கிட்டங்கிப் பாலம் புனரமைக்கப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Thursday, March 9th, 2017
பொது மக்களுக்கு பல்வேறு இடர்களை எற்படுத்திவரும் கிட்டங்கிப் பாலத்தை புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம், நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் பெருந்தெருக்கள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்லவிடம் வலியுறுத்தியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள், அம்பாறை மாவட்டத்தில் கல்முனை கரையோரப் பிராந்தியத்தையும், நாவிதன் வெளி படுவான்கரைப் பிராந்தியத்தையும் இணைக்கின்ற கேந்திர முக்கியத்துவம் பெற்ற கிட்டங்கிப் பாலமெனப்படுகின்ற பகுதி கடந்த பல தசாப்த காலமாக எவ்விதப் புனரமைப்புப் பணிகளும் மேற்கொள்ளப்படாமல் இருப்பதால், வெள்ளம் ஏற்படுகின்ற அனைத்துக் காலங்களிலுமாக தொடர்ந்து இரண்டு, மூன்று பேர் பலியாகி வருவதாகவும், விவசாயம், கல்வி, போக்குவரத்து, பொருளாதாரம், சுகாதாரம் என பல துறைகளிலும் அப்பகுதி மக்கள் பாரிய பாதிப்பு  நிலையை அடைவதாகவும் தெரிய வருகிறது.
950 மீற்றர் நீளமுடைய கிட்டங்கி தாம்போதியுடனான இப்பகுதியில் 75 மீற்றர் நீளமான இரு பாலங்கள் அமைக்கப்பட்டு, ஏனைய தரைப் பாதை புனரமைக்கப்பட்டால், நாவிதன்வெளிப் பகுதியிலுள்ள சுமார் 25 ஆயிரம் ஏக்கர் வயல் நிலத்திற்கான போக்குவரத்தினை மேற்கொள்வதற்கும், வெள்ள அபாயங்களிலிருந்து மக்கள் பலியாவதைத் தவிர்த்துக் கொள்வதற்கும், கொழும்பு – கல்முனைக்கான போக்குவரத்திற்குரிய பிரதான பாதையாக இதனை பயன்படுத்துவதற்கும் இயலும் என்றும் தெரிய வருகின்றது.
எனவே, மேற்படி இரு பாலங்களையும் அமைத்து, பாதையையும் புனரமைப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


13வது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாதவர்கள் புதிய அரசியலமைப்பின் பிரகாரம் உருவாகும் தீர்வை...
வடமாகாணத்தில் பாழடைந்து கிடக்கும் அணுகு வீதிகள் பாலங்கள் எப்போது புனரமைக்கப்படும் - நாடாளுமன்றில் டக...
பயிற்சிக்காக விறகுக் கட்டையை கூட தூக்காதவர்கள் மாணவர்களை பலிகொடுத்தே வீரம் பேசுகின்றனர்!