அச்சுவேலி நெசவுத் தொழிற்சாலையை பாதிரியாரிடமிருந்து மீட்டுத் தாருங்கள் – பிரதேசத்தவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்!

இராணுவம் ஆக்கிரமித்து வைத்திருந்த அச்சுவேலி நெசவுத் தொழிற்சாலையை விடுவிக்க அதனை கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வைத்துள்ளார் என்று பிரதேச மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:
தொழிற்துறைத் திணைக்களத்துக்குச் சொந்தமான அச்சுவேலி நெசவுத் தொழிற்சாலைக் காணியை உள்நாட்டு போர் காரணமாக இலங்கை இராணுவத்தினர் தம் வசம் வைத்திருந்தனர். காலப்போக்கில் அதனை இராணுவம் தங்களின் ஆக்கிரமிப்பில் இருந்து விடுவித்தது. ஆனால் சில காலங்களிலேயே குறித்த பாதிரியார் அதனைச் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து தற்போது விடமாட்டேன் என்று அடம்பிடிக்கிறார் என்று பிரதேச மக்கள் கூறுகின்றனர்.
வடக்கு மாகாண தொழில் துறை திணைக்களத்துக்கு சொந்தமான நெசவுத் தொழிற்சாலைக் காணியில் தற்போது கிறிஸ்தவ மதத்தின் ஒரு பிரிவினரைச் சேர்ந்தவர்களின் ஆராதனை நடத்தப்பட்டு வருகின்றது. அதனை அங்கு நடத்துவதற்கு கலாசார திணைக்களத்தின் முறையான அனுமதியும் எடுக்கப்படவில்லை.
இவ்வாறு முன்னைய காலங்களில் பல தொழிலாளர்களுக்கு வாழ்வளித்த தொழிற்சாலையை இராணுவம் ஆக்கிரமித்து விடுவித்துள்ள போதிலும் குறித்த கிறிஸ்தவ பாதிரியாரின் ஆக்கிரமிப்பால் அந்தக் காணிக்கு இன்றுவரை விமோசனம் கிடைக்கவில்லை. அந்தக் காணியை மீட்டு தொழிற்சாலையை மீண்டும் இயக்க சம்பந்தப்பட்டவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்படுகிறது.
இது தொடர்பாக வடக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்களப் பணிப்பாளருடன் தெரிவிக்கையில் – எமது திணைக்களத்துக்குச் சொந்தமான தொழிற்சாலைக் காணியில் கிறிஸ்தவ அமைப்பினர் நிலை கொண்டுள்ளனர். நான் இந்தத் திணைக்களத்தின் பணிப்பாளராக நியமனம் பெற்று ஒருவார காலமே ஆகின்றது. இது தொடர்பாக கவனம் எடுத்துள்ளேன். மிக விரைவில் அந்த இடத்தை பார்வையிடுவதுடன் சட்ட விரோதமாக ஆக்கிரமித்துள்ள அந்த பாதிரியார் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளேன் என்றார்.
Related posts:
|
|