அரச நிறுவனங்களால் 50 பில்லியன் நட்டம் –  சபாநாயகர்!

Wednesday, June 20th, 2018

அரசாங்க நிறுவனங்கள் கடந்த வருடத்தில் 50 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நட்டத்தை எதிர்கொண்டிருப்பதாக கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லையில் நேற்று முன்தினம் நடைபெற்ற நாடாளுமன்ற ஊடகவியலாளர்களை விழிப்புணர்வூட்டும் செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே சபாநாயகர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அரசாங்க நிறுவனங்கள் எதிர்கொண்ட பில்லியன் கணக்கான நட்டம் குறித்து பொதுமக்கள் அதிக கவனம் செலுத்தவில்லை.

எனினும் 118 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் குறித்த விடயங்களே மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

2014 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட  மதிப்பீட்டில் அரசாங்கத் திணைக்களங்களினால் மேற்கொள்ளப்பட்ட செலவினங்களில் 40 வீதம் வீண்விரயமாகும்.

இவ்வாறான நிலையில் கோப் குழு மற்றும் அரச கணக்குக்குழு போன்றன அரசாங்க நிறுவனங்களில் ஏற்படக்கூடிய நட்டங்கள் மற்றும் வீண் விரயங்களை ஊடகங்கள் மூலம் வெளிச்சத்துக்குக் கொண்டு வருகின்றன.

ஒழுங்கான பொது நிதி முகாமைத்துவத்தை அரசாங்க நிறுவனங்கள் கடைப்பிடித்திருந்தால் இந்தப் பில்லியன் ரூபாய்களை பொது மக்களின் நலன்புரிக்கு அல்லது பொருளாதார அபிவிருத்திக்கு பயன்படுத்தியிருக்க முடியும் என்று சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

Related posts: