பாதுகாப்பற்ற ரயில் கடவைகளின் பாதுகாப்பு நடவடிக்கைகள் கருதி உடனடியாக முன்னெடுக்கப்படக்கூடிய ஏற்பாடுகள் ஏதேனும் உள்ளனவா? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. கேள்வி!

Friday, July 26th, 2019

இலங்கையில் சுமார் 685 பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் இருக்கின்றதாகக் கூறப்படுகின்ற நிலையில், இவற்றில் அதிகளவிலான பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் வடக்கு மாகாணத்திற்கான ரயில் பாதையிலேயே அமையப் பெற்றிருப்பதாகவும் தெரிய வருகின்றது. இந்நிலையில், வடக்கு மாகாணம் நோக்கியதான ரயில் சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் இன்று வரையில் தொடர்ந்தும் மிக அதிகளவிலான விபத்துகள் ஏற்பட்டு, பல மனித உயிர்கள் பலியாகி வருகின்றன.

மேற்படி பாதுகாப்பற்ற ரயில் கடவைக் காப்பாளர்களாக வடக்கு மாகாணத்தில் இலங்கை பொலிஸ் திணைக்களத்தால் உள்வாங்கப்பட்டுள்ளவர்கள் ஊதியப் பிரச்சினை, தொழில்சார் பிரச்சினை மற்றும் அடிப்படை வசதிகள் இன்மை போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களில் பலரும் இன்று அக்கடமைகளைவிட்டு விலக்கியுள்ளதாகவும் தெரியவருகின்றது. தொடர்ந்து பணியாற்றி வருகின்றவர்களும், மேற்படி பிரச்சினைகள் தீர்க்கப்படாத நிலையிலேயே பாரிய இடர்பாடுகளுக்கு மத்தியில் பணியில் ஈடுபட வேண்டிய நிலையில் உள்ளனர் எனவும் தெரிய வருகின்றது.

எனவே, மேற்படி பாதுகாப்பற்ற ரயில் கடவைகளில் ஏற்படக்கூடிய விபத்துக்களைத் தவிர்க்கும் வகையில் ஏற்பாடொன்று மிகவும் விரைந்து முன்னெடுக்கப்பட வேண்டியது அத்தியவசியமாக உள்ளது. இவ்விடயம் தொடர்பில் இதற்கு முன்பிருந்த போக்குவரத்து அமைச்சரின் அவதானத்திற்கு ஏற்கனவே கொண்டு வந்திருந்தபோது, அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கூறப்பட்டபோதிலும், இதுவரையில் இது தொடர்பில் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதையும் இங்கு அவதானத்துக்குக் கொண்டு வருகின்றேன்.

அந்த வகையில், மேற்படி பாதுகாப்பற்ற ரயில் கடவைகளின் பாதுகாப்பு நடவடிக்கைகள் கருதி உடனடியாக முன்னெடுக்கப்படக்கூடிய ஏற்பாடுகள் ஏதேனும் உள்ளனவா?

பாதுகாப்பற்ற ரயில் கடவைகளில் கடவைக் காப்பாளர்களாக தற்போது கடமையாற்றி வருபவர்களுக்கான ஊதிய உயர்வு, தொழில் தகுதி, அடிப்படை வசதிகள் என்பன ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளனவா? குறிப்பாக, வடக்கு, கிழக்கு மாகாண ரயில் கடவைக் காப்பாளர்களது தொழில்சார் பிரச்சினைகள் தொடர்பில் இதுவரையில் எடுக்கப்பட்டுள்ள தீர்வுகள் என்ன?

கடவைக் காப்பாளர்கள் பற்றாக்குறை நிலவுகின்றதெனில், தற்போது தொழில் வாய்ப்புகளற்று இருக்கின்ற புனர்வாழ்வு பெற்றவர்களை உரிய ஊதிய அடிப்படையில் வடக்கு மாகாணத்திற்கான பாதுகாப்பற்ற ரயில் கடவைக் காப்புப் பணிகளில் புகையிரதத் திணைக்களத்தின் ஊடாக இணைத்துக் கொள்ள முடியுமா?

மேற்படி எனது கேள்விகளுக்கான பதில்களையும், எடுக்கப்படக் கூடிய நடவடிக்கைகள் தொடர்பான விளக்கங்களையும் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க அவர்கள் வழங்குவார் என எதிர்பார்க்கின்றேன் என நாடாளுமன்றில் நடைபெற்ற 27/2 கேள்வி நேரத்தின்போது போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க அவர்களிடம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

Related posts:

மாகாண சபை தவறியுள்ள நிலையில், நெடுந்தீவு வைத்தியசாலையின் தேவைகளைப் பூர்த்தி செய்ய மத்திய அரசு தலையிட...
இலங்கை உயர்கல்வி முறைமை பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு துரோகம் இழைக்கின்றது - நாடாளுமன்றில் டக்ளஸ் ...
கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பட்ட குடும்பங்களுக்கு இதுவரை மின்னிணைப்புகள் வழங்கப்படாதிருப்...

கடலரிப்பிலிருந்து ஒலுவில் கிராமம் காப்பாற்றப்படுமா? டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நாடாளுமன்றத்தில் கேள்வ...
முல்லைத்தீவு கடற்றொழிலாளர்களது தொழில் வசதி கருதி வெளிச்சவீடு அமைக்க எப்போது நடவடிக்கை எடுக்கப்படும்?...
வவுனியா கரப்பக்குத்தி வீடமைப்புத் திட்டத்தை முன்னெடுக்க விரைவில் நடவடிக்கை மேற்கொள்ள முடியுமா? – நாட...