் அனர்த்தத்தை தடுக்க முடியாதுபோனாலும் இழப்புகளை தவிர்த்துக்கொள்ளலாம் –அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் சூரிய ராஜா தெரிவிப்பு!

Friday, December 24th, 2021

வானிலை தொடர்பான எச்சரிக்கைகளை மக்கள் தமக்கான எச்சரிக்கை என கவனத்தில் எடுக்காமையே அனர்த்த காலங்களில் இழப்புகளை சந்திக்க நேரிடுகின்றது என தெரிவித்துள்ள யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் சூரியராஜா தவறான செய்திகளை சில சமூக ஊடகங்கள் பெரிதாக பதிவிடுவதால்தான் மக்கள் எச்சரிக்கைகளை உதாசீனம் செய்ய நேரிடுகிறது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுக்கும் அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கும் இடையிலான கலந்துரையாடல் நிகழ்வில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் –

யாழ்மாவட்டத்தில் இவ் வருடம் 2021 அதிகூடிய மழைவீழ்ச்சியாக 1963.4 மிமீ மழைவீழ்ச்சி கிடைத்துள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் சூரியராஜா தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்டத்தில் 1913 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஒரே வருடத்தில் கிடைக்கப் பெற்ற அதிகூடிய மழைவீழ்ச்சியாக இவ் வருடம் 2000 மிமீ நெருங்குகிறது.

யாழ் மாவட்டத்தில் 1913 ஆண்டு சுமார் 1840 மிமீ மழைவீழ்ச்சி பதிவாகிய நிலையில் 2015 ஆம் ஆண்டு 1836.5 மிமீ மழைவீழ்ச்சி பதிவாகியிருந்தது.

2005 ஆம் ஆண்டு 13 ஆம் இலக்க சட்டத்தின் பிரகாரம் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான சட்ட ஏற்பாடுகள் வரையறுக்கப்பட்ட நிலையில் 21 அனர்த்தங்கள் இலங்கை அனர்த்த முகாமைத்துவப் பிரிவினால் கையாளுகின்ற விடையதானங்களாக வரையறுக்கப்பட்டுள்ளது.

யாழ்மவட்டத்தில்  இடம் பெறுகின்ற அனர்த்தங்களாக  வெள்ளப்பெருக்கு வறட்சி மற்றும் மருதங்கேணி பகுதியில் இடம் பெறுகின்ற சவுக்கு காட்டு தீ என்பன அனர்த்தங்களில் அடங்குகின்றன.

யாழ் மாவட்டத்தில் ஏற்பட்ட புயல் பாதிப்புகளாக 2008 ஆம் ஆண்டு நிஷா புயல் 2020 ஆம் ஆண்டு புரவி, 2020 ஆம் ஆண்டு நிவர், 2020 ஆம் ஆண்டு அம்பன் புயல் பாதிப்புகள் ஏற்பட்டது.

இவ் வருடம் யாழ் மாவட்டத்தில் பெய்த அதிகூடிய மழை வீழ்ச்சியினால் தொண்டமனாறு அரியாலை அராலி தடுப்பணைகள் திறக்கப்பட்ட நீர் வெளியேற்றப்பட்ட போதும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் உள்ள நீர் புகுந்ததால் மக்கள் சௌகரியத்துக்கு உள்ளாக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

இவ்வாற இடர் காலநிலைகளில் மக்களுக்கு முனாகூட்டியே அனர்த்தம் தொடர்பில் தகவல்களை வழங்குவதற்காக அனர்த்த முகாமைத்துவ பிரிவினால் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அனர்த்த முன்னெச்சரிக்கை நிலையங்கள் ஊடாக பொதுமக்களுக்கு தகவல் வழங்குவதற்கு யாழ் மாவட்டத்தில் 5 அனர் முன்னெச்சரிக்கைக் கோபுரங்கள் அமைக்கப்பட்டு தகவல்கள் வழங்கப்படு வருகின்ற நிலையில் மக்களிடம் தகவல்களைக் கொண்டு சேர்ப்பதற்கு ஊடகங்களும் பெரும் பங்காற்றுகின்றது.

2005 ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தினால் இலங்கையில் 35ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்கள் காவு கொள்ளப்பட்டன.

சுமாத்திரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் இரண்டு மணித்தியால இடைவெளியில் சுனாமியாக மாற்றமடைந்து இலங்கையை தாக்கியதை அனைவரும் மறக்க முடியாது. அன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிகளவிலான உயிரிழப்புக்களை தடுக்கக் கூடியதாக இருந்தது.

ஆகவே அனர்த்தங்கள் தொடர்பாக முன்னெச்சரிக்கையுடன் செயற்படுவதன் மூலம் பாரிய உயிர சேதங்களை தடுக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்

இந்நிகழ்வில் யாழ் பிராந்திய வளிமண்டல திணைக்கப் பொறுப்பதிகாரி பிரதீபன் அனர்த்த முகாமைத்துவ பிரிவு உத்தியோகத்தர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Related posts: