சந்தேக நபர்களாக தடுத்து வைக்கப்பட்டிருப்போரின் வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்துவதற்கு ஏதேனும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா? நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா கேள்வி

Friday, June 10th, 2016

குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள நிலையில் சந்தேக நபர்களாக தடுத்து வைக்கப்பட்டிருப்போரின் வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்துவதற்கு ஏதேனும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா? என்பது பற்றி அறியத்தர முடியுமா? என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா  நாடாளுமன்றில் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (10) நிலையியற் கட்டளை 23/2இன் கீழ் எழுப்பப்படும் வினாக்கள் நேரத்தின்போது சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வு மீள் குடியேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் கௌரவ டி. எம். சுவாமிநாதன் அவர்களிடம் குறித்த விடயம் தொடர்பாக கேள்வி எழுப்பியுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவித்த அவர் –

பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் விடுதலைப் புலிகள் இயக்கத்துடனான தொடர்புகள் சம்பந்தமான குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டவர்களில் 150ற்கும் மேற்பட்டவர்கள் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் எனத் தெரியவருகிறது.

இவர்களில்  கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நிலையில் இருவரும் இதே சிறைச்சாலையில் ஆண்கள் பிரிவில் தண்டனை வழங்கப்பட்ட நிலையில் மேன்முறையீடு செய்யப்பட்டு ஒருவரும் கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் சந்தேகத்தின் பேரில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நிலையில் கிட்டத்தட்ட 45 பேரும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படாத நிலையில் 10 பேர்களுக்கு அதிகமானவர்களும்; தண்டனை வழங்கப்பட்ட கைதிகளாக 20 பேரிற்கு மேற்பட்டோரும் தண்டனை வழங்கப்பட்டு மேன்முறையீடு செய்யப்பட்ட கைதிகளாக 06 பேருக்கு மேலும் போகம்பர – தும்பர சிறைச்சாலையில் குற்றங்கள் விசாரிக்கப்பட்டுவரும் நிலையில் சந்தேகத்தின் பேரில் கிட்டத்தட்ட 10 பேரும் தண்டனை வழங்கப்பட்டு மேன்முறையீடு செய்யப்பட்டுள்ள கைதியாக பெண் ஒருவரும்; அனுராதபுரம் சிறைச்சாலையில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நிலையில் சந்தேகத்தின் பேரில் 25 பேரிற்கு அதிகமனோரும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படாத நிலையில் ஒருவரும் தண்டனை பெற்ற நிலையில் இம்மாதம் விடுதலையாகவுள்ள ஒருவரும் திருகோணமலை சிறைச்சாலையில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட நிலையில் சந்தேகத்தின் பேரில் ஒருவரும் களுத்துறை சிறைச்சாலையில் இவ்வருடம் 10ம் மாதம் விடுதலையாகும் நிலையில் ஒருவரும் மட்டக்களப்பு சிறைச்சாலையில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட நிலையில் சந்தேகத்தின் பேரில் சிலரும் தண்டனை பெற்று வருகின்ற ஒருவரும் பதுளை சிறைச்சாலையில் தண்டனை பெற்றுவரும் ஒருவரும் நீர்கொழும்பு சிறைச்சாலையில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நிலையில் சந்தேகத்தின் பேரில் இருவரும் இம்மாதம் விடுதலையாகும் நிலையில் ஒருவரும் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தண்டனை  பெறும் நிலையில் பலரும் இவர்களில் இருவர் இவ்வருடம் 08ம் 12ம் மாதங்களிலும் ஒருவர் அடுத்த வருடம் 06ம் மாதமும் மற்றவர் 2018ம் வருடம் 04ம் மாதமும் விடுதலையாகவுள்ளனர் எனத் தெரியவருகிறது.

பொலனறுவை சிறைச்சாலையில் குற்றச்சாட்டு சுமத்தப்படாத நிலையில் சந்தேகத்தின் பேரில் ஒருவரும் மொனராகலை சிறைச்சாலையில் குற்றச்சாட்டு சுமத்தப்படாமல் ஒருவரும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட நிலையில் ஒருவருமாக 02 பேரும் உள்ளனர் எனத் தெரியவருகிறது.

இவர்களில் 2002 2003 2004ம் ஆண்டுகளில் கைது செய்யப்பட்;டவர்களும் அதன் பின்னரான வருடங்களில் கைது செய்யப்பட்டவர்களும் அடங்குவதுடன் இவர்களில் 05ற்கும் மேற்பட்ட சிங்கள சமூகத்தைச் சேர்ந்தவர்களாகவும் 03ற்கும் மேற்பட்ட முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்களாகவும்  உள்ளனர் என்றும் தெரியவருகிறது.

இவர்களை விடுதலை செய்வது தொடர்பில் பல்வேறு தரப்பினரும் பல முயற்சிகளை மேற்கொண்டிருந்தும் மேற்படி கைதிகள் உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்தியும் இக் கைதிகளின் உறவினர்கள் பல்வேறு அகிம்சாவாதப் போராட்டங்களை நடத்தியும் இக் கைதிகளது விடுதலை என்பது இன்றும் கைகூடாத நிலையிலேயே காணப்படுகின்றது.

இக் கைதிகள் பல வருட காலமாக சிறைகளில் பெரும் துயரங்களை அனுபவித்துவரும் நிலையினையும்  இவர்களது குடும்பங்கள் பாரிய பாதிப்புகளை அடைந்துள்ள நிலையினையும் தாங்கள் நன்கு அறிவீர்கள் என எண்ணுகின்றேன்.

இவர்களது விடுதலை என்பது எமது மக்களின் உணர்வுகளுடன் தொடர்புடையதொரு முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளதையும் தாங்கள் அறிவீர்கள். யுத்தத்தை வெற்றிகொண்ட போதிலும் தமிழ் மக்களை தென்பகுதி வென்றெடுக்கவில்லை என்ற கருத்துக் கோட்பாட்டில் மேன்மைதங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ தலைமையிலான தற்போதைய அரசு செயற்பட்டு வருகின்ற நிலையில் தமிழ் மக்களை வென்றெடுக்கக்கூடிய நடவடிக்கைகளை முன்னெடுக்கும் நோக்கில் இந்த அரசு செயற்படும் என நம்புகின்றேன்.

குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள நிலையில் சந்தேக நபர்களாக தடுத்து வைக்கப்பட்டிருப்போரின் வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்துவதற்கு ஏதேனும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா என்பது பற்றி அறியத்தர முடியுமா?

இவ் வருட வெசாக் பண்டிகையின்போது  70 கைதிகளின் மரண தண்டனையை பொது மன்னிப்பின் அடிப்படையில் மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்கள் ஆயுள் தண்டனையாக மாற்ற நடவடிக்கை எடுத்ததைப்போல் மேற்படி கைதிகளில் தண்டனை பெற்றவர்களின் தண்டனைக் காலத்தைக் குறைக்க ஏதாவது நடவடிக்கை எடுக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் உண்டா?

இதுவரையில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படாமல் சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை மனிதாபிமான ரீதியிலான அணுகுமுறையின் கீழ் பொது மன்னிப்பு அடிப்படையில்  விடுதலை செய்ய முடியுமா என்பது பற்றி அறியத்தர முடியுமா?

தன்னை கொலை செய்ய வந்த நபரை மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்கள் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்தது போன்று மேற்படி கைதிகளை விடுவிக்கக்கூடிய வழிமுறைகள் குறித்து நடவடிக்கைகளை எடுக்க முடியுமா என்பது குறித்து அறியத்தர முடியுமா?

மேற்படி வினாக்களுக்கான பதில்களையும் நடவடிக்கைகள் தொடர்பிலான விளக்கங்களையும் கௌரவ அமைச்சர் டி. எம். சுவாமிநாதன் அவர்கள் வழங்குவார்கள் என எதிர்பார்க்கிறேன் என தெரிவித்துள்ளார்

Related posts:

கல்வியியலாளர் சேவை பதவியுயர்வுக்கு தமிழ், முஸ்லிம்கள் தகுதியற்றவர்களா - நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவா...
இலங்கை உயர்கல்வி முறைமை பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு துரோகம் இழைக்கின்றது - நாடாளுமன்றில் டக்ளஸ் ...
கிளிநொச்சி ஜேர்மன் தொழில் பயிற்சி நிறுவனத்திற்கு வினைத்திறன் கொண்ட நிர்வாகக் கட்டமைப்புபை விரைவாக ஏற...

வடக்கு மாகாண மருத்துவ நிலையங்களிலுள்ள 820 கீழ் நிலை பணியாளர்களை நிரந்தரமாக்குமாறு அமைச்சர் ரவி கருணா...
புகையிலைச் செய்கைக்கு தடை என்றால் அதற்கீடான மாற்றுப் பயிர்ச் செய்கை என்ன? நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தே...
‘என்டர்பிரைசஸ் ஸ்ரீ லங்கா’ ஊடாக வடக்கு மாகாணத்தில் இதுவரையில் எத்தனை பேர் பயனடைந்துள்ளனர்? – நாடாளு...