உண்மையைச் சொன்னால் போலிகளுக்கு கசக்கிறது என்கிறார் அமைச்சர் டக்ளஸ்!

Friday, October 9th, 2020

போலித் தமிழ்த் தேசியத்தின் எடுபிடிகளாக இருந்து, மக்களின் அவலங்களுக்கு துணைபோகாமல், எமது மக்களின் நலன்சார்ந்து செயற்படுவதற்கு அனைத்து தமிழ் ஊடகங்களும் முன்வர வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(06.10.2020) நிதித் திருத்தக் கட்டளைச் சட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மற்றும் ஏற்றுமதி, இறக்குமதி சட்டத்தின் கீழான கட்டளைகள் தொடர்பிலான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இக்கோரிக்கையை விடுத்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் –

குறிப்பாக, தேச கட்டுமான வரி, பொருளாதார சேவைக் கட்டணம் மற்றும் படுகடன் மீள் கொடுப்பனவு அறவீடு போன்றவற்றை நீக்குதல் மற்றும் துறைமுக மற்றும் விமான நிலைய அறவீட்டினை அதிகரித்தல் தொடர்பிலான விடயங்கள் நிதி திருத்தக் கட்டளைச் சட்டத்தின் கீழும், பொருட்களின் ஏற்றுமதி, இறக்குமதி கட்டுப்பாடு, ஏற்றுமதிப் பொருட்களின் தர ஒழுங்குவிதிகள் மற்றும் அவை தொடர்பிலான நிகழ்வுகள் தொடர்பிலான விடயங்கள் ஏற்றுமதி, இறக்குமதி சட்டத்தின் கீழும் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த நாட்டின் தற்போதைய சூழலில் பயன்மிக்கதான விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ள இந்த தருணத்தில், எமது இறக்குமதிகளை குறைத்து, ஏற்றுமதிகளை தரத்துடன் அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம் என்பதை மீண்டும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

அதேநேரம், நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று எச்சரிக்கை தலையெடுத்து வருகின்ற நிலையினையும் நாம் பொருட்படுத்தாமல் இருந்துவிட முடியாது. எனவே, அது குறித்தும் அவதானமாக செயற்பட வேண்டியதுடன், அதனது எதிர்கால சவாலை முன்வைத்தே நாம் நகர வேண்டிய ஒரு நிலைமையும் ஏற்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்துக் கொண்டு,

நான் இந்தச் சபையிலும், வெளியில் பகிரங்கமாகவும் அண்மையில் கூறியிருந்த சில கருத்துக்கள் தொடர்பில் குறிப்பிட்ட சில தமிழ் ஊடகங்களும், சில தனி நபர்களும் காரசாரமான விமர்சனங்களைத் தெரிவித்து வருகின்ற நிலையில், அது என் சார்ந்த தனிப்பட்ட விடயமல்லாது, இந்த நாட்டின் வரலாற்று விடயங்களில் ஒன்று என்பதாலும், அந்த வரலாற்றோடு வாழ்ந்து கொண்டிருப்பவன் என்பதாலும், அது தொடர்பில் சில கருத்துக்களை முன்வைக்க விரும்புகின்றேன்.

மனிதப் படுகொலைகளைத் தூண்டியும், அதனை ஊக்குவித்தும், வரவேற்றும், பட்டாசு கொளுத்தி கொண்டாடியும் வந்துள்ள தமிழர் தரப்பின் போலித் தேசிய அரசியல் கூட்டத்திற்கும், இந்தக் கூட்டத்தை இதே நோக்கங்களுக்காக வலிந்து, காலடியில் வீழ்ந்து கொண்டாடி, வளர்த்துக் கொண்டிருக்கின்ற குறிப்பிட்ட சில தமிழ் ஊடக வர்த்தகச் சந்தைகளுக்கும் இவர்களது இந்த காட்டுமிராண்டித்தன செயற்பாடுகளுக்கு எதிராக உண்மைகளை சொல்கின்றபோது, கசப்பு ஏற்படுவது இயல்புதான்.

அண்மையிலே யாழ்ப்பாணம், புங்குடுதீவு பகுதியிலே ஒரு பூசகர் கொல்லப்பட்டுள்ளார். இவர் எதற்காகக் கொலை செய்யப்பட்டார் என்பதை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு, ஆராய்ந்து, அதனது காரணத்தைக் கண்டுபிடிக்கும் முன்பாக,  சில தமிழ்  ஊடகங்கள் அந்தக் கொலைக்கான காரணத்தைக் கண்டுபிடித்து, அவர் பசுவதைக்கு எதிராகக் குரல் கொடுத்து வந்தததால் கொல்லப்பட்டுள்ளார் என்ற வகையில் தமது யூகங்களை வெளிப்படுத்தி இருந்தன.

ஆனால், பொலிஸார் இக் கொலை தொடர்பில் மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து அந்த பூசகர் வேறொரு காரணத்திற்காக கொல்லப்பட்டுள்ளார் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

தற்போது இந்த நாட்டிலே பசுவதை தடுப்பு தொடர்பில் இருவேறு கருத்துக்கள் பல்வேறு சமூகங்களிடையே பல்வேறு வாதப்பிரதிவாதங்களை உண்டுபண்ணி வருவதை அவதானிக்க முடிகின்றது. இந்த வாதப்பிரதிவாதங்கள் மீண்டுமொரு இனவாத மோதலை நோக்கியதாக முடிவுறக்கூடாது என்பதில் சமூகப் பொறுப்பு கொண்ட நாங்கள் கண்ணும் கருத்துமாக இருந்து வருகின்றோம்.

இத்தகையதொரு நிலையில், பசுவதைக்கு எதிராக அந்தப் பூசகர் கொல்லப்பட்டார் என்ற வகையிலான செய்தியை வெளியிடுவதன் மூலமாக  சமூகங்களுக்கிடையில் ஒரு மோதலை உருவாக்குவதற்கான முயற்சிக்கு அது வித்திடுகின்றது என்பதை பலரும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

இந்த குறிப்பிட்ட சில தமிழ் ஊடகங்கள் இப்படித்தான் காலம் காலமாக சமூகங்களிடையே, எமது மக்களிடையே குழப்பங்களை ஏற்படுத்துகின்ற வகையில், மோதல்களை உருவாக்குகின்ற வகையில் செயற்பட்டு வருகின்றன என்பதற்காகவே நான் இந்த விடயத்தை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். அதாவது, மனித கொலைகளை வரவேற்பதில் அதனை ஊக்குவிப்பதில் இவை மகிழ்கின்றன.

ஒரு வர்த்தக நிலையம் தனது வர்த்தக அடையாளத்தை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தவதற்கு எத்தகைய முயற்சிகளை எல்லாம் மேற்கொள்கின்றதோ, அதேபோன்றுதான் இந்த குறிப்பிட்ட சில தமிழ் ஊடகங்களும் செயற்படுகின்றன.  இந்த குறிப்பிட்ட சில தமிழ் ஊடகங்களின் வர்த்தக அடையாளங்கள்தான் மனித அவலங்கள், மனதிப் படுகொலைகள் என்பன. இத்தகைய வர்த்தக அடையாளங்களை மக்கள் மயப்படுத்துவதற்கென இந்த குறிப்பிட்ட சில தமிழ் ஊடகங்கள் மனித அவலங்களை, மனிதப் படுகொலைகளை ஊக்குவிக்கின்ற – தூண்டுகின்ற சில சுயலாப தமிழ் அரசியல்வாதிகளைத் தூக்கிப் பிடித்துக் கொண்டாடி வருகின்றன என்பதூன் உண்மை நிலைமையாக இருந்து வருகின்றது.

மாகாண சபைகளுக்கு வித்திட்ட 13வது திருத்தச் சட்டம் எப்போது கைச்சாத்திடப்பட்டது, திலீபனின் மறைவு எப்போது இடம்பெற்றது என்பதுகூட தெரியாத ஒருவர், பிரபலமான ஒரு தமிழ்ப் பத்திரிகையிலே, ‘திலீபனின் நினைவுகூறலை கொச்சைப்படுத்தும் தவறான வரலாற்றை தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முயற்சிக்கிறார்’ என்றும், ‘ ஆனால், உண்மை வரலாறு யார், யாரை எங்கு வைக்க வேண்டுமோ அங்கு நிச்சயமாக வைத்தே தீரும்’ என்றும் எழுதியிருக்கிறார்.

அந்த வரலாற்றுடன் வாழ்ந்து வருகின்ற நான், தவறான வரலாற்றை நான் ஒரு போதும் கதைப்பதில்லை என்பதை  உண்மை வரலாறு தெரிந்தவர்களும், என்னை நன்கறிந்த எமது மக்களும், ஏன் முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினர்களும் நன்கு அறிவார்கள் என்பதை இங்கு நினைவுபடுத்துவதுடன், உண்மை வரலாறு தற்போதே யார், யாரை எங்கெங்கே வைத்திருக்கிறது என்பதை இந்தக் கட்டுரையாளர் இன்றும் அறியாமல் இருப்பது அவர்மீதான அனுதாபத்தையே என்னுள் ஏற்படுத்தியிருக்கின்றது என்பதையும் நான் இங்கு தெரிவித்துக் கொள்ள விரும்புவதுடன், உண்மை வரலாறு தெரிந்த, திலீபனின் கொலை வெறியினால் பாதிக்கப்பட்ட, அதனால் தப்பியோடிய தற்போது திலீபன் தொடர்பில் வஞ்சகப் புகழ்ச்சி பாடிக் கொண்டிருக்கின்ற தமிழ் அரசியல் தரப்பினர், எனது அந்தக் கருத்துக்கு எதிராக வாயே திறக்காமல் இருப்பதனையும் இங்கு சுட்டிக்காட்டுகின்றேன்.

எமது மக்களின் அவலங்களுக்கு எதிராகவும்,  அந்த அவலங்களை எமது மக்களுக்கு விளைவிப்போருக்கு எதிராகவும் போராட வேண்டிய அதேநேரம், அந்த அவலங்களிலிருந்து எமது மக்களை மீட்டெடுப்பதற்கும், அத்தகைய அவலங்கள் மீள எமது மக்களுக்கு ஏற்படாமல் இருப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதுடன், இந்த நாட்டில் தேசிய நல்லிணக்கத்தை வலுப்படுத்தி, எமது மக்கள் இலங்கையர்களாகவும் அதேநேரம் தமிழர்களாகவும் வாழ்வதற்கான உரிமைகளுடன் கூடிய கௌரவமான சூழலை உறுதிபடுத்தும்  நிலையிலேயே இன்னும் எனது மக்கள் நேயப் பணிகள் இணக்கப்பூர்வமாகத் தொடர்கின்றன.  இந்தப் பணிகளை நான் ஆரம்பித்திருந்திருந்த ஆரம்காலம் தொட்டு, என்மீது சேறு பூசல்களை மேற்கொண்டவர்களாக எமது மக்கள் மீது அவலங்களை திணிப்போரே இருந்து வருகின்றனர்.

எமது மக்களின் அழிவு இவர்களுக்கான அரசியல் வாழ்வு. எமது மக்களின் நிம்மதியான வாழ்வு இவர்களுக்கான அரசியல் அழிவு. இத்தகைய கொள்கைகளுக்கு துணை போகின்றவர்களாகவே இந்த குறிப்பிட்ட சில தமிழ் ஊடகங்களும் செயற்பட்டு வருகின்றன. இவர்களுக்கும் கொரோனாவுக்கும் இடையில் வேறுபாடுகள் இல்லை என்றே தோன்றுகின்றது.

எனது அரசியல் வரலாற்றில் பல்வேறு வீண் குற்றச்சாட்டுகளை தங்களது சுயலாப அரசியலுக்காக என்மீது சுமத்தி வந்த தரப்பினர், கடந்த கால அவர்களுக்கான நல்லாட்சி அரச காலத்தில் அந்த குற்றச்சாட்டுகள் யாவும் சட்டரீதியாக விசாரிக்கப்பட்டு, உண்மை குற்றவாளிகள் இனங்காணப்பட்டதன் பின்னர், இப்போது மௌனிகளாக இருக்கின்றார்கள்.

இந்த உண்மைகளை அறிந்தும், இன்று மீண்டும் என்மீது சுமத்துவதற்கு வீண் குற்றச்சாட்டுகளை சோடிக்க முடியாமல், என்மீது ஏற்கனவே சுமத்தப்பட்ட வீண் குற்றங்களுக்கான உண்மை குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிரூபனமானதன் பின்னரும், அந்த விடயங்களையே மீண்டும் என்னுடன் தொடர்புபடுத்தி பழைய பல்லவியை பாடுவதற்கும் சில தமிழ் ஊடகங்கள் முயற்சிகளை மேற்கொள்வது, அவர்களது இயலாத்தன்மை ஊடக செயற்பாடுகளையே எடுத்துக் காட்டுகின்றன.

எனவே, போலித் தமிழ்த் தேசியத்தின் எடுபிடிகளாக இருந்து, எமது மக்களின் அவலங்களுக்கு துணைபோகாமல், எமது மக்களின் நலன்சார்ந்து செயற்படுவதற்கு இத்தகையவர்கள் இப்போதாவது முன்வர வேண்டும் என்ற கோரிக்கையையே என்னால் முன்வைக்க முடியுமாக இருக்கின்றது என்பதை தெரிவித்து, விடைபெறுகின்றேன்.

நன்றி.

Related posts:

தடுப்பு முகாம்களில் பல கைதிகள் சுய நினைவின்றிக் காணப்படுவதாக அண்மையில் வெளியான செய்திகளின் உண்மை நில...
பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தை சீர்குலைத்துவிடக் கூடாது – நாடாள...
நீதித்துறைச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் - வலியுறுத்துகிறார் டக்ளஸ் எம்....

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 5 மார்ச் 2003 அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்
மருந்துப் பொருட்களின் விலைக் குறைப்பு தொடர்பில் மேலும் அவதானம் செலுத்தப்பட வேண்டும் - நாடாளுமன்றில் ...
தக்க தருணத்தில் நான் கூறிய தீர்க்கதரிசனமே இன்று வென்றிருக்கிறது – அமைச்சர் டக்ளஸ் நாடாளுமன்றில் சுட்...