இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவருக்கான வாக்குப்பதிவு இன்று!

Monday, July 17th, 2017

இந்தியாவின் 14ஆவது ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு இன்று நடைபெறுகிறது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் எதிர்வரும் 24ஆம் திகதி நிறைவடையவுள்ள நிலையில் அடுத்த ஜனாதிபதிக்கான தேர்தலை இன்று நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணையகம் வலியுறுத்தியிருந்தது.

இத் தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதா கூட்டணியின் வேட்பாளராக ராம்நாத் கோவிந்தும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக மீரா குமாரும் போட்டியிடுகின்றனர். டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்திலும் தமிழ்நாட்டில் சென்னையில் அமைந்துள்ள சட்டசபை வளாத்திலும் அதேபோன்று பிற மாநிலங்களில் உள்ள சட்டசபை வளாகங்களிலும் மொத்தமாக 32 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 10 மணிக்கு ஆரம்பமாகியுள்ள வாக்குப்பதிவு மாலை 5 மணிவரை நடைபெறவுள்ளதோடு 33 மேற்பார்வையாளர்கள் தேர்தல் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

ஜனாதிபதி தேர்தலுடன் இன்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரும் ஆரம்பமாகின்ற நிலையில் வாக்குச் சாவடிகள் மற்றும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

இத் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் வாக்களிக்கும் நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வாக்குச் சீட்டு பச்சை நிறத்திலும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான வாக்குச்சீட்டு இளஞ்சிவப்பு நிறத்திலும் அச்சிடப்பட்டுள்ளன.

அத்தோடு வாக்காளர்கள் பயன்படுத்துவதற்கென தொடர் எண்களைக் கொண்ட பிரத்தியேக பேனாவை தேர்தல் ஆணையகம் வழங்குகிறது. அரியானா மாநிலத்தில் கடந்த வருடம் நடைபெற்ற டெல்லி மேற்சபை தேர்தலில் பயன்படுத்தப்பட்ட பேனா மையினால் ஏற்பட்ட சர்ச்சையால் இம்முறை இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வாக்கெண்ணும் பணிகள் எதிர்வரும் 20ஆம் திகதி காலை 11 மணிக்கு ஆரம்பமாகி அன்றைய தினமே முடிவும் வெளியிடப்படும். புதிய ஜனாதிபதி எதிர்வரும் 25ஆம் திகதி பதவியேற்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: