மாகாணசபையை நடத்தத் தெரியாதவர்கள் உள்ளூராட்சி அதிகாரங்களை கேட்கிறார்கள் – மக்களே சரியான பாடத்தை புகட்டுங்கள் – தோழர் ஸ்ராலின்!+-

Friday, February 2nd, 2018

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக தமிழ் மக்களுக்குக் கிடைத்த அரிய வாய்ப்பான இணைந்த வடக்குக் கிழக்கு அரசை தமது கையாலாகாத்தனங்களால் நிர்வகிக்கத் தெரியாது நாடுவிட்டு ஓடியவர்கள் இன்று மீண்டும் வந்து தமிழ் மக்களிடம் அதிகாரத்தை தாருங்கள் என்று கேட்பது மக்களின் நலனுக்காக அன்றி தமது சுயநலன்களுக்காக மட்டுமே – என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் தோழர் ஸ்ராலின் தெரிவித்துள்ளார்.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு திருகோணமலை மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

நீண்ட கால போர்ச் சூழலுக்கு முகங்கொடுத்து வந்த வடக்கு கிழக்கு பகுதி மக்களை ஏமாற்றி  தமது சுயநலன்களுக்காக வாக்குகளை அபகரித்த இதர தமிழ்த் தலைவர்கள் பதவிகளை பெற்றுக்கொண்டபின்னர் இன்றுவரை தமிழ் மக்களுக்கான அடிப்படை தேவைகளை கூட பெற்றுக்கொடுக்க முடியாதவர்களாக கையாலாகாதவர்களாக இருக்கின்றனர்.

அதுமட்டுமன்றி யுத்தம் நிறைவுக்கு வந்ததும் வடக்கு மாகாணத் தேர்தலில் பல்வேறு நிறைவேற்ற முடியாத கற்பனை வார்த்தைகளைக் கூறி தமிழ் மக்களை தூண்டிவிட்டு அதை வென்றெடுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மலர்ந்தது தமிழரசு என்று மார்தட்டி பத்திரிகை செய்திகளில் வலம் வந்தார்களே அன்றி தமிழ் மக்களுக்கான எந்தவொரு தேவைகளையும் ஆட்சி முடியவுள்ள இந்தக்கணம்வரை பெற்றுக்கொடுக்காது இருக்கின்றனர்.

அதிகாரங்களை தம்வசம் கொண்டிருந்தும் ஆடத் தெரியாதவனுக்கு மேடை சரியில்லை என்பதுபோல மற்றவர்களை குறைசொல்லி மக்களின் வாக்குகளை அபகரிக்கவே மறுபடியும் இவர்கள் தொடர்ந்தும் முற்படுகின்றனர்.

அதிகளவான வளங்ளையும் அதிகாரங்களையும் கொண்டுள்ள வடக்கு மாகாண அரசைக் கூட நிர்வகிக்கத் தெரியாத இவர்கள் தற்போது உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரங்களை தாருங்கள் என்று கேட்டு வருகின்றார்கள்.

ஆனால் இன்று மக்கள் மத்தியில் ஒரு தெளிவும் மாற்றுத்தலைமை வேண்டும் என்ற எண்ணப்பாடும் உருவாகியுள்ளது மட்டுமல்லாது தமக்கான தேவைகளை துரிதகதியில் பெற்றுத்தரக்கூடிய ஆற்றலும் ஆளுமையும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கும் அதன் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் மட்டுமே உள்ளது என்பதை இனங்கண்டுள்ளனர்.

அந்தவகையில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் நாம் வெற்றிபெற்று இப்பகுதி மக்களின் வாழ்வாதார தேவைகள் உள்ளிட்ட அனைத்திற்கும் தீர்வுகண்டு கொள்ளவதற்கான வாய்ப்பை மக்கள் வழங்குவர் என்று நம்பிக்கை கொள்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts: