தடுப்பூசிக்கு பற்றாக்குறை – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முக்கிய பேச்சு!

Saturday, May 8th, 2021

இலங்கையில் அஸ்ராசெனகா தடுப்பூசி மருந்திற்கு ஏற்பட்ட பற்றாக்குறை குறித்து உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைமை அதிகாரியுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

இதன்போது இலங்கைக்கு தேவையான அஸ்ராசெனகா தடுப்பூசி மருந்துகளை பெற்றுக்கொடுக்க உலக சுகாதார ஸ்தாபனம் நடவடிக்கை எடுக்கும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் டெட்ரோஸ் சடானம் கெப்ரியேசஸ் மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஆகியோருக்கு இடையில் ஷும் தொழில்நுட்பம் ஊடாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இதன்போது இலங்கைக்கு தேவையான 06 இலட்சம் அஸ்ராசெனகா தடுப்பூசி மருந்துகளை பெற்றுக் கொடுப்பதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் முயற்சிகளை மேற்கொள்ளும் என ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டார்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகத்துடன் இடம்பெற்ற சந்திப்பை தொடர்ந்து வெளியிட்ட டுவிட்டர் பதிவில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

இதன்போது சினோஃபாம் தடுப்பூசி மருந்துக்கு இன்னும் 02 அல்லது 03 நாட்களில் அங்கீகாரம் வழங்கப்படும் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

உலக சுகாதார ஸ்தாபனம் அங்கீகாரம் வழங்கிய பின்னர், தற்போது கையிருப்பில் உள்ள 06 இலட்சம் சினோஃபாம் தடுப்பூசி மருந்தை இலங்கை மக்களுக்கு வழங்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் ஏற்பட்ட கொரோனா தொற்றின் முதல் அலைத் தாக்கத்தை கட்டுப்படுத்தியமை தொடர்பில் பாராட்டைத் தெரிவித்த டெட்ரோஸ் சடானம் கெப்ரியேசஸ் , தற்போது ஏற்பட்டுள்ள தொற்று பரவலும் விரைவில் கட்டுப்பாட்டிற்குள் வரும் என நம்பிக்கை வெளியிட்டதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மேலும் கூறியுள்ளார்.

இலங்கைக்கு வழங்கப்படும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிராந்திய மற்றும் கொழும்பு அலுவலக மட்ட உதவிகளுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தனது பாராட்டைத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே சினோஃபாம் தடுப்பூசியின் பரீட்சார்த்த மருத்துவ பரிசோதனைகள் தொடர்பில் சீன அரசாங்கம் வழங்கியுள்ள சில தரவுகள் குறித்து உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணர்கள் நம்பிக்கையீனத்தை வெளிப்படுத்தியுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

சில பாரதூரமான பக்கவிளைவுகள் குறித்து தரவுகள் போதுமானதாக இல்லை என்ற போதிலும் ஒட்டுமொத்தமாக நோக்கும் போது சினோஃபாம் தடுப்பூசி மருந்து நோயை கட்டுப்படுத்தும் திறன் கொண்டது என உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Related posts: