கிளிநொச்சியில் 3389 கடற்றொழிலாளர்கள் பல்வேறு செயற்பாடுகளினால் பாதிக்கப்பட்டுள்ளனர் – பூநகரி கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம்!

Wednesday, May 23rd, 2018

கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 128 கிலோ மீற்றர் கரையோரப் பகுதிகளில் தொழில்களில் ஈடுபட்டு வரும் மூவாயிரத்து 389 மீனவர்கள் தமது தொழில்சார் நடவடிக்கைகளில் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்வதாக பூநகரி கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம் தெரிவித்துள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள எழுபது வீதமான மக்களின் பிரதான தொழிலாக விவசாயம் காணப்படுகின்ற போதும் மொத்தமாகவுள்ள குடும்பங்களில் நான்காயிரத்து 205 இற்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.

இதில் தற்போது கரைச்சி, கண்டாவளை, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளில் உள்ள சுமார் 128 கிலோ மீற்றர் கரையோரப் பகுதிகளில் மூவாயிரத்து 389 பேர் மீன்பிடிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறு மீன்பிடியில் ஈடுபடுபவர்கள் வெளி மாவட்ட மீனவர்களின் அத்துமீறிய தொழில் நடவடிக்கைகள் உள்ளிட்ட தொழில்களால் தமது தொழில் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூடுதலான கரையோரப் பகுதிகளில் இறங்குதுறைகள் இன்மை, உரிய தொழில் உபகரணங்கள் இன்மை காரணமாக தமது தொழில் நடவடிக்கைகளில் நெருக்கடிகளை எதிர்கொள்வதாக பூநகரி கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மாவட்டத்தில் உள்ள குளங்களின் கீழ் நன்னீர் மீன்பிடிகளில் ஈடுபட்டு வரும் 750 வரையான குடும்பங்களும் தற்போது நிலவும் வறட்சியின் காரணமாக குளங்களின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளமையால் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: