வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வன்னி மக்களுக்கு தொடர்ந்து நிவாரணமும் உரிய நஷ்டஈடும் வழங்கப்பட வேண்டும் – டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!

Tuesday, January 8th, 2019

வடக்கு மாகாணத்தில் கடந்த நாட்களில் பாரியதொரு வெள்ளப் பாதிப்புகளுக்கு எமது மக்கள் முகங்கொடுத்துள்ளனர். அந்த வகையில் வடக்கு மாகாணத்தில் ஐந்து மாவட்டங்களிலுமாக சுமார் 1 இலட்சத்து 30 ஆயிரம் பேருக்கும் அதிகமான மக்கள் பெரும் பாதிப்புகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். பாரியளவில் பயிர் நிலங்கள் அழிவடைந்துள்ளன. ஆயிரக் கணக்கில் கால்நடைகள் அழிந்துள்ளன. பல்வேறு உட்கட்டுமாண வசதிகள் அழிந்தும், சேதமடைந்தும் உள்ளன

மேற்படி பாதிப்புகளின்போது அங்கு சென்று அம் மக்களைப் பார்வையிட்டு, உதவிகளைப் புரிந்த அனைத்து அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், பாதுகாப்புத் தரப்பினர், பொலிஸார் அனைவருக்கும் எமது மக்கள் சார்பில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அதேநேரம், பாதிப்படைந்துள்ள குளங்கள் உள்ளடங்கலான உட்கட்டுமான வசதிகளை மீள அமைப்பதற்கும், அழிவடைந்துள்ள பயிர் நிலங்களுக்கான நட்டஈடுகளை வழங்குவதற்கும், அழிவடைந்துள்ள கால்நடைகளுக்கான நட்டஈடுகளை வழங்குவதற்கும் இந்த அரசு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன்வர வேண்டும்

ஏற்கனவே பல்வேறு தடைகள், அத்துமீறல்கள், நிராகரிப்புகள், போதிய தொழில்வாய்ப்புகள் இன்மை, வாழ்வாதாரங்களுக்கான வசதி வாய்ப்புகள் மறுதலிப்புகள் போன்ற பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்டு வாழ்ந்திருந்த வடக்கு மாகாண மக்களுக்கு இந்த வெள்ளப் பாதிப்பு என்பது ‘மரத்திலிருந்து விழுந்தவனை மாடேறி மிதித்த’ கதையாகியே உள்ளது.

வடக்கு மக்களுக்கென தெரிவாகியுள்ள மக்கள் பிரதிநிதிகள் பலரும் அந்த மக்களை பிரதிநிதித்துவம் செய்யாது, அந்த மக்களை நடுத் தெருவில் கைவிட்டது மட்டுமின்றி, இன்று அரசியல், சமூக, பொருளாதார ரீதியில் அனாதைகளாக்கியும் விட்டுள்ளனர்.

வடக்கு – கிழக்கு மக்களின் வாக்குகளுக்காக அந்த மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை வழங்கி, அரசியல் பதவிகளை எட்டிப் பிடித்த தமிழ் அரசியல்வாதிகள் பலரும் இன்று அந்த மக்களின் முன்பாக அம்பலப்பட்டுப் போயுள்ளனர்.

பட்டு வேட்டிக்கு ஆசைப்பட்டு, கடைசியில் கட்டியிருந்த கோவணமும் இழக்கப்பட்ட நிலைக்கு ஆளாகியிருக்கின்ற இந்த தமிழ் அரசியல்வாதிகளால், எமது மக்கள் சட்டியிலிருந்து அடுப்பில் விழுந்த நிலைக்கே இன்று ஆளாகியிருக்கின்றனர்.

எனவே, இன்று அவர்களது ஏமாற்று அரசியல் என்பது எமது மக்களிடையே தௌ;ளத் தெளிவாக அம்பலமாகி, எமது மக்கள் தங்களுக்கு உண்மையான அரசியல் பிரதிநிதிகளின் பக்கமாக அணிசேர ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில், எமது மக்களை பாதிப்புகளிலிருந்து மீட்டு, அவர்களுக்கான எதிர்காலத்தை ஒளிமயமானதாக உருவாக்கி, அதனை வளர்த்தெடுக்க வேண்டிய பாரிய வரலாற்றுக் கடமை எமக்குண்டு என்பதையும் இந்தச் சந்தர்ப்பத்தில் nதிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

இந்த நாட்டில் தற்போதைய நிலையில் ஆறு மாகாண சபைகளில் மக்கள் பிரதிநிதிகளின் ஆட்சி நிர்வாகம் இல்லாத நிலையில் அவை உள்ளிட்ட 8 மாகாண சபைகளுக்கென ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் பிரதிநிதிகளின் ஆட்சி நிர்வாகமற்ற அரசியல் சபைகளில் அதிகாரிகளின் நிர்வாகமே முன்னெடுக்கப்படும். ஆனால், ஏற்கனவே மக்கள் பிரதிநிதிகளாக பணியாற்றியிருந்தவர்கள் ஆளுநர் பதவிக்கென நியமிக்கப்படுகின்ற நிலைகளில், அதிகாரிகளின் நிர்வாகம் என்பதற்கு மாற்றமானதொரு நிர்வாகத்தினை எதிர்பார்க்கக் கூடியதாக இருக்கும்.

இன்று வடக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில், அத்தகையதொரு நிலையினையும் காணக்கூடியதாக இல்லை என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். எனவே, இது தொடர்பிலும் உரிய அவதானங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதையும் இங்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்

இராஜந்திர சிறிப்புரிமைகள் தொடர்பில் கூறுகின்றபோது, இந்த சிறப்புரிமைகள் தொடர்பில் கடந்த வருடத்தில் ஒரு கேள்வி நிலை ஏற்பட்டிருந்ததை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

அதாவது அமெரிக்க தூதுவராக செயற்பட்டிருந்த சாலிய விக்கிரமசூரியவினது சிறப்புரிமைகள் தொடர்பிலேயே இந்த கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.

எனவே, இத்தகைய சிறப்புரிமைகள் தொடர்பில் நாட்டுக்கு நாடு, ஆளுக்காள் மாறுபட்ட நிலைப்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றனவா? என்ற கேள்வி மக்களிடையே எழுந்திருந்ததை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

மேலும், இராஜதந்திர பணிகளில் தமிழ் பேசும் சமூகங்களின் பங்களிப்பு என்பது இந்த நாட்டில் புறக்கணிப்பிற்கு உட்பட்டே வந்துள்ளது. இது தொடர்பில் நான் ஏற்கனவே இந்தச் சபையில் எடுத்துரைத்துள்ளேன்.

கடந்த வருடம் இந்த நிலையில் சில மாற்றஙகள் கொண்டுவரப்பட்டு, தமிழ், முஸ்லிம் சமூகங்களைச் சார்ந்த சிலர் இராஜதந்திரப் பணியில் இணைக்கப்பட்டுள்ள போதிலும், இது போதுமானதாக இல்லை என்பதை இங்கு வலியுறுத்த விரும்புவதுடன், இலங்கையின் இராஜதந்திரப் பணியில் போதியவு தமிழ், முஸ்லிம் மக்களும் இணைத்துக் கொள்ளப்படல் வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் இங்கு முன்வைக்க விரும்புகின்றேன்.

அமெரிக்காவின் அமைதிப் படையணிக்கு இலங்கையில் இராஜதந்நிர சிறப்புரிமைகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்ற நிலையில், இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு பல ஆண்டுகளுக்கு முன்னர் புலம்பெயர்ந்துச் சென்று, அங்கு பல்வேறு தொழில் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் இலங்கையில் தங்களது முதலீடுகளை மேற்கொள்வதற்கும் போதிய வசதிகளுடான வாய்ப்புகள் வழங்கப்படல் வேண்டும் என்ற விடயத்தையும் இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.

புலம்பெயர்ந்துள்ள இலங்கையர்கள் அனைவரையும் பிரிவினைவாதிகள் என்ற கண்ணோட்டத்துடன் பார்க்கின்ற ஒரு நிலை இந்த நாட்டில் சிலரிடையே நிலவுகின்றது.

இந்த நிலைப்பாடானது, இலங்கையில் முக்கியமான சில விடயங்களை முன்னெடுக்கின்ற நிலையில் மேலோங்கச் செய்யப்படுகின்றது. இந்த நிலைப்பாடானது இந்த நாட்டுக்கும், இந்த நாட்டின் வளர்ச்சிக்கும் நல்லதல்ல.

எனவே, புலம்பெயர்ந்தோர் தொடபிலும் உரிய வலுவான வாய்ப்புகள் உருவாக்கப்படல் வேண்டும் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றேன்

அரசியல்வாதிகள் பொலிஸாரின் சட்ட ஒழுங்கு நடவடிக்கைகளில் அநாவசியமாக தலையீடு செய்து பாரிய குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை குறிப்பாக, கஞ்சாக் கடத்தல் காரர்களை, விடுவித்தமை தொடர்பாக சபையின் அவதானத்திற்கு கொண்டுவர விரும்புகின்றேன்

வடமராட்சி கிழக்கு மாமுனை கிராமத்தை சேர்ந்த கந்தசாமி கோகுலதீபன்; என்பவர் கேரளா கஞ்சா கடத்தலில் தொடர்ந்து ஈடுபட்டு வருபவர் என அப்பகுதியில் குறிப்பிடப்பட்டு நிலையில், இவர் உள்ளிட்ட ஐவர் கேரளக் கஞ்சாவினை பொதி செய்துகொண்டிருந்த வேளையில், கிளிநொச்சி பொலிஸார் கடந்த டிசம்பர் 3ஆம் திகதி அன்று இவர்களை கைது செய்ய முற்பட்ட வேளையில் அவர்கள் பொல்லுகளைக் கொண்டு பொலிசாரை தாக்கியுள்ளனர் என்றும்,

ஆனால் பொலிசாரின் துணிச்சலான செயற்பாட்டினால் அவர்கள் சுற்றிவளைக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு கிளிநொச்சிக்கு கொண்டு செல்லப்பட்டிருந்;தனர் என்றும்,

அவர்களை விசாரணை செய்து அவர்களுக்குரிய குற்றப்பத்திர அறிக்கைகள் பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் ஜனநாயகத்தை பாதுகாக்கவென உச்ச நீதிமன்றில் வாதாடிய தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பொலிஸ் உயரதிகாரியை தொடர்புகொண்டு அழுத்தம் கொடுத்ததன் விளைவாக கோகுலதீபன் என்ற அந்நபர் உடனடியாக விடுவிக்கப்பட்டுள்ளார் என்றும்,

அவர் விடுவிக்கப்பட்டதனைத் தொடர்ந்து ஏனைய நால்வரும் கோகுலதீபனை விடுதலை செய்ய முடியுமாயின் ஏன் தங்களை விடுதலை செய்ய முடியாது? என நியாயம் கேட்டதன் அடிப்படையில் பொலிசாரால் மறுநாள் அவர்களும் விடுவிக்கப்பட்டனர் என்றும் தெரிய வருகின்றது.

ஜனநாயகத்தை பாதுகாக்கவென கூக்குரலிட்டவர்கள் சட்டம் ஒழுங்கை எவ்வாறு பாதுக்கின்றார்கள்? என்பது தொடர்பில் இச்சபையில் உள்ளவர்கள் அறிந்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

அத்துடன் அவ்வாறு அரசியல்வாதியின் அழுத்;தத்திற்கு அடிபணிந்து வீரமுடன் செயற்பட்ட பொலிசாரால் கைதுசெய்யப்பட்ட அந்நபர்கள் விடுவிக்கப்படுவதற்கு பொறுப்பாக இருந்த உயரதிகாரி மீது உடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சட்டம் ஒழுங்கு அமைச்சர் அதிமேதகு ஜனாதிபதி அவர்களிடமும்; பொலிஸ்மா அதிபர் அவர்களிடமும் இத்தருணத்தில் நான் கோரிக்கை விடுக்கின்றேன்.

Related posts:

உள்ளளூராட்சி மன்றங்களில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாததால்  மக்கள் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்- டக்ள...
தமிழர் தேசத்தின் வளங்கள் தொடர்ந்து சுரண்டப்படுகின்றன நாடாளுமன்றத்தில் டக்ளஸ் எம்.பி எடுத்துரைப்பு
அதிக வருமானம் ஈட்டும் துறையாக தபால் துறையை மாற்றியமைக்க வேண்டும் – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்...

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 20 மே 2000  அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்
தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பான தீர்மானங்கள் இலங்கை மருத்துவ சபையின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட...
மக்களுக்கு வெறும் உணர்ச்சிகளை திணிப்பவர்கள் ஒரு வேளை உணவளிப்பதற்கான வழியைக் காட்டுதாக இல்லை - நாடாளு...