வாழ்வாதாரங்களுக்கும்,வலுவாதாரங்க ளுக்கும் கட்டாந்தரையிலிருந்தே முயற்சிக்க வேண்டிய நிலையில் எமது மக்கள்- சபையில் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Thursday, June 8th, 2017
எமது மக்கள் தங்களுக்கான வாழ்வாதாரங்கள் முதற்கொண்டு வலுவாதாரங்களுக்கும் கட்டாந்தரையிலிருந்தே முயற்சிக்க வேண்டிய நிலையில் இருந்து வருகின்றனர் என்பதை இங்கு வேதனையுடன் தெரிவித்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையின்போது தெரிவித்துள்ளார்.
விளையாட்டுத்துறை சார்ந்த கட்டளைச் சட்டம் தொடர்பிலான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போது அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த கால யுத்தத்தின் இறுதிக்காலம் வரையிலான நேரடிப் பாதிப்புகளுக்கு உட்பட்டுள்ள வடக்கு மாகாணத்தில் ஏனைய அனைத்துத் துறைகளையும் போன்றே விளையாட்டுத்துறையும் பாரிய பின்னடைவுகளுக்கு உட்பட்டிருக்கின்ற நிலையையே காணக்கூடியதாக இருக்கின்றது.
சுமார் முப்பது வருடங்களாக யுத்தம் நடைபெற்றுள்ள ஒரு மண்ணில், யுத்தத்தின் பின்னரான குறுகிய காலகட்டத்துக்குள், அந்த யுத்தத்தினால் நேரடிப் பாதிப்புகளுக்கு உட்பட்ட மக்கள் விரைந்து இயல்பு நிலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்க முடியாது.
அத்தகைய மக்கள் சார்ந்து வாழுகின்ற அல்லது அத்தகைய மக்கள் வாழும் சூழலைச் சார்ந்து வாழுகின்ற எமது இளம் தலைமுறையினரை, கடந்தகால கசப்பான வரலாறு படியாதவாறு, இயல்பு நிலை கொண்ட வாழ்க்கை முறை நோக்கி நகர்த்திச் செல்வதற்கு கல்வித் துறையைப் போன்றே விளையாட்டுத் துறையும் மிகவும் அவசியமாகின்றது.
எனவே, இத்துறைகள் சார்ந்த வளர்ச்சியின்பால் அதிக அவதானங்கள் செலுத்தப்பட வேண்டியுள்ளதுடன், அதற்குரிய வாய்ப்புகளும், ஊக்குவிப்புகளும் அதிகரிக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டு, அது இன்னும் தொடர்வதையே காணக்கூடியதாக இருக்கின்றது.
குறிப்பாக, வடக்கிலே அதுவும் குறிப்பாக யாழ்ப்பாணத்திலே, சமூக சீர்கேட்டுச் செயற்பாடுகள், வன்முறைகள் போன்ற துரதிஷ;டவசமான செயற்பாடுகள் யுத்தத்தின் பின்னரான – சற்று தாமதித்த காலகட்டங்களில் ஏற்பட்டு வருவதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
யுத்தமொன்று நிகழ்ந்த மண்ணில், அந்த யுத்தமானது சுமுகமான முறையிலன்றி, எதிர் யுத்தமொன்றின் மூலமாகத் தோற்கடிக்கப்படுகின்ற நிலையில், அந்த யுத்தமானது தமிழ், சிங்கள மக்களிடையே ஓர் இனவாத யுத்தமாக கருத்தியல்கள் பரப்பப்பட்டிருந்த நிலையில், தோற்கடிக்கப்பட்ட யுத்தத்தில் ஈடுபட்டிருந்தோர் சார்ந்த மக்கள் தரப்பினர் அது தமது இனத்தின் தோல்வியே என எண்ணுகின்ற வாய்ப்புகள் அதிகமாகும். இதற்கு இந்த யுத்தத்தை இனவாதமயப்படுத்திய சுயலாப அரசியல்வாதிகள் மற்றும் அது சார்ந்த ஏனைய தரப்பினர் அனைவருமே பொறுப்புக் கூறவேண்டும்.
இத்தகைய ஒரு மனநிலையில் இருக்கின்ற எமது இளைஞர், யுவதிகளும் தங்களது இறுக்கமான மனநிலை வட்டத்திலிருந்து விடுபட்டு, வெளியே வருவதற்கு ஒரு துணையாக இந்த விளையாட்டுத்துறை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மிகவும் பரந்தளவிலும், பலமிக்கதாகவும் வளர்த்தெடுக்கப்பட வேண்டியது அவசியமாகும்.
பாடசாலை மட்டங்களில் இருந்து விளையாட்டுத்துறையானது எமது நாட்டில் கட்டியெழுப்பப்பட்டு வந்தாலும், பகுதிக்குப் பகுதி, இடத்திற்கு இடம் என மாறுபட்ட நிலைகளிலான வளப் பங்கீடுகள் மற்றும் ஏனைய வசதிகளைப் பொறுத்து விளையாட்டுத் துறையானது ஒருவிதமான பக்க சார்பான வகையிலேயே வளர்த்தெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிய வருகின்றன.
குறிப்பாக, நகரப் பகுதிகளிலுள்ள பாடசாலைகளுக்கு அதிகமாகக் கிட்டுகின்ற விளையாட்டுத்துறை சார்ந்த வாய்ப்புகள் நகர்ப் புறம் சாராத ஏனைய பகுதிகளுக்கு கிட்டுவதில்லை. இது, ஒரு நிலை என்கின்றபோது, இதன் இன்னொரு நிலை ஏனைய மாகாணங்களுக்கு கிட்டும் வசதிகள் வடக்கு மாகாணத்திற்குக் கிட்டுவதில்லை என்பதாகும்.
இந்த நிலையிலே எமது மக்கள் தங்களுக்கான வாழ்வாதாரங்கள் முதற்கொண்டு வலுவாதாரங்களுக்கும் கட்டாந்தரையிலிருந்தே முயற்சிக்க வேண்டிய நிலையில் இருந்து வருகின்றனர் என்பதை இங்கு வேதனையுடன் தெரிவித்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எமது நாட்டைப் பொறுத்த வரையில் கால் பந்தாட்டம் என்பது முதன் முதலில் யாழ்ப்பாணத்திலேயே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பிரித்தானியரின் காலணித்துவ ஆட்சியின்போது 1881ஆம் ஆண்டில் வண பிதா ஜே. ஏ. ஆர். சுமயித் அவர்களால் யாழ், புனித பெற்றிக் கல்லூரியிலேயே கால் பந்தாட்டம் எமது நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இன்று இவ் விளையாட்டுத்துறை சார்ந்து பல திறமையாசாலிகள் வடக்கு மாகாணத்திலே காணப்படுகின்ற நிலையில் அவர்களை தேசிய மட்டத்திற்கும், அதிலிருந்து சர்வதேச மட்டத்திற்கும் மேலும், மேலும் அழைத்துச் செல்லக்கூடிய வகையிலான ஏற்பாடுகளும், ஊக்குவிப்புகளும் அவசியமாகும்.
தற்போதைய அரசின் விளையாட்டுத்துறை அமைச்சானது தொகுதிக்கு ஒரு விளையாட்டு மைதானம் என்ற ரீதியில் அனைத்து வசதிகளையும் கொண்ட விளையாட்டு மைதானங்களை அமைத்து வருவதாகக் கூறப்படுகின்றது. இந்தத் திட்டத்தின் கீழ் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எவ்விதமான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பது குறித்து விளையாட்டுத்துறை அமைச்சர் விளக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.
வடக்கு மாகாணத்தின் விளையாட்டுத்துறையை அபிவிருத்தி செய்யும் நோக்கில், சகல வசதிகளையும் கொண்ட சர்வதேச தரமுடைய விளையாட்டரங்கு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்ற எமது நீண்டகாலக் கோரிக்கைக்கு அமைவாக, 2011ம் வருடம் ஜூலை மாதம் 20ம் திகதி கிளிநொச்சி மாவட்டத்தில் இதற்கென சுமார் 325 மில்லியன் ரூபா மதிப்பீடு செய்யப்பட்டு, விளையாட்டரங்கு அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. 2013ம் வருடத்தில் இது பூர்த்தி செய்யப்பட்டு, தேசிய மட்ட விளையாட்டுப் போட்டிகள் இங்கு நடத்தப்படும் என்றும் கூறப்பட்டது.
அதன் பின்னர், இந்த விளையாட்டரங்கின் பணிகள் தொடர்பாக நான் கடந்த ஜூன் மாதம் 21ம் திகதி இந்தச் சபையில் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், இந்த மைதான நிர்மாணப் பணிகள் முடிக்கப்பட்டு, இங்குதான் 2016ம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுமென விளையாட்டுத்துறை அமைச்சர் அன்று கூறியிருந்தும், கடந்த வருட தேசிய விளையாட்டு விழா துரையப்பா மைதானத்திலேயே நடத்தப்பட்டது. இன்றுவரை அதனது பணிகளும் நிறைவு செய்யப்பட்டதாகத் தெரியவில்லை.
அதே நேரம், தொற்றா நோய்களைத் தவிர்த்துக் கொள்ளல் என்ற ரீதியில் சரீர ஆரோக்கியம் கருதியதான யோகா பயிற்சிகள் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்பட்டு, அதற்கென இந்த அரசு பாரியளவிலான செலவுகளை செய்து வருவதாகவும் ஊடகங்களில் ஆடிக்கொரு முறை அமாவாசைக்கு ஒரு முறை எனக் காணக்கூடியதாக இருக்கிறது.
யோகா கலையைப் பொறுத்தும், யாழ்ப்பாணத்திற்கு என்று ஒரு மேன்மையான தனித்துவம் வரலாற்று ரீதியாக இருந்து வருவதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். அதாவது, யோகா கலை தொடர்பிலான மிக உயரிய வரவேற்புக்குரியவராகத் திகழுகின்ற ஞான குரு சிவயோக சுவாமிகள் யாழ்ப்பாணம், கொழும்புத்துறை வீதியில் பல வருடங்களாக தவ நிலை இருந்த மகான் என்பது வரலாறு.
இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க எமது பகுதியிலே இந்த யோகா கலை என்பது இன்று எமது இளம் தலைமுறையினரிடையே எத்தகைய வளர்ச்சியைக் கண்டிருக்கிறது – எத்தகைய ஈர்ப்பினைப் பெற்றிருக்கிறது என்று ஆய்வுகள் எதுவும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரியவில்லை. இதே நிலையே நாடளாவிய ரீதியிலும் உள்ளதென அறிய முடிகின்றது. எனவே, பாரிய செலவுகளை மேற்கொண்டு ஒரு விடயத்தை மேற்கொள்கின்றபோது, அது ஊடகங்களுக்கான விளம்பரமாக இராமல் அது சார்ந்த பயனாளிகளின் பலன்கள் குறித்து சிந்திக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.
அதே நேரம், யாழ்ப்பாணத்தில் சகல வசதிகளையும் கொண்ட உள்ளக விளையாட்டுத் தொகுதி ஒன்று அமைக்கப்பட வேண்டும். யாழ்ப்பாணத்தில் சர்வதேச தரத்திலான கிரிக்கெற் மைதானமொன்று அமைக்கப்பட வேண்டும்  என்ற எனது கோரிக்கைகளுக்கு அமைவாக அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகக் கௌரவ அமைச்சர் அவர்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தார். அவற்றின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து அறிய விரும்புகின்றேன்.
எமது நாட்டைப் பொறுத்த வரையில், கிரிக்கெற் விளையாட்டுக்கு தரப்படுகின்ற முக்கியத்துவம் ஏனைய விளையாட்டுகளுக்குத் தரப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து பலராலும் முன்வைக்கப்படுகின்ற ஒரு குற்றச்சாட்டாகவே இருந்து வருகின்றது. இவ்வாறு முக்கியத்துவம் தரப்படுவதாகக் கூறப்படுகின்ற கிரிக்கெற் விளையாட்டுத் துறை கூட இன்று எந்தளவில் இருக்கின்றது என்பதுவும் ஒரு கேள்விக் குறியாகவே இருக்கின்றது.
எமது நாட்டின் கிரிக்கெற் விளையாட்டுத் துறையைப் பொறுத்தவரையில் கிழக்கு மாகாணத்திலிருந்து இதுவரையில் ஒரு வீரர்தானும் தேசிய மட்ட அணிக்கு தெரிவு செய்யப்படாத நிலையே காணப்படுவதாகத் தெரிய வருகின்றது. அதே நேரம், வடக்கு மாகாணத்திலிருந்தும் மிக நீண்ட காலமாக இதே குறைபாடு நிலவுகின்றது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சிறந்த கிரிக்கெற் விளையாட்டு வீரர்கள் இல்லாமல் இல்லை. அவர்கள் இனங்காணப்பட்டு, ஊக்குவிக்கப்படாத நிலையும், கை கொடுத்து உதவாத நிலையுமே அங்கு நிலவுகின்றன. எனவே, இவ்விடயம் குறித்தும் உரிய அவதானங்களை விளையாட்டுத்துறை அமைச்சர் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.
மேலும், வடக்கு மாகாணத்தில் கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நான் ஏற்கனவே விடுத்திருந்த கோரிக்கைக்கு அமைவாக, முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் மன்னார் போன்ற மாவட்டங்களில் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாகவும், யாழ் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தை நாடளாவிய ரீதியில் ஏனைய சங்கங்களுடன் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுப்பதாகவும் கௌரவ அமைச்சர் அவர்கள் தெரிவித்திருந்தார்.
இந்த ஏற்பாடுகள் தற்போது எந்த நிலையில் இருக்கின்றன என்பது குறித்தும் கௌரவ அமைச்சர் அவர்கள் அறியத் தருவார் என எதிர்பார்க்கின்றேன்.
குறிப்பாக, வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பொறுத்த வரையில் விளையாட்டுத் துறையும் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருப்பதை தொடர்ந்து காணக் கூடியதாக இருக்கிறது. கடந்த வருட தேசிய ரீதியிலான விளையாட்டுப் போட்டிகளில் கிழக்கு மாகாணம் 8 வது இடத்தையும், வடக்கு மாகாணம் 9 வது இடத்தையுமே பெற்றிருக்கின்ற நிலையில், வடக்கு – கிழக்கு மாகாணங்களில் விளையாட்டுத் துறையை கட்டியெழுப்பும் நோக்கில் பாடசாலை மட்டங்களிலிருந்தே அதனை ஊக்குவிப்பதற்கும், அதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் அதி முக்கிய அவதானங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என மீண்டும் நான் வலியுறுத்த விரும்புகின்றேன்.
அத்துடன், கபடி உட்பட ஏனைய தேசிய ரீதியிலான விளையாட்டுகளை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து, கடற்கரை விளையாட்டுக்களை மேலும் வளர்த்தெடுக்கக் கூடிய செயற்திட்டங்களையும் அப் பகுதிகளில் வளர்த்தெடுக்கவும் முன்வர வேண்டியதுடன், வடக்கு – கிழக்கு மாகாணங்களில் பிராந்திய விளையாட்டுக் கழகங்களை வலுமிக்கதாக மேம்படுத்தி, அவற்றை ஏனைய மாவட்டங்களுடன் தொடர்புபடுத்தும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளன.
அந்த வகையில், முன்னாள் யுத்த வலயங்களான வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள இளைஞர், யுவதிகளை அதிக பட்சம் விளையாட்டுத் துறையுடன் இணைத்து, அவர்களை N;;மம்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுத்து உதவுமாறு கௌரவ அமைச்சர் தயாசிறி ஜயசேகர அவர்களிடம் கேட்டுக் கொள்கின்றேன்.

Related posts:


செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 20 மே 2000 அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்
வடக்கு மாகாண சபை ஊழல் தொடர்பில் மத்திய அரசின் நடவடிக்கை வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கோரிக...
குற்றவாளிகளை பாதுகாக்கும் அரசியல்வாதிகளே நாட்டுக்கு அச்சுறுத்தல் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா எம...