முகநூல் ஊடாக ஏற்பாடான களியாட்ட நிகழ்வு : போதைப்பொருட்களுடன் பெண்கள் உட்பட பலர் கைது – சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவிப்பு!

Monday, February 14th, 2022

கண்டியில் முகநூல் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த களியாட்ட நிகழ்வில் போதைப்பொருட்களுடன் பெண்கள் இருவர் உள்ளிட்ட 36 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

காதலர் உள்ளிட்ட தினங்களில் இளைஞர்களை இலக்காகக் கொண்டு இவ்வாறான களியாட்ட நிகழ்வுகள் போதைப்பொருள் விற்பனையாளர்களால் ஏற்பாடு செய்யப்படும் என்பதால் , அவை குறித்து விசேட கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு சகல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் –

அநுராதபுரம் குற்ற விசாரணைப்பிரிவினரால் போதைப் பொருள் உபயோகத்துடன் களியாட்ட நிகழ்வு  இடம்பெற்ற இடமொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

இதன்போது பல்வேறு வகையான போதைப்பொருள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இதே போன்று கண்டியில் முகநூல் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த களியாட்ட நிகழ்வொன்று சுற்றிவளைக்கப்பட்டு பெண்கள் இருவர் உள்ளிட்ட 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் போதும் பல போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கடந்த காலங்களில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இவ்வாறான களியாட்ட நிகழ்வுகளை முன்னெடுப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

எனினும் தற்போது அந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் போதைப்பொருள் வியாபாரிகளால் இவ்வாறான களியாட்ட நிகழ்வுகளுக்கு போதைப்பொருள் விநியோகிக்கப்படுவதோடு , அதனை இலக்காகக் கொண்டு இவ்வாறான நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதும் இனங்காணப்பட்டுள்ளது.

குறிப்பாக காதலர் தினத்தை முன்னிட்டு இவ்வாறான நபர்களால் இளைஞர்களை இலக்கு வைத்து களியாட்ட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படக் கூடும். இவ்வாறு சந்தேகத்திற்கிடமான முறையில் ஏதேனும் களியாட்ட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்குமாயின் அவை தொடர்பான கண்காணிப்புக்களை முன்னெடுக்குமாறு சகல பொலிஸ் பிரிவுகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவ்வாறான நிகழ்வுகள் தொடர்பில் தகவல்களை துரிதமாக இனங்காணுமாறும் புலனாய்வு பிரிவினருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இளம் பிள்ளைகளின் பெற்றோர் அவர்களது பிள்ளைகள் குறித்து அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம். போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் தொடர்பான சுற்றிவளைப்புக்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: