முல்லைத்தீவு செம்மலைப் பகுதி மக்களின் வாழ்வாதார நிலைமையினை அவதானத்தில் கொண்டு நடவடிக்கை எடுத்து உதவ முடியுமா? – ஜனாதிபதியிடம் டக்ளஸ் எம்பி கோரிக்கை!

Wednesday, October 10th, 2018

முல்லைத்தீவு, செம்மலைப் பகுதி மக்களுக்கு வழங்கப்பட்டிருந்த் காணியினை அக் காணிக்கான உறுதிப் பத்திரங்களைக் கொண்டிருப்போரிடம் ஒப்படைப்பதற்கு – அம் மக்களின் வாழ்வாதார நிலைமையினை அவதானத்தில் கொண்டு நடவடிக்கை எடுத்து உதவ முடியுமா? என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்றையதினம் நடைபெற்ற கேள்வி நேரத்தின்போதே செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு கோரிக்கை விடுத்திருந்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

முல்லைத்தீவு மாவட்டத்தில் நாயாறு – கொக்குத்தொடுவாய் பிரதான வீதியின் மேற்குப் புறமாக அமைந்துள்ள புளியமுனை பகுதியில் உள்ள சுமார் 720 ஏக்கர் காணியானது, 1972ஆம் ஆண்டு செம்மலைப் பகுதியில் வசித்திருந்த 350 குடும்பங்களுக்கு பயிர்ச் செய்கைக்காக வழங்கப்பட்டது.

அக்காலம்முதல் இம் மக்கள் அக்காணியில் வயல் செய்கையினையும், கச்சான், சோளம் போன்ற உப உணவுப் பயிர்ச் செய்கையினையும் மேற்கொண்டு வந்துள்ளனர்.

பின்னர் ஏற்பட்ட யுத்தம் காரணமாக பயிர்ச் செய்கைகளை கைவிட்டு, யுத்தம் முடிவுக்குக் கொண்டு வந்ததன் பின்னர் இக்காணியில் ஒரு பகுதியைத் துப்புரவு செய்து பயிர்ச் செய்கைகளை மேற்கொண்டு வந்திருந்தனர் எனவும் தெரிவிக்கின்ற நிலையில், இக் காணிகள் வழங்கப்பட்டிருந்த 350 குடும்பங்களில் 270 குடும்பங்கள் 2015ஆம் ஆண்டு கரைதுறைப்பற்று பிரதேச செயலகம் மூலமாக காணிகளுக்கான உறுதிப்படுத்தல்கள் கோரப்பட்ட நிலையில், தமது காணிகள் உறுதிப்படுத்தப்பட்டு, உறுதிப் பத்திரங்கள் பெறப்பட்டுள்ளன என்றும், அண்மையில் வனவளத் திணைக்களத்தினர் இந்தக் காணி அடங்கலாக சுமார் 100 ஏக்கர் காணியை தங்களுக்கு உரிமையானது என்றும் அத்துமீறி நுழைந்தால் சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியுள்ளனர் என்றும் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் இம்மக்கள் தங்களுக்கான வாழ்வாதாரங்கள் இன்றிய நிலையில் பாரிய பாதிப்புகளை எதிர்நோக்கியிருக்கின்றனர்.

இந்நிலையில் முல்லைத்தீவு, செம்மலைப் பகுதி மக்களுக்கு வழங்கப்பட்டிருந்த இக் காணியினை அக் காணிக்கான உறுதிப் பத்திரங்களைக் கொண்டிருப்போரிடம் ஒப்படைப்பதற்கு – அம் மக்களின் வாழ்வாதார நிலைமையினை அவதானத்தில் கொண்டு, நடவடிக்கை எடுத்து உதவ முடியுமா?

முல்லைத்தீவு மாவட்டம் உட்பட வடக்கு, கிழக்கு மாத்திரமின்றி ஏனைய மாவட்டங்களிலும் வனவளத் திணைக்களத்தினர் தங்களுக்கான காணி உரித்தினை நிலைநாட்ட முனைகின்றபோது, பிரதேச செயலகங்களுக்கும், குறிப்பிட்ட மக்களுக்கும் முன்கூட்டியே அறிவுறுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டு செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றனவா?

ஏற்கனவே மக்கள் வாழ்ந்திருந்த மற்றும் பயிர்ச் செய்கைகளை மேற்கொண்டிருந்த பகுதிகள், யுத்தம் காரணமாக அம்மக்கள் இடம்பெயர்ந்து சென்று, மீளக் குடியேற வந்த நிலையில் பற்றைகள், காடுகள் மண்டிக் கிடப்பதனால், அவை யாவும் வனவளத் திணைக்களத்திற்குரியவை என அடையாளங் காணப்படுகின்றதா?

முல்லைத்தீவு, துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள புத்துவெட்டுவான் பிரதேசத்தில் கடந்த எட்டு வருடங்களாக காடுகள் அழிக்கப்பட்டு, கிரவல் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக முறைப்பாடுகள் எழுந்துள்ளமை தொடர்பில் இதுவரையில் ஏதாவது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா? என கௌரவ ஜனாதிபதி அவர்கள், மகாவலி அபிவிருத்தி மற்றும் சூழல் அமைச்சர் என்ற வகையில் தீர்வு வழங்குவார் என எதிர்பார்க்கின்றேன் என மேலும் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts:


தென் பகுதி மக்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் போல் வடபகுதி மக்களுக்கும் வழங்கப்பட்டனவா?
பூநகரி பிரதேசத்திற்கான குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும்: நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவான...
யாழ்.மாவட்ட விவசாயிகளுக்கு நியாய விலையில் விதை வெங்காயம் கிடைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியு...