நீதித்துறைச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் – வலியுறுத்துகிறார் டக்ளஸ் எம்.பி.!

Tuesday, September 3rd, 2019


இலங்கை நீதிமன்றங்களிலே சுமார் 7 இலட்சத்து 50 ஆயிரம் வழக்குகள் தேங்கிக் கிடப்பதாக அண்மையில் ஒரு தகவல் வெளியாகி இருந்தது.  நீதிமன்றங்களின் மூலமாக மக்கள் நியாயத்தையே எதிர்பார்க்கின்றனர். இத்தகைய நியாயத்தை வழங்குவதற்கான வழிகளில் வழக்குத் தீர்ப்புகளை வழங்குவதில் ஏற்படக்கூடிய தாமதங்களைக் கூடியவரையில் குறைத்துக் கொள்வதானது மிக முக்கியமான விடயமாகும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற 1978ஆம் ஆண்டின் 02ஆம் இலக்க நீதித்துறைச் சட்டத்தின் கீழான கட்டளை தொடர்பிலான விவாதத்தில் கலந்து கொண்டபின் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

இந்த நாட்டைப் பொறுத்த வரையில், உயர் நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம், மேல் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம், நீதவான் நீதிமன்றம் என்கின்ற நீதி மன்றக் கட்டமைப்புகளில் தற்போது நிலுவையில் உள்ள வழக்குகளின் தொகையே 7 இலட்சத்தையும் தாண்டியதாக இருக்கின்றன.

மேலும், இந்த நீதிமன்றக் கட்டமைப்புகளில் தற்போது விசாரிக்கப்பட்டு வருகின்ற வழக்குகளும் ஏராளமாகும். இவற்றின் தீர்ப்புகள் வழங்கப்பட மேலும் காலதாமதங்கள் ஆகலாம். காலதாமதமாகின்ற நீதியானது மறுக்கப்பட்ட நீதிக்கு சமமானது என்றும் கூறப்படுவதுண்டு.

இத்தகைய காலதாமதங்கள் மக்களை நீதிமன்றக் கட்டமைப்புத் தொடர்பில் விரக்தி நிலைக்குத் தள்ளிவிடுகின்ற செயற்பாடுகளையே மேற்கொள்கின்றன. அம் மக்களை பல்வேறு இழப்புகளுக்கு முகங்கொடுக்கச் செய்கின்றன.

குற்றம் தொடர்பிலான ஒரு வழக்கு காலதாமதங்களுக்கு உட்படுமாயின் அவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவருக்குத் தொழில் செய்ய இயலாத, சமூக வாழ்க்கையில் முகங்கொடுக்க முடியாத நிலை ஏற்படுகின்றது. வழக்;குத் தீர்ப்பு வெளிவந்து அவர் குற்றமற்றவர் என நிரூபனமானாலும், அவரது அதுகால வரையிலான இழப்புகளுக்குப் பொறுப்புக் கூறுவது யார்? என்ற கேள்வி தொக்கி நிற்கின்றது.

வழக்குகளின் தீர்ப்புகள் தாமதாகின்றபோது சிலவேளை முறைப்பாட்டாளர்கள் இறந்துவிட நேரிடலாம். சாட்சியாளர்கள் வெளிநாடுகளுக்குச் செல்ல, அல்லது நீண்ட தாமதங்கள் காரணமாகச் சாட்சிகள் மறக்கப்படக்கூடிய சூழ்நிலைகள் ஏற்படலாம். இத்தகைய நிலைமைகளில் உரிய வழக்குகள் தொடர்பில் இத்தகைய காரணிகள் மாபெரும் அழுத்தங்களைப் பிரயோகிக்கலாம்.

1978 இலங்கை அரசியல் அமைப்புச் சட்டத்தின் 126 (5)ஆம் சரத்தில், அடிப்படை உரிமை தொடர்பான மனுவொன்று உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த தினத்திலிருந்து இரண்டு மாதங்களுக்குள்ளாக உயர் நீதிமன்றத்தினால் அதனை விசாரணை செய்து, முடிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த வகையில், இலங்கையில் வழக்கொன்று விசாரணை செய்யப்பட்டு, முடிக்கப்பட வேண்டிய காலவரையறையைக் குறிப்பிட்டுள்ள ஒரெயொரு எழுத்து மூல சட்ட மானியம் இது மாத்திரமே எனக் குறிப்பிடப்படுகின்றது. இந்தச் சட்ட மானியமானது அடிப்படை உரிமைகள் தொடர்பிலான வழக்குகளுக்கு மாத்திரமேயாகும்.

என்றாலும், இந்தச் சட்டம்கூட ஒழுங்கு முறையில் பின்பற்றப்படுகின்றதா? என்பதும் கேள்விக் குறியாக இருப்பதையும் அவதானிக்க வேண்டியுள்ளதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்;.

எனவே, வழக்குகள் காலதாமதமாகின்ற விகிதாசாரத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் அவசியமாகின்றன என்பதை இங்கே வலியுறுத்த விரும்புகின்றேன்.  அந்த வகையில், நீதித்துறைச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தையும் இங்கு உணர்த்துகின்றேன். அதேநேரம், கொண்டுவரப்படக்கூடிய திருத்தங்களின் ஊடான ஏற்பாடுகளும் காலதாமதம் என்கின்ற வலைக்குள் திணிக்கப்படுமானால், அத்தகைய திருத்தங்களால் எவ்விதமான பயன்களும் ஏற்படப் போவதில்லை என்பதுடன், வெறும் விரயங்களே எஞ்சும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

பாரிய நிதிக் குற்றங்கள் மற்றும் ஊழல், மோசடி தொடர்பிலான வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்துவதற்காக எனக் கூறப்பட்டுக் கொண்டு வரப்பட்ட மூன்று நீதிபதிகள் அடங்கிய விசேட நீதிமன்றத்தால் இதுவரையில் எத்தனை வழக்குகள் விசாரித்து முடிக்கப்பட்டுள்ளன? என்ற கேள்வி எழுகின்றது

தேர்தல் காலங்களின்போது சில வழக்குகளைத் துரிதப்படுத்தப் போவதாக ஊடகங்களிலே அடிக்கடி தகவல்களைக் காண முடிகின்றன. பின்னர் காலப் போக்கில் இன்னொரு தேர்தல் வரும்போதுதான் அதே வழக்குகள் மீண்டும் துரிதமாக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகின்றன. அந்த வகையில் இத்தகைய தேர்தல் காலத்திற்குரிய வழக்குகள் எனத் தனியான ஒரு வகை வழக்குகளும் இந்த நாட்டிலே இருப்பதாகவும் தெரிய வருகின்றது. எனினும், அவற்றில் கூட எதுவும் இதுவரையில் தீர்ந்ததாகவும் இல்லை.

எனவே, வழக்குகளைத் தாமதப்படுத்துதல் என்பதற்கும் வழக்குகளைத் துரிதப்படுத்துதல் என்பதற்கும் இடையிலான வித்தியாசங்களை இங்கே நன்குணர்ந்து கொள்ளல் அவசியமாகும்.

இன்றைய தினம் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு இந்த விவாதத்திலே சம்பந்தப்பட்டிருப்பதால், மேலுமொரு விடயம் தொடர்பிலும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

சிறைச்சாலைகளிலே இருந்து கொண்டு இந்த நாட்டிலே போதைப் பொருள் வர்த்தகம் பாரிய பரிமாணத்திலும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அடிக்கடி தகவல்கள் வெளியாக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாகவே இந்த நாட்டில் மீண்டும் மரண தண்டனை கொண்டு வரப்பட வேண்டும் என்றும் கூறப்படுகின்றது.

அதாவது, இந்த நாட்டின் சிறைச்சாலைகள் கட்டமைப்பைப் பாதுகாப்பதற்குரிய வலுவான ஒரு நிலை இல்லாததையே இந்தக் கூற்றுகள் எடுத்துக் காட்டுகின்றன. எனவே, இவ்வாறு பாதுகாப்பற்ற ஒரு கட்டமைப்பினைச் சிறைச்சாலைக் கட்டமைப்பு எனக் கூற முடியுமா? என்ற கேள்வி எமது மக்கள் மத்தியில் எழுவதிலும் நியாயமிருக்கின்றது. எனவே, முறைப்படுத்தப்படாமல் சட்டங்கள் நடைமுறைப் படுத்தப்படுவதனால்தான் இத்தகைய மிக மோசமான நிலை இந்த நாட்டுக்குள் உருவாகியிருக்கின்றது.

சிறைக்குள் இருப்பவர்களால் சர்வதேச ரீதியின் ஊடாகவும் இந்த நாட்டில் பாரியளவிலான போதைப் பொருள் விற்பனைகள் மேற்கொள்ளப்படுமானால், வெளியில் இருப்பவர்களால் அதைவிட அதிகளவில் மேற்கொள்ளப்பட முடியாது எனக் கூற முடியுமா? எனக் கேட்க விரும்புகின்றேன். எனவே, போதைப் பொருள் கடத்தல்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டு, சிறைச்சாலைகளில் அவர்களைத் தடுத்து வைத்திருப்பதால் எவ்விதமான பயனும் இல்லை என்றே கருத வேண்டியுள்ளது.

அதேநேரம், போதைப் பொருள் காரணமாக, அல்லது சிறு அளவிலான போதைப் பொருள் விற்பனை காரணமாக சிறைக்குச் செல்வோர்களில் பலரும் பாரிய போதைப் பொருள் விற்பனையாளர்களாக வெளியே வருகின்ற நிலைமைகளும் இல்லாமல் இல்லை.

மறுபக்கத்தில் இந்த நாட்டிலே தர்மசக்கரத்திற்கும், கப்பல் சுங்கானுக்கும் – புத்த பெருமானின் தலைக்கும், ஆந்திர மாநிலத்தில் வழிபடப்படுகின்ற மகவீர் ஜயந்தி என்கின்ற தெய்வத்தின் தலைக்கும்  வித்தியாசங்கள் தெரியாதவர்களால் சட்டமும், ஒழுங்கும், நீதியும் இந்த நாட்டில் நிலைநாட்டப்பட்டுக் கொண்டும் இருக்கின்றது.

நீதித் தேவதையின் கண்கள்தான் கட்டப்பட்டுள்ளனவே தவிர நீதியை நிலைநாட்டுபவர்களது கண்கள் கட்டப்படவில்லை  என்பதை இவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

நாட்டில் நீதிமன்றக் கட்டமைப்புகளில் காணப்படுகின்ற தேங்கிக் கிடக்கின்ற வழக்குகளைத் துரிதப்படுத்தி விசாரித்து முடிப்பதற்காக உரிய பொறிமுறை உடனடியாக வகுக்கப்பட வேண்டிய அவசியம் மேலோங்கியிருக்கின்றது

அந்த வகையில் அரசின் சார்பில் நிறைவேற்றப்பட வேண்டிய பொறுப்புகள் பலவுள்ளன. குறிப்பாக, தற்போதுள்ள, காலங்கடந்த சட்டங்களை திருத்த வேண்டியுள்ளன.

நீதிமன்றங்களில் வழக்குகள் தொடர்பிலான செயற்பாடுகளில் காணப்படுகின்ற பலவீனங்களை அகற்றி, அச் செயற்பாடுகள் நவீனமயப்படுத்தப்படல் வேண்டும்.

நீதிமன்றங்களினதும், நீதிபதிகளினதும்; எண்ணிக்கையினை அதிகரிப்பதுடன், வளங்களும் போதியளவில் அதிகரிப்படல் வேண்டும்.

மொழிப் பிரச்சினைகள் காரணமாக வழக்குகள் தாமதிக்காதிருக்கும் வகையில் அந்தந்த மொழிகளில் பரிச்சயம் கொண்ட நீதிபதிகள் போதியளவில் தேவைக்கேற்ப நியமிக்கப்படல் வேண்டும்.

சட்டமா அதிபர் திணைக்களத்திற்கென இணைத்துக் கொள்ளப்படுகின்ற சட்டத்தரணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன், திணைக்களத்தின் ஏனைய பணியாளர் சபையினையும் விரிவுபடுத்தப்படல் வேண்டும்.

நீதிமன்ற வழக்குகள் தொடர்பிலான விடயங்களின்போது நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பொறிமுறை ஒன்றினை ஏற்படுத்தப்படல் வேண்டும்.

அதேநேரம், இந்த நாட்டிலே சுமார் 300க்கும் மேற்பட்ட மத்தியஸ்த சபைகள் செயற்பட்டு வருவதாகவும், அவற்றிலே சுமார் 7000க்கும் அதிகமான மத்தியஸ்தர்கள் செயற்பட்டு வருவதாகவும் தெரிய வருகின்றது.

இலங்கையின் மத்தியஸ்த சபை முறைமை என்பது உலகின் பாரிய மத்தியஸ்த சபை முறைமையில் சீனாவுக்கும், பிலிப்பைன்ஸ் நாட்டிற்கும் அடுத்ததாக மூன்றாவது இடத்தை வகித்து வருவதாகவும் கூறப்படுகின்ற நிலையில், இந்த மத்தியஸ்த சபை முறைமை தொடர்பிலும் மிக அதிகளவிலான அவதானங்களைச் செலுத்த வேண்டும்.

சட்டம் என்பது ஒரு இருட்டறை! அதில் வக்கீலின் வாதம் என்பது ஒரு விளக்கு. அது ஏழைகளுக்கு எட்டாத விளக்கு என்று கூறினார் பேரறிஞர் அண்ணா.

உண்மையும் அர்த்தமும் நிறைத்த இந்த அறிவுரை அழிவு யுத்தத்தின் வடுக்களை இன்னமும் சந்தித்து வரும் தமிழ் பேசும் மக்களுக்கே பொருத்தமாக அமைந்திருக்கிறது.

சட்டம் படித்த தமிழ் மேதாவிகள் அதிகாரத்தில் இருந்தும் சட்டத்தின் பிடியில் சிக்குண்டு தவிக்கும் தமிழ் மக்களின் வாழ்வில் எந்தவொரு ஒளியேற்றமும் இங்கு நடந்ததில்லை.

எந்த ஆட்சியாளர்களிடமிருந்து பணப்பெட்டிகள் வழங்கப்படுகிறதோ அந்த ஆட்சியைக் காப்பாற்றவே தமிழ்த் தரகுச் சட்ட மேதாவிகள் தங்களது சட்ட மேதாவித்தனங்களைப் பயன்படுத்தி வருகிறார்கள்.

ஆட்சியைத் தக்கவைக்க சட்ட வல்லுமையைப் பயன்படுத்துவோர் மீட்சியின்றி சிறையில் வாடுவோரை மீட்க உதவினார்களா?.. இல்லை!… மாறாக,. எஞ்சியிருக்கும் முன்னாள் புலிகள் இயக்கப் போராளிகளையும் தமக்கு அச்சுறுத்தல் என்று கூறி அவர்களையும் உள்ளே தள்ளும் கைங்கரியத்தில் மட்டுமே ஈடுபட்டு வருகிறார்கள்.

இதைச் சுட்டிக்காட்டும் நூறுவீத அருகதை எனக்குண்டு. களுத்துறைச் சிறையில் என்னைத் தாக்கியவர்களுக்கு எதிராக என்னைச் சாட்சி சொல்ல நீதிமன்றம் அழைத்தது.

எய்தவன் இருக்க அம்பை எதற்கு நோவான் என்ற அடிப்படையில் நான் சாட்சி சொல்லச் சென்றிருக்கவில்லை. என்னைக் கொல்ல தற்கொலையாளியை அழைத்து வந்த பெண்மணி இன்னமும் சிறையில் இருக்கிறாள்.

அந்தப் பெண்மணியைக்கூட விடுதலை செய்யுமாறு நான் கேட்டும் நீதிச்சட்டம் அதற்கு இடமளிக்கவில்லை.

நான் சட்ட மேதாவி  அல்ல!.. ஆனாலும் சட்ட மேதைகள் என்னருகிலும் இருந்திருக்கிறார்கள், இன்னமும் சட்ட ஆலோசகர்கள் என்னுடன் இருந்து வருகிறார்கள்.

சட்டத்தரணியும் மனித உரிமை வாதியுமான அமரர் மகேஸ்வரி வேலாயுதம் ஊடாக பலநூறு சிறைக்கைதிகளை விடுவித்து அவர்களை நான் அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைத்த வரலாறு எனக்குண்டு.

அழிவு யுத்தம் முடிந்த கையோடு பன்னீராயிரத்து ஐந்நூறு புலிகள் இயக்கப் போராளிகளை மீட்டெடுத்து அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப் பெரிதும் பங்காற்றி இருக்கின்றேன்.

இத்தகைய எனது பெரும்பணிக்குச் சட்டத்தை விடவும் நான் அங்கம் வகித்திருந்த அரசுடனான நல்லிணக்க உறவின் திட்டங்களே காரணம்.

நான் சிறை மீட்டவர்கள் எவரையும் புலி என்றோ அல்லது வேறு எவறென்றோ பேதம் பார்த்தது இல்லை. எல்லோருமே நான் நேசிக்கும் எமது தமிழ்த் தேசத்தின் பிள்ளைகளாகவே இன்னமும் நான் பார்க்கிறேன்.

காலம் ஒரு செங்கோலை எம் கையில் விரைவில் தரும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. அப்போது,.. சிறைக்கைதிகளை மட்டுமன்றி அவலப் பெருங்காட்டில் அடைபட்டிருக்கும் அனைத்து மக்களையும் நான் மீட்டெடுப்பேன் எனவும் கூறிக்கொள்கின்றேன்.

Related posts:

சட்டம், ஒழுங்கு நடவடிக்கைகள்  வன்முறையைத் தூண்டுவதாக அமைந்துவிடக்கூடாது.  நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தே...
'யானைக்கு தும்பிக்கையாக இருப்பவர்கள் வாக்களித்த எமது மக்களுக்கு நம்பிக்கையாக இல்லை” – டக்ளஸ் எம்.பி...
தமிழ் மக்கள் மிதிக்கப்படாமல் - மதிக்கப்படும் சூழலை உருவாக்க வாருங்கள் நாடாளுமன்றில் அமைச்சர் தேவ...