செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 20 மே 2000 அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்

Saturday, May 20th, 2000

கௌரவ பிரதிச் சபாநாயகர் அவர்களே!

நாங்கள் கடந்து வந்த பாதைகள் யாவும் கடினமானவை. ஆனாலும் சுமந்து வந்த சுமைகள் யாவும் வலியானவை. நடந்து வந்த பாதையில் நாங்கள் வலிகளைச் சந்திக்க நேர்ந்தாலும் எங்களது வலிமையான இலட்சியங்களால் மட்டுமே அந்த வலிகளைத் தாங்கி வந்திருக்கின்றோம். எமது மக்களுக்கான அமைதி சமாதானம் அபிவிருத்தி ஜனநாயகம் வாழ்வியல் உரிமை அரசியல் சமவுரிமை என்பனவே எங்களது இலட்சியங்களாகும். இந்த இலட்சியக் கனவுகளின் ஈடேற்றங்களுக்காக நாம் இதுவரை எத்தனையோ இழப்புக்களையும் இன்னல்களையும் ஏன் அவதூறுகளையும் சந்தித்து வந்திருக்கின்றோம். கடந்த காலங்களில் எமது கால்களை ஒடிப்பதற்குச் சமனாக இறகுகளை வெட்டுவதற்கு ஒப்பாக எம்மோடு சேர்ந்துழைத்த எமது பல நூறு தோழர்களும் கொன்றொழிக்கப்பட்டார்கள். ஆனால் நாம் நம்பிக்கையின் கால்கொண்டு இன்னமும் நடந்து வருகின்றோம்.எமது ஆத்ம பலத்தின் சிறகுகளை விரித்து விடியலின் திசைநோக்கிப் பறந்து செல்கின்றோம்.

எம்மை உடல்ரீதியாக அழித்தொழிக்கும் முயற்சிகள் யாவும் தோற்கடிக்கப்பட்ட நிலையில் எமது அரசியல் வளர்ச்சியையும் எமக்கிருக்கும் மக்கள் ஆதரவையும் சகித்துக்கொள்ளாமல் சுயலாப வியாபார நோக்கிலான சில அரசியல்வாதிகளும் சில வியாபாரிகளும் இன்று எம்மீது சேறடிக்கும் அநாகரிகமான செயற்பாடுகளில் இறங்கியிருக்கிறார்கள்.மல்லாந்து படுத்துக் கிடந்து வானத்தை நோக்கிக் காழ்புணர்வாந்தி எடுக்கும் இவர்கள் தாங்கள் எடுக்கும் வாந்தி தங்களையே வந்துசேரும் என்பதை உணரத் தவறிவிட்டார்கள் என்று நான் கூறி  வைக்க விரும்புகின்றேன். பெரும் புயலையே எதிர்கொண்ட எங்களுக்கு இன்று எம்மீது விழுகின்ற சிறு மழைத்துளிகள் என்றே நாம் கருதுகின்றோம். போற்றுவார் போற்றட்டும் புழுதிவாரித் தூற்றுவார் தூற்றட்டும். எது வரினும் வரட்டும். அவற்றை எமது ஆற்றலால் எதிர்கொண்டு நாம் செல்லம் வழி நேர்வழியாகட்டும் என்று நாம் இன்னமும் உறுதியுடன் பயணித்து வருகின்றோம். நாம் மக்களின் பக்கம். மக்கள் எம் பக்கம். எந்தக் கட்டுக்கதைகளாலும் எம்மை எமது மக்களிடம் இருந்து அகற்றிவிடமுடியாது என்பதை எம்மீது திட்டமிட்டுச சேறடிக்கும் அரசியல் காழ்ப்புணர்ச்சியாளர்களிடம் இந்தச் சபையினூடாகக் கூறிவைக்க விரும்புகின்றேன்.

இரத்தம் சிந்திய தீவாக இருந்த இலங்கைத் தீவு இன்று சமாதானத் தீவாக மாறியிருக்கின்றது.போர் வந்து புயலாக வீசிய எங்கள் வரலாறு வாழ்விடங்கள் எங்கும் இப்பொழுது அமைதி பிறந்திருக்கின்றது. கடந்த காலங்களில் இந்த நாட்டில் மாறி மாறி ஆட்சிக்கு வந்திருந்த எந்தவோர் அரசாலும் அரச தலைவர்களாலும் ஆற்ற முடியாதிருந்த இந்தக் காரியத்தை நிறைவேற்றி வைத்திருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவாகளுக்கு நான் முதலில் நன்றி கூறக் கடமைகப்பட்டுள்ளேன். ஆனாலும் இன்னமும் நிறைவேற்ற வேண்டிய பணிகள் நிறையவே உண்டு. குறையில் இருந்து எடுத்த காரியத்தைத் தொடர்ந்தும் நடத்தி முடித்து இலங்கைத் தீவில் வாழும் தமிழ் முஸ்லிம் சிங்கள மக்கள் சகலவற்றிலும் சமவுரிமை பெற்றவர்கள் என்பதை இன்னமும் வலிமையாக அடையாளப்படுத்த வேண்டும். இந்த வரலாற்றுப் பணிகளைத் தொடர்ந்தும் செய்து முடிக்க வேண்டும்.என்ற வேண்டுகோளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் இந்தச் சபையினூடாகவும் முன்வைத்து, இந்தப் பணிகளை நிறைவேற்றி முடிக்க நாம் என்றும் நாம் என்றும் ஜனாதிபதி அவர்களுக்குத் தோள் கொடுத்;து நிற்போம் என்றும் உறுதிபடக் கூறுகின்றேன்.

கௌரவ பிரதிச் சபாநாயகர் அவர்களே!

நான் அரசியலுக்காக எதையும் பேச விரும்புவதில்லை. அரசாங்கத்தின் அமைச்சராக மட்டும் நான் இங்கு பேச வரவில்லை. தமிழ் மக்களின் பிரதிநிதியாகவும் நின்று சில விடயங்களை யதார்த்தபூர்வமாக இங்க பேச விரும்புகின்றேன். இங்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு – செலவுத் திட்டத்தை கடந்தகால சமகால யதார்த்த சூழலுக்கு ஊடாகவே நான் பார்க்க விரும்புகின்றேன். குறைகளை மட்டும் சுட்டிக் காட்டிவிட்டு நிறைவானவை அனைத்தையும் நிராகரிப்பது வெறும் சுயலாப அரசியல் என்றே நான் கருதுகின்றேன். அழிவு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் தமிழ் மக்கள் அவலங்களைச் சந்திக்க வேண்டிய துயரங்களும் நடத்திருக்கின்றன. ஆனாலும் அடுத்து வரப் போவது ஒளிமயமான எதிர்காலம் என்ற நம்பிக்கை அவர்களுக்குள் மிளிர்விட்டிருக்கிறது. அந்த நம்பிக்கைகளை நிறைவேற்றுவதற்கதாக நாங்கள் தொடர்ந்தும் அயராது உழைத்து வருகின்றோம். இதேவேளை யுத்தம் முடிவிற்குக் கொண்டு வரப்பட்டதனால் அரசியல் கட்சிகள் யாவும் சுதந்திரமாகச் செயற்படுவதற்காக சூழல் பிறந்திருக்கின்றது.தமிழ் அரசியல் கட்சிகள் யாவும் சுதந்திரமாகச் செயற்படும் ஒரு சூழலில் மட்டுமே தமிழ் மக்களுக்கான அரசியலுரிமைகள் குறித்தும் அவை சுதந்திரமாகச் சிந்திக்க முடியும். இத்தகைய சூழலை உருவாக்கித் தந்த அரச தலைவர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு மீண்டும் நான் நன்றி கூற வேண்டும். இந்த வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்திருக்கும் ஜனாதிபதி அவர்களுக்கு இந்தச் சபையில் ஏற்கனவே நன்றி தெரிவித்திருக்கிறார்கள். இதை நான் மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றேன்.

இந்த நாட்டில் ஒரு யுத்தம் நடந்து முடிந்திருக்கின்றது யுத்தத்திலிருந்து எமது தேசம் விடுபட்டாலும் யுத்தத்தின் பளுவை இன்னும் இந்த நாடு சுமந்து கொண்டிருக்கிறது. ஆகவே இத்தகைய சூழலில் சமர்ப்பிக்கப்படுகின்ற ஒரு வரவு – செலவுத்திட்டத்திலிருக்கும் சகல அம்சங்களையும் சகலரும் ஏற்றுக் கொள்வதே யதார்த்தபூர்வமான நிலைப்பாடாகும். இல்லையென்றால் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்திருக்கும் ஜனாதிபதி அவர்களுக்கு நன்றி சொல்லியிருக்கவேண்டிய  அவசியம் இல்லையென்று நான் நேசமுடன் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். கடந்த காலங்களில் நிறைவேற்றப்பட்ட வரவு – செலவுத்திட்டத்தை விடவும் இந்த வருடம் சமர்பிக்கப்பட்டிருக்கும் வரவு-செலவுத்திட்டமானது மிகவும் முன்னேற்றகரமானதாகவே உள்ளது. இது ஒரு வளர்ச்சியை நோக்கிய பாதையைச் சுட்டிக்காட்டி நிற்கின்றதென்பதால் நாம் இதில் திருப்தி அடைகின்றோம். இனிவரும் ஆண்டுகளில் வரப்போகும் வரவு – செலவுத்திட்டங்கள் இதைவிடவும் முழுமையானதாக இருக்குமென்பதற்கு இது ஓர் உரைகல்லாகும். எனவே அதற்காக சேர்ந்துழைப்பதற்கு அரசியல் தலைமைகள் யாவும் தயாராக வேண்டுமென்று நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

கௌரவ பிரதிச் சபாநாயகர் அவர்களே!

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் எமது வாழ்விடங்களைப் புனர மைத்து தென்னிலங்கை மக்களின் வாழ்வாதார வசதிகளுக்கு ஒப்பாக கொண்டுவருவதோடு அதிலிருந்து தொடங்கி இலங்கைத் தீவின் அனைத்து மக்களுக்குமான சமூக பொருளாதாரத் திட்டங்களை முன்னெடுத்து எங்கும் சமப்படுத்தப்பட்ட பொருளாதார இலக்கு நோக்கி நகர வேண்டும். அரசியல் மக்களைப் பிரித்து வைக்கின்றது.பொருளாதாரம் மக்களை ஒன்றிணைக்கிறது. இந்த வகையில் சகல இன மக்களுக்குமான சமூக பொருளாhரத்தை மேம்படுத்தும் நோக்கில் தொடர்ந்தும் நான் செயற்பட விரும்புகின்றேன். இலங்கைத் தீவில் கடந்த காலங்களில் மாறி மாறி ஆட்சிக்கு வந்திருந்த அரசியல் தலைமைகளால் அரசியலுரிமைச் அற்றவர்களாக நடுத்தெருவில் விடப்பட்டிருக்கும் தமிழ் மக்களின் அரசியல் வாழ்வியல் சமூக மற்றும் பொருளாதார உரிமைகளுக்காக நான் ஆராது தொடர்ந்தும் உழைப்பதற்கு இந்தச் சபையினூடாக உறுதி எடுக்கின்றேன். அரசியல் பொருளாதார சமூக ரீதியாக நலிந்துபோன மக்கள் சமூகத்தை எனது அமைச்சினூடாக மேல்நோக்கித் தூக்கிநிறுத்த நான் விரும்புகின்றேன். இல்லாமை என்பது எங்கும் இல்லாதொழிக்கப்பட வேண்டும்.என்ற உயரிய எண்ணங்களைச் சுமந்து நிற்கும் மக்களுக்கான சமூக பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பவே நாம் அனைவரும் உறுதி கொண்டு உழைக்க வேண்டும்.

கௌரவ பிரதிச் சபாநாயகர் அவர்களே நான் தொடர்ச்சியாக 16 வருடங்களாக இந்த நாடாளுமன்றில் மக்கள் பிரதிநிதியாக அங்கம் வகித்து வருகின்றேன். எமது ஜனநாயக வழிமுறைப் பயணத்தில் வன்முறைகளைத் தூண்டிவிடவே அன்றி யுத்தத்தை நடத்தி அதன்மூலம் அரசியலுரிமைகளைப் பெற்றுவிடலாமென்றோ நான் ஒருபோதும் விரும்பியிருக்கவில்லை. யுத்தத்தின் மூலம் அரசியலுரிமைப் பிரச் சினைக்குத் தீர்வு காண்பதென்பது தமிழ் மக்களை அவலங்களுக்குள் சிறைப்படுத்தவே வழிசமைக்குமென்று நாம் முன்னெச்சரிக்கையாகக் கூறிவந்திருக்கின்றோம். அதற்காக அழிவு யுத்தத்தை நிறுத்தி அரசியல் பேச்சுவார்த்தைக்கு வருமாறு புலிகளின் தலைமைக்கு பகிரங்கமாகவே கோரிக்கை விடுத்து வந்திருந்தோம். அழிவு யுத்தத்தின் மூலம் அரசியலுரிமைகள் அனைத்தையும் பெற்றுவிடலாமென்று கற்பனைத் தெரில் ஏறி கனவு கண்டிருந்த அனைத்துத் தரப்பினரையும் நாம் அரசியல் பேச்சுவார்த்தைக்கு ஆதரவளியங்களளென தொடர்ந்தும் பகிரங்கமாதகவே கோரியிருந்தோம். ஆனாலும் எங்களது கருத்துக் களைச் சம்பந்தப்பட்ட சக தமிழ்த்தரப்பினர் எவரும் ஏற்றிருக்க வில்லை. இதனால் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரவேண்டிய கட்டாயத்தில் அரசாங்கம் நடவடிக்கையில் ஈடுபட்டது. இதில் நாம் முன்னெச்சரிக்கையாக சொல்லி வைத்தது போல் அரசியல் தீர்வு முயற்சிகளுக்கான அனைத்துக் கதவுகளையும் அடைத்து மூடிவிட்டு அழிவு ஆசைகளினால் எமது மக்கள் மீது அவலங்களையும் அழிவுகளையும் இடம்பெயர்ந்து வாழும் துயரங்களையும் சுமத்தி விட்டிருக்கிறார்கள் எம்மைப் பொறுத்தவரையில் எமது அரைசியலுரி மைகளை நாம் பெறவேண்டுமேயானால் அழிந்துபோன எமது வரலாற்று வாழ்விடங்களை மறுபடியும் அழகிய வாழ்விடங்களாக கட்டியெழுப்ப வேண்டுமானால்; சிதைந்துபோன எமது மக்களின் வாழ்வியல் உரிமைகளை மறுபடியும் நிலைநிறுத்த வேண்டுமேயானால் அரசாங்கத்துடன் பேசியே அனைத்தையும் சாதிக்க முடியுமென்று நான் நம்புகின்றேன்.

இரண்டாம் உலக யுத்தத்தின் போது ஹிட்லரின் பாஸிச உண்ணங் களினாலும் தான் மட்டுமே உலகத்தை அளவோடு மென்று அடங்காத ஆசைகளினாலுமே ஜேர்மனிய தேசம் அழிந்து சிதைந்துபோனது. இரண்டாம் உலகப்;போரை முடுக்கிவிட்டிருந்த ஹிட்லரின் அதிகார வெறிபிடித்த எதேசத்திகாரத்தை முறியடிப்பதற்காக அந்த யுத்தத்தை ஒன்றிணைத்து எதிர்கொண்ட நாடுகளுடன் கூட்டுப்படைகள் ஜேர்மன் நாட்டுக்குள் புகுந்தவேளை, ஜேர்மனிய மக்களும் அழிவுகளைச் சந்தித்தார்கள். தனது அடங்காத அதிகார வெறியினால் தனக்கரிய படுகுழியை ஹிட்லர் தானாகவே தேடிக்கொண்டதை யாவரும் அறிவீர்கள். ஆனாலும் ஹிட்லரின் அழிவுக்குப் பின்னர் யுத்தத்துக்குப் பிந்திய ஜேர்மன் நாட்டின் புதிய அரச தம்மைத் தவறாக வழிநடத்திய ஹிட்லரின் தவறுகளை உணர்ந்துகொண்டு அமெரிக்கா பிரித்தானியா போன்ற நாடுகளோடு கைகுலுக்கிக் கொண்டது. தமிழ் நாட்டோடு யுத்தம் புரிந்தவர்கள் என்பதையே மறந்து தம்மை யுத்த சூழலுக்குள் தள்ளிவிட்டது. ஹிட்லரின் தவறே எனக்கருதி பகைமை பாராமல் அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவின் உறவுகளைப்  பலப்படுத்திக் கொண்ட ஜேர்மனிய மக்கள் அதே அமெரிக்காவின் துணையுடனேயே அழிந்து போன தமது தாய்நாட்டை மறுபடியும் புதுப்பொலிவோடு கட்டியெழுப்பினார்கள். இதுவே உலக வரலாற்றில் எமக்கு முன்பாக விரிந்துகிடக்கும் ஒரு படிப்பினையாகும். இதனை உதாரணமாகக் கொண்டு நாமும் எமது நாட்டில் செயற்பட உறுதிபூண வேண்டும்.எமது தேசத்தில் நடந்து முடிந்த அழிவுகளுக்கு யார் காரணம் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரையில் இலங்கை அரசையோ அன்றி இலங்கைப் படையினரையோ இந்திய அரசை அன்றி இந்தியப் படையினரையோ யாரும் தவறாக நினைப்பார்களோயனால் அதற்கு முன்பாக எமது தமிழ் அரசியல் தலைமைகளாய் யாவும் கிடைத்த சந்தர்ப்பங்களை ஏன் சரிவரப் பயன்படுத்தவில்லை என்பதை அவர்கள் முதலில் சிந்திக்க வேண்டும்.

அதற்காக நடந்து முடிந்த அழிகள் அனைத்துக்கும் காரணகர்த்தா வேலுப்பிள்ளை பிரபாகரன் என அவர்மீது மட்டும் பழிகளைச் சுமத்திவிட்டு தமிழ் அரசியல் தலைமைகள் வசதியாகத் தப்பித்துவிட முடியாது. நான் உட்பட அனைத்துத் தமிழ்த் தலைமைகளும் நடந்து முடிந்த அழிவுகளுக்கான தவறுகளை ஏற்றுத்தான் ஆகவேண்டும்.ஆரம்ப நாட்களில் ஓர் ஆயுதப் போராட்டத்தை வழிநடத்திச் சென்ற வர்களில் நானும் ஒருவன் என்பதனால் எமது மக்கள் சந்தித்திருந்த அழிவுகளுக்கும் இன்றைய அவலங்களுக்கும் ஏதோ ஒரு வகையில் நானும் காரணமானவன். என்ற தார்மீகப் பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கின்றேன். நான் இதனை இன்று நேற்றல்ல  இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் ஒவ்வொரு சந்தர்ப்பங்களின் போதும் கூறிவருகின்றேன். இதேபோன்ற அஹிம்சைப்போராட்டம் நடத்தியவர்கள் முதல் ஆயுதப்போராட்டம் நடத்தியவர்கள் வரை ஏனைய அனைத்து தமிழ் அரசியல் தலைமைகளும் எமது மக்களின் இன்றைய நிலைமைகளுக்குத் தாமும் காரணகர்த்தாக்கள்தான் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என நான் நேசமுடன் கேட்டுக் கொள்கின்றேன்.

(இடையீடு)

ஹிட்லரின் தவறான வழிநடத்தலுக்காக மனம் வருந்தி அமெரிக்காவு டன் கைகுலுக்கி தமது தேசத்தைக் கட்டியெழுப்பிய ஜேர்மனிய மக்களைப்போல் நாமும் எமது தரப்பில் செய்த தவறுகளுக்காக மனம் வருந்தி எமது தேசத்தைக் கட்டியெழுப்புவதற்காக இந்த அரசாங்கத்துடன் கைகுலக்கி நிற்கின்றோம். அதற்காக நாம் எமது மக்களி;ன் உரிமைகளுக்காக குரல் எழுப்புவதை யாரும் தவறு என்று கருதிவிடமுடியாது. வன்முறைகளற்ற மேன்முறையான வழிமுறையில் நடைமுறைச் சாத்தியமான அணுகுமுறையில் நாம் தொடர்ந்தும் அர சாங்கத்தின் உறவுகளுக்கு கரம் கொடுக்கின்ற அதேவேளையில் தமிழ் மக்களின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுப்போம். உரிமை என்பது பெறுவதற்காகவோ அன்றி வெறுமனே பேசிக்கொண்டிருப்பதற்காக அல்ல. ஆகவே அனைத்து தமிழ் பேசும் கட்சிகளும் எமது உரிமைகளைப் பெறுவதற்காக ஒன்றுகலந்து பேசுவோம். வாருங்கள்.என்று  நான் மீண்டும் இந்தச் சபையினூடாகப் பகிரங்கமாக அழைப்பு விடுக்கின்றேன்.

கௌரவ பிரதிச் சபாநாயகர் அவர்களே!

இலங்கை – இந்திய ஒப்பந்தத்துக்கு முந்திய அரசுகள் யாவும் எமது மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினையைத் தீராப் பிரச்சினையாகக் கருதி தீர்க்க விரும்பாமல் காலங்கடத்தி வந்திருக்கின்றன. ஆனாலும் அதற்குப் பின்னரான அரசுகள் யாவும் அரசியல் தீர்வுக்கான கதவுகளைத் திறந்து விட்டிருந்தாலும் எமது தமிழ் தலைமைகள் கிடைத்த சந்தர்ப்பங்களைச் சரிவரப் பயன்படுத்தும் விடயத்தில் தவறுகளை விட்டிருக்கின்றன. அதற்காக நான் இந்தச் சபையினூடாக மனம் வருந்தி எமது மக்களுக்காக மனதாபிமான அடிப்படையிலான கோரிக்கையினை விடுக்க விரும்புகின்றேன். தமிழ் மக்களின் குரலாகவும் அவர்களது மனிதாபிமான வேண்டுகோளாகவும் நான் கேட்பது இவைகளை மட்டுமே மேதகு ஜனாதிபதி அவர்கள் முன்னெடுத்துவரும் நடைமுறைச் சாத்தியமான அரசியல் தீர்வு முயற்சிகள் விரைவுபடுத்த வேண்டும்.யுத்ததால் இடம்பெயர்ந்து எஞ்சியுள்ள மக்களையும் மீளக்குடியமர்த்த வேண்டும். அவர்களுக்கான வாழ்வாதார வசதிகளை உருவாக்கிக் கொடுக்க வேண்டும். ஏற்கனவே மீள்குடியேற்றப்பட்டவர்களுக்கு மேலும் அவர்;களுக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் விரைவாகச் செய்து கொடுத்தல் வேண்டும். சரணடைந்தோர் மற்றும் அரசியல் காரணங்களுக்காக கைது செய்யப்பட்டிருப்போர் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும். அவர்கள் தமது இயல்பு வாழ்வில் ஈடுபடுவதற்கும் சுயதொழில்; வாய்ப்புக்களில் ஈடுபடுவதற்கும் அதேவேளையில் அவர்க்ள மாணவர்களாக இருக்கம்பட்சத்தில் அவர்களுக்கான கல்வி வசதிகளை ஏற்படுத்தவும் உதவி புரிய வேண்டும். இவற்றை மேதகு ஜனாதிபதி அவர்கள் நிறைவேற்றி முடிப்பார் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு என்பதை உறுதியாகத் தெரிவிக்க விரும்புகின்றேன்.

உறவுக்குக் கரம் கொடுப்போம்.!

உரிமைக்குக் குரல் கொடுப்போம்.!

என்றும் நாம் மக்களுக்காக ! தேசத்துக்காகத் தியாகங்களை ஏற்போம்.! நன்றி.

20 மே 2000

Related posts:

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 5 மார்ச் 2003 அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்
இன சமத்துவத்தின் உரிமையின் குரலாகவும் இன ஐக்கியத்தின் குரலாகவும் ஒலிப்போம் - 2017 நாடாளுமன்றில் டக்ள...
வடக்கில் சர்வதேச தரத்திலான விளையாட்டு அரங்கு அமைக்கப்படவேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலி...

அகிம்சை குரலுக்கு மதிப்பளித்திருந்தால்  இலங்கை இரத்தம் தோய்ந்த தீவாக மாறியிருக்காது – நாடாளுமன்றில் ...
திருக்கோணேஸ்வரர் ஆலயப் பகுதியை புனிதப் பிரதேசமாக பிரகடனப்படுத்துமாறு  டக்ளஸ் தேவானந்தா பிரதமரிடம் கோ...
மலையக மக்களின் உரிமைகளைப் பறிக்கத் துணைபோனவர்கள் தமிழர்களின் உரிமைகள் பற்றி பேச அருகதையற்றவர்கள் - ந...