ஆவா என்பது புலிகள் இல்லை: இராணுவத் தளபதி

Monday, August 14th, 2017

தற்போது யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் ஆவா குழுவினர் என்பது புலிகள் இல்லை எனவும், வடக்கின் தாக்குதல்களுக்கு புலிகளின் பெயர் உபயோகப்படுத்தப்படுவது ஏற்கத் தகாதது என்றும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

வடக்கின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவித்த அவர், ”வடக்கில் அண்மைக்காலமாக அசம்பாவித சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையில், இவ்வாறான சம்பங்களுக்கு புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளே காரணம் என தவறான கருத்து மக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வருகிறது.

ஆனால், வடக்கில் இவ்வாறான தாக்குதல்களை மேற்கொள்பவர்கள் சட்டத்தை மதிக்காது செயற்படும் குழுக்களே. இவ்வாறு சட்டத்தை மதிக்காது செயற்படுவோரை முன்னாள் போராளிகள் என கூறுவது ஏற்க முடியாது.

வடக்கில் நிகழும் இவ்வாறான செயற்பாடுகள் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையாது. வடக்கு, கிழக்கின் பாதுகாப்பு தொடர்பில் இராணுவம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: