அதிகாரத்தை மீறிய செயற்பாடே மணல்காடுச் சம்பவம்ரு – வான் குணசேகர

Tuesday, July 11th, 2017

பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வடமராட்சி கிழக்கு மணல்காடு பகுதியில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவமானது பொலிஸார் தமது அதிகாரத்தை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தியதன் வெளிப்பாடு என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் அத்தியட்சகருமான ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

பொலிஸ் தலைமையகத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக கூறப்படும் உப பொலிஸ் பரிசோதகரும் கொல்லப்பட்ட இளைஞனும் நெல்லியடி பொலிஸ் பிரிவைச் சேர்ந்தவர்கள் ஆகையால் நெல்லியடி பிரதேசத்தில் நேற்றும் அசாதாரண சூழ்நிலை நிலவியதாக குறிப்பிட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் பயணித்த வாகனம் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டதுடன் கைதாகியுள்ள உப பொலிஸ் பரிசோகரின் வீட்டின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுளளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் கொல்லப்பட்ட இளைஞன் லொறியின் சாரதி அல்ல என்பது விசாரணைகளில் உறுதியாகியுள்ள நிலையில் லொறியின் சாரதி மற்றும் குறித்த லொறியில் பயணித்த ஏனையோர் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.  குறிப்பாக லொறியின் உரிமையாளர் ஊடாக சாரதியை கண்டறிந்து விசாரணைகளை தீவிரப்படுத்தவுள்ளதாக ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வடமராட்சி கிழக்கு மணல்காடு பகுதியில் நேற்று முன்தினம் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் 25 வயதுடைய யோகராசா தினேஷ் என்ற இளைஞன் உயிரிழந்தார். சம்பவம் தொடர்பில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: