யாழ். பல்கலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்ற ஆட்சேர்ப்புப் பட்டியலில் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளமைக்கான காரணம் என்ன? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. கேள்வி!

Thursday, September 19th, 2019

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்விச் செயற்பாடுகளில் ஈடுபடாத ஏனைய பணியாளர்களை ஆட்சேர்ப்புச் செய்வதில் பக்கச் சார்புகளும், முறைகேடுகளும் காணப்படுவதாகவும், இத்தகைய நிலைமைகள் அரசியல் தலையீடுகளாக கணிக்கப் பெறுவதாகவும் பணியாளர்களது சங்கமானது குற்றச்சாட்டினை முன்வைத்து, போராட்டமொன்றையும் நடத்தி வருகின்றது.

குறிப்பாக, மேற்படி பணிகளுக்கென வடக்கு மாகாணத்திலிருந்து விண்ணப்பித்திருந்த 400க்கும் அதிகமான விண்ணப்பதாரிகளின் பெயர்கள், உயர் கல்வி அமைச்சிலிருந்து யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்திற்கு அனுப்பப்பட்டுள்ள ஆட்சேர்ப்புப் பட்டியலில் நீக்கப்பட்டுள்ளதுடன், வடக்கு மாகாணத்திற்கு வெளியே வாழ்ந்து வருகின்றவர்களது பெயர்கள் குறிப்பிடப்பட்டு, மேற்படி ஆட்சேர்ப்புப் பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இவ்வாறு பெயர் குறிப்பிடப்பட்டுள்ளவர்களுக்கு நியமனங்களை வழங்குவதைத் துரிதப்படுத்துமாறு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திற்கு அழுத்தங்கள் உயர் கல்வி அமைச்சிலிருந்து கொடுக்கப்பட்டு வருவதாகவும் மேற்படி பணியாளர்கள் சங்கத்தினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

வடக்கு மாகாணத்திலே வேலைவாய்பற்று பல ஆயிரக் கணக்கானோர் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்ற நிலையில், அங்கே நிலவுகின்ற அனைத்து அரச நிறுவனங்களின்  வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்புச் செய்கின்றபோது, வடக்கு மாகாணத்தில் உள்ளவர்களுக்கே முதலிடம் கொடுக்கப்பட வேண்டும் என்ற விடயத்தை நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்ற நிலையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தின் வெற்றிடங்களுக்கு வெளி மாகாணத்தவர்களை நியமிக்க முனைவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

அதேநேரம், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, அனைத்து  பல்கலைக்கழகங்களிலும் கல்விச் செயற்பாடுகளில் ஈடுபடாத பணியாளர்கள் கடந்த 10ஆம் திகதி முதல் தொடர்ச்சியான பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.  

எனவே, மேற்படி விடயங்கள் தொடர்பில் துறைசார் அமைச்சர் அவர்களிடம் பின்வரும் கேள்விகளை முன்வைக்கின்றேன்.

01.           யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்விச் செயற்பாடுகள் அல்லாத ஏனைய பணிகளுக்கென வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த சுமார் 400க்கும் அதிகமானவர்கள் விண்ணப்பம் செய்துள்ளதாகக் கூறப்படுகின்ற நிலையில், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்ற ஆட்சேர்ப்புப் பட்டியலில் அவர்களது பெயர்கள் நீக்கப்பட்டுள்ளமைக்கான காரணம் என்ன?

02.           தற்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஆட்சேர்ப்பு பட்டியலில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் எந்தெந்த மாகாணங்களைச் சேர்ந்தவர்கள்?

03.           யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தின் பணிகளுக்கென வடக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களுக்கு முதலிடம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்காததற்கு என்ன காரணம்?

04.           தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஆட்சேர்ப்புப் பட்டியலை மீளாய்வுக்கு உட்படுத்தி, வடக்கு மாகாணத்தில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கி, மேற்படி வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க முடியுமா?

05.           அனைத்துத் பல்கலைக்கழக கல்விச் செயற்பாடுகளில் ஈடுபடாத ஏனைய பணியாளர்களது கோரிக்கைகள் தொடர்பில் உயர் கல்வி அமைச்சு தற்போது என்ன நடவடிக்கையினை எடுத்துள்ளது?

எனது மேற்படி கேள்விகளுக்கான பதில்களையும், எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பிலான விளக்கத்தையும் கௌரவ அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் வழங்குவார் என எதிர்பார்க்கின்றேன். என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்றையதினம் நடைபெற்ற 27ஃ2 நிலையியல் கட்டளையின் கீழான கேள்வி நேர விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கேள்வியெழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

நுவரெலியா மற்றும் ஹட்டன் பகுதிகளில் தனித் தமிழ் கல்வி வலயங்களை ஏற்படுத்த நடவடிக்கை முடியுமா? - கல்வி...
வறட்சி காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு எடுத்துள்ள நடவடிக்கை...
வடக்கு கிழக்கில் தொல்பொருள் திணைக்களத்தால் ஏற்படுத்தப்படும் பிரச்சினைக்கு தீர்வு கிடைப்பது எப்போது? ...

யாழ் குடாநாட்டில் சட்டவிரோத மணல் அகழ்வுகள் - நாடாளுமன்றத்தில் பகிரங்கப்படுத்தினார் டக்ளஸ் தேவானந்தா ...
தொல்பொருள் திணைக்களத்தின் செயற்பாடுகள் சந்தேகத்தை தருகின்றன - அமைச்சர் விஜேதாச ராஜபக்சவிடம் டக்ளஸ் எ...
‘என்டர்பிரைசஸ் ஸ்ரீ லங்கா’ ஊடாக வடக்கு மாகாணத்தில் இதுவரையில் எத்தனை பேர் பயனடைந்துள்ளனர்? – நாடாளு...