மருதங்கேணியில் அப்பகுதி சாராதவர்களால் மேற்கொள்ளப்படும் கடற்றொழில் நடவடிக்கைக்கு சட்ட ரீதியிலான அனுமதிகள் ஏதும் உண்டா? ௲ நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. கேள்வி!

Wednesday, June 6th, 2018

மருதங்கேணி பகுதியில் அப்பகுதி சாராதவர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கடற்றொழில் முயற்சிகளுக்கு சட்ட ரீதியிலான அனுமதிகள் ஏதும் வழங்கப்பட்டுள்ளனவா? அவ்வாறு வழங்கப்பட்டுள்ளன எனில், அவை எந்த ரீதியில் வழங்கப்பட்டுள்ளன? என கடற்றொழில், நீரியல் வளம் மற்றும் கிராமிய பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் விஜித் விஜயமுனி டி சொய்சா அவர்களிடம் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்றையதினம் நடைபெற்ற கேள்வி நேரத்தின்போதே இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும்; தெரிவிக்கையில்

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு மருதங்கேணிப் பகுதியில் அங்குள்ள மக்களின் காணிகளில் பலவந்தமாக வாடிகளை அமைத்து, அப்பகுதியைச் சாராத சுமார் 1500 வரையிலான மக்கள் சட்ட விரோதமான முறையில் கடலட்டை பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளதாகவும், இதனால் தமது வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சுற்றுச் சூழல் மற்றும் கடல் வளங்கள் பாதிப்படைவதாகவும் தெரிவித்து மருதங்கேணி வாழ் கடற்றொழிலாளர்கள் முறைப்பாடுகளை முன்வைத்து, மேற்படி செயற்பாடுகளுக்கு எதிராக ஜனநாயக ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், மேற்படி பிரச்சினையானது, வெறும் தொழில் ரீதியிலான பிரச்சினை மாத்திரமின்றி, இன ரீதியிலான பிரச்சினையாகவும் மாற்றப்பட்டு விடுமோ என்ற அச்சம் எமது மக்களிடையே ஏற்பட்டு வருவதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

கடந்த கால யுத்தப் பாதிப்புகளில் இருந்து தங்களது வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கு எமது மக்கள் பல்வேறு தடைகளை சந்திக்க வேண்டியுள்ள இக்காலகட்டத்தில், இந்திய கடற்றொழிலாளர்களது எல்லை தாண்டியதும், சட்டவிரோதமானதுமான தொழில் செயற்பாடுகளால் பெரிதும் பாதிக்கப்படுகின்ற எமது கடற்றொழிலாளர்களுக்கு, மேற்படி சட்டவிரோத கடற்றொழில்களும் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தி வருவதாகவே முறைப்பாடுகள் முன்வைக்கப்படுகின்றன.

அந்த நிலையில், வடமராட்சி கிழக்கு பகுதியில் மேற்படி கடலட்டை பிடிக்கும் தொழில் காரணமாக தற்போது ஏற்பட்டுள்ள அமைதியின்மையான சூழலை அவதானத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

மேலும், மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி போன்ற கடற் பகுதிகளில் எல்லைமீறிய கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த நிலையில் பிடிக்கப்பட்ட இந்திய இழுவலைப் படகுகளில் 35ற்கும் மேற்பட்ட படகுகள் கிளிநொச்சி, கிராஞ்சி இலவங்குடா கடற்பகுதியில் நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக தொடர்ந்து பல காலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், மேற்படி படகுகளிலிருந்து கசிகின்ற எண்ணெய் காரணமாக மேற்படி கடற் பகுதி பாதிக்கப்பட்டுள்ளதால் இங்குள்ள கடற்றொழிலாளர்களால் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், சூழலும் மாசடைந்து வருகின்றது.

எனவே, மேற்படி பிரச்சினைகளுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க முடியுமா? என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts:

குறைபாடுகளுள்ள பாடசாலைகளை இனங்கண்டு அவற்றின் பாதுகாப்பை நிரந்தரமாக உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க மு...
மானிய அடிப்படையில் விதை உருளைக் கிழங்கு வழங்க நடவடிக்கை எடுக்க முடியுமா? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்....
வடக்கு கிழக்கில் தொல்பொருள் திணைக்களத்தால் ஏற்படுத்தப்படும் பிரச்சினைக்கு தீர்வு கிடைப்பது எப்போது? ...

தமிழ் நாட்டில் இருந்து இலங்கை திரும்புவதற்காக சட்டச் சிக்கல்களை எதிர்கொண்டுவரும் இலங்கை அகதிகளுக்கான...
பூநகரி பிரதேசத்திற்கான குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும்: நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவான...
வவுனியா கரப்பக்குத்தி வீடமைப்புத் திட்டத்தை முன்னெடுக்க விரைவில் நடவடிக்கை மேற்கொள்ள முடியுமா? – நாட...