அதிகாரிகள் அசமந்தம்: பற்றி எரியும் குப்பை மேட்டால் மக்கள் அவதி!

Friday, October 13th, 2017

யாழ்ப்பாணத்தின் கழிவுகள் கொட்டப்படும் நகருக்கு அருகில் உள்ள காக்கைதீவு குப்பை மேடு கடந்த மூன்று தினங்களாக முழாசி எரிகின்றது. பற்றியெரியும் தீயால் அந்தப் பகுதியெங்கும் பெரும் புகைமண்டலம் சூழ்ந்துள்ளது. இதனால் காக்கைதீவு பொன்னாலை வீதியில் மக்கள் போக்குவரத்துச் செய்வதற்குச் சிரமப்பட வேண்டியுள்ளது.

யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு உட்பட்ட பிரதேசத்தில் சேகரிக்கப்படும் குப்பைக் கழிவு யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை வீதியிலுள்ள காக்கை தீவிலேயே கொட்டப்படுகிறது. அந்தக் குப்பைமேடு கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் கொழுந்து விட்டு எரிகின்றது.

சுவாலைகள் பல கிலோமீற்றர் தூரத்துக்குமப்பால் தெரியும் வகையில் தீ முழாசி எரிவதுடன் அங்கே கொட்டப்பட்ட பிளாஸ்ரிக் கழிவுகள் தீயில் எரிந்து அவற்றில் இருந்து வெளிக்கிளம்பும் புகையானது மக்கள் சுவாசிக்க முடியாத அளவுக்கு அந்தப் பகுதி முழுவதையும் மாசுபடுத்தியுள்ளது.

புகை மண்டலத்துக்கு நடுவே இரவு நேரத்தில் வாகனங்களில் பயணிக்கவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். தீயைக் கட்டுப்படுத்துவதற்கு மாநகரசபையினர் கடந்த மூன்று நாட்களாகப் பல தடவைகள் முயன்றனர் என்ற போதும் தீயைக் கட்டுப்படுத்த முடியவில்லை எனவும் கூறப்படுகின்றது.

காக்கைதீவில் குப்பைகள் கொட்டப்படக்கூடாது எனக்கோரி மக்கள் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுத்திருந்ததுடன் நீதிமன்றில் வழக்கும் தொடரப்பட்டிருந்தது. ஆனால் நகரக் கழிவுகளைக் கொட்டுவதற்குப் பொருத்தமான வேறு இடம் இல்லை என்பதால் தொடர்ந்தும் அங்கேயே கழிவுகள் கொட்டப்படுகின்றன.

காக்கைதீவில் அளவுக்கதிகமான வாயு வெளிக்கிளம்புவதால் அது எப்போது வேண்டுமானாலும் தீப்பற்றி எரியக் கூடிய அபாயம் இருப்பதாக ஏற்கனவே எச்சரிக்கப்பட்டும் இருந்தது.

Related posts: