கொரோனா தாண்டவம்: நிலைகுலைந்தது அமெரிக்கா! விசா தடைவிதிக்க போவதாக ட்ரம்ப் அறிவிப்பு!

Sunday, April 12th, 2020

அமெரிக்காவிலுள்ள தங்கள் நாட்டுக் குடிமக்களை மீள அழைத்துக்கொள்ள மறுக்கும் நாடுகளின் மக்களுக்கு இனி விசா வழங்குவதில்லை என அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸின் கோரப்பிடியில் அமெரிக்கா சிக்கித்தவிக்கும் நிலையில், ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

நாள் ஒன்றுக்கு 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அங்குள்ளவர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் கடந்த மூன்று நாட்களில் 6000 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையிலேயே, அமெரிக்க ஜனாதிபதி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் பேசியுள்ள ஜனாதிபதி –

விசா தடைகள் தொடர்பாக டிசம்பர் 31ம் திகதி வரை நடைமுறையிலுள்ள வகையிலான அறிவிப்பை டிரம்ப் வெளியிட்டுள்ளார்.

தங்கள் குடிமக்களைத் திரும்ப அழைக்க மறுத்தாலோ அல்லது காரணமின்றித் தாமதித்தாலோ அந்த நாடுகள், அமெரிக்காவுக்குப் பெரும் சுகாதாரக் கேடுகளை ஏற்படுத்தியதாகக் கருதப்படும் எனக் குறிப்பிட்டுள்ளா்

உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை, வெளியுறவுத் துறை அமைச்சர்களுடன் பேசிய டிரம்ப், அமெரிக்க சட்டங்களை மீறி தங்கியுள்ள வெளிநாட்டவர்களைத் வெளியேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதனிடையே கொரோனா வைரஸ் தொற்றினால் அதிகமாக உயிரிழந்தவர்களின் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திற்கு வந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது வரையிலும் இத்தாலி முதலிடத்தில் இருந்து வந்த நிலையில், தற்போது அமெரிக்கா அந்த பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளது.

இதன்படி, கொரோனா வைரஸ் தொற்றினால் அமெரிக்காவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19,666 பேர் ஆக பதிவாகியுள்ளது. அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இத்தாலியில் 18,849 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனா தொற்றினால் 1,727,506 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 105,722 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்றினால் அமெரிக்காவில் 506,008 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கையிலும், 198 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஏழு பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களை புதைப்பதற்கான இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து, உயிரிழந்தவர்களை மொத்தமாக புதைப்பதற்கு ஹார்ட் தீவில் பாரிய குழிகள் தோண்டப்படுவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஏராளமான சவப்பெட்டிகளை வைக்கும் வகையில் தோண்டப்படும் அந்தக் குழிகள், ஆதரவற்றவர்கள் மற்றும் அடக்கம் செய்ய வசதியில்லாதவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்குப் பயன்படுத்தப்படுவதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts: