இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டோருக்கு துரிதகதியில் நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா எம்.பி தெரிவிப்பு!

Thursday, October 11th, 2018

மீண்டும் இந்த நாட்டில் இயற்கை அனர்த்தம் ஏற்பட்டு இதுவரையில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 70 ஆயிரம் பேர் வரையில் பாதிப்புகளுக்கு உட்பட்டுள்ளனர் எனத் தெரிய வருகின்றது. இத்தகைய பாதிப்புகளுக்கு உட்பட்டுள்ளோர் தொடர்பில் உரிய நிவாரணங்கள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் என்பன துரிதமாக மேற்கொள்ளப்பட வேண்டிய அவசியத்தை இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன். அத்துடன், உயிரிழந்த அனைவரதும் குடும்ப உறுப்பினர்களுக்கும், எனது அனுதாபங்களை இங்கு தெரிவித்துக் கொள்கின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற ஏற்றுமதிகள் மற்றும் இறக்குமதிகள் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழான 2 கட்டளைகள், இலங்கை ஏற்றுமதி சட்டத்தின் கீழான கட்டளை தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

இந்த நாட்டின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தக நடவடிக்கைள் தொடர்பில் நாங்கள் தொடர்ந்து விவாதித்து வருகின்றோம். இந்த நாட்டு உற்பத்திகளின் ஏற்;றுமதியைவிட இறக்குமதி மீதான ஆர்வத்தினையே கடந்த சில காலமாக ஆட்சியாளர்கள் காட்டி வருவதால், ஏற்றுமதி தொடர்பிலான வலுவை நாம் இழந்து வரவேண்டிய நிலைமை உருவாயிற்று என்றே கூற வேண்டும்.

அடுத்தது, இரு வேறு கொள்கைகளைக் கொண்ட அரசியல் கட்சிகள் இந்த நாட்டின் ஆட்சிப் பொறுப்பினை கூட்டாக ஏற்றிருக்கின்ற இக்காலகட்டத்தில், எந்தக் கட்சியின் பொருளாதாரக் கொள்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது? என்பது குறித்து ஒரு தெளிவற்ற நிலையே தென்படுகின்றது.

கட்சிகள் எதுவாயினும், இந்த நாட்டின் நன்மை கருதி, நாட்டின் எதிர்கால நலன்களைக் கருத்தில் கொண்டு, பொருத்தமானதொரு பொருளாதாரக் கொள்கையே முன்னெடுக்கப்படல் வேண்டும். இது ஒரு தேசிய கொள்கையாக உருவாகுமிடத்து, அதனையே எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பின்பற்றக்கூடிய நிலைமை இங்கு உருவாக்கப்படல் வேண்டும். அதில், காலத்திற்கேற்ப, சூழலுக்கு ஏற்ப, சந்தை கேள்வி மற்றும் பெறுமதிக்களுக்கேற்ப நாட்டின் நன்மை கருதியதான மாற்றங்கள் மேற்கொள்ளப்படலாம்.

ஆனால், இந்த நாட்டைப் பொறுத்தவரையில், ஆட்சிக்கு வருகின்ற கட்சிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பொருளாதாரக் கொள்கைகளைக் கொண்டு வந்து அதனை நிறைவேற்றி வருவதால், இது காலத்திற்குக் காலம் அதுவும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குக் காலம் மாற்றப்படுவதால் பல்வேறு நெருக்கடி நிலைமைகளை நாடு சந்தித்து நிற்கின்றது.

இவ்வாறான கட்சிகள் கொண்டு வருகின்ற பொருளாதாரக் கொள்கைகள் அநேகமாக அடுத்த தேர்தலை நோக்கிய – அத் தேர்தலில் மக்களின் வாக்குகளை வென்றெடுக்கக்கூடிய திட்டங்களைக் கொண்டவையாக இருக்கின்றனவே தவிர, இந்த நாட்டுக்குப் பொருத்தமான நீடித்து, நிலைக்கக்கூடிய நடைமுறைச் சாத்தியமான பொருளாதாரக் கொள்கைகளாக இல்லாதிருப்பது, இந்த நாட்டு பொருளாதாரத் துறைக்கு ஒரு துரதிர்ஸ்டவசமான நிலைமையினையே கொண்டு தந்துக் கொண்டிருக்கின்றது.

அந்தவகையில், தற்போதைய இந்த நாட்டின் ஆட்சி அரசியல் சார்ந்து  தளம்பல் நிலை காணப்படுகின்ற ஒரு காலகட்டத்தில் ஒரு கட்சி ‘2025 ஆண்டுக்கான நோக்கு’ என்றொரு பொருளாதாரக் கொள்கையினை முன்வைத்திருந்தது. இதனிடையே ஜனாதிபதி அவர்கள் ‘தேசிய பொருளாதார சபை’ ஒன்றை உருவாக்கியிருப்பதாக ஊடகங்கள் தெரிவித்திருந்தன. எனவே, இதில் எந்த பொருளாதாரத் திட்டம் தற்போது முன்னெடுக்கப்படுகின்றது? என்பது சிக்கலான ஒரு விடயமாகவே இருந்து வருகின்றது.

நாட்டின் பொருளாதார வியூகத்தின் பலவீPPனத் தன்மை காரணமாகவே அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி நாளுக்கு நாள் குறைந்து 172 ரூபாவினையும் இன்று கடந்து செல்கிறது. இந்த வருட இறுதிக்குள் இது 200 ரூபாவினை எட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்றே கூற வேண்டியிருக்கின்றது

கடந்த சுமார் 2008ஆம் ஆண்டு முதற்கொண்டு இந்த நாட்டில் தேசிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் முகமாக கொள்கைகள் வகுக்கப்பட்ட போதும், ஏற்றுமதித்துறை தொடர்பில் உரிய அவதானங்கள் செலுத்தப்பட்டிருக்கவில்லை என்றே தெரிய வருகின்றது.

ஏற்றுமதியானது இந்த நாட்டில் அதிகரிப்பினைக் காட்டி வருவதாக அமெரிக்க டொலர்களில் எவரும் புள்ளிவிபரங்களைக் காட்டினாலும், இந்த நாட்டின் தேசிய வருமானத்தின் விகிதாசாரப்படி நோக்குமிடத்து இந்த நாட்டின் ஏற்றுமதித்துறையின் வீழ்ச்சி நிலையினை அவதானித்துக் கொள்ள முடியும்.

கடந்த வருடத்தை எடுத்துக் கொண்டால், ஏற்றுமதி வருமானம் சற்று கூடிய அதிகரிப்பினைக் காட்டுகின்றபோது, மறுபக்கத்தில் இறக்குமதி செலவீனம் வெகு துரித அதிகரிப்பினை எட்டியிருந்தது. அதாவது, ஏற்றுமதி வருமானம் 11 அமெரிக்க டொலர் பில்லியன் என்கின்றபோது, இறக்குமதி செலவீனம் 20 அமெரிக்க டொலர் பில்லியனாகி, ஏற்றுமதிக்கும், இறக்குமதிக்கும் இடையிலான வித்தியாசம் 9 அமெரிக்க டொலர் பில்லியன்களைக் காட்டியிருந்தது.

எனவே, எதிர்காலத்தில் மேம்படுத்திக் கொள்ளத்தக்க ஏற்றுமதித் துறைகள் எவை என்பது தொடர்பில் இந்த நாடு இனங்காண வேண்டியத் தேவையே இன்று முக்கியமானது என்று கருதுகின்றேன்.

அதனுடன், எதிர்காலத்தில் மேம்படுத்தக் கூடிய சேவைகள் தொடர்பிலும் அதிக அவதானத்தைச் செலுத்த வேண்டும். இதன்போது, கணனித் தொழில்நுட்பத்துடன் இணைந்த ஏற்றுமதிக்குரிய சேவைகள் தொடர்பில் அதிக அவதானங்களைச் செலுத்துவது மிகவும் நன்மையாகும் என்றே குறிப்பிட வேண்டும்.

வர்த்தக ஒப்பந்தங்களின் ஊடாக வெளிநாடுகளில் இலங்கை ஏற்றுமதியாளர்கள் முகங்கொடுக்கின்ற வர்த்தகத் தடைகள் தொடர்பில் அவதானங்களைச் செலுத்தி, அத் தடைகளை நீக்குவதற்கு நடவடிக்கை எடுப்பது ஒரு நல்ல முயற்சியாகும். என்றாலும் இத் தடைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் தொடர்பிலான உள்நாட்டுக் காரணிகள் தொடர்பிலும் அவதானங்களை செலுத்த வேண்டியது முக்கியமாகும் என்பதை செயற்பாட்டு ரீதியாக நிரூபிப்பதற்கும் இந்த அரசு ஏற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.

ஏற்றுமதிகளின் தரம், உற்பத்திச் செலவு, அளவு, உரிய காலத்திற்குள் வழங்குதல் போன்ற காரணிகள் ஏற்றுமதியாளர்களின் நேரடி கட்டுப்பாட்டுக்கு அப்பால் ஏற்படுகின்ற தடைகளாக இருக்கின்றன. அந்த வகையில் ஏற்றுமதி தொடர்பில் கட்டளைகளை வகுக்கின்றபோது, ஏற்றுமதித்துறை சார்ந்த தரப்பினரது கருத்துக்களை அடிக்கடிக் கேட்டறிந்து, அதன் பிரகாரம் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இந்த நாட்டைப் பொறுத்த வரையில் இந்த நிலைப்பாடு எந்தளவிற்கு சாத்தியமாக முன்னெடுக்கப்படுகின்றது என்பது கேள்விக் குறியாகும்

இத்தகைய கட்டளைகளின் உரித்தான தன்மைகளினதும், பயன்பாட்டினதும் பாதுகாப்பினைப் பேண வேண்டுமாயின் அதனை அந்த உற்பத்தியுடன் இணைந்த பொருளாதார, சூழல் மற்றும் தொழில்நுட்ப நிபந்தனைகளில் ஏற்படுகின்ற மாற்றங்களுக்கு அமைவாக ஆய்வுகள் மேற்கொள்ளப்படல் வேண்டும். இத்தகைய ஏற்பாடுகள் இன்றேல் அத்தகைய கட்டளைகள் செயற்படுத்துகையின்போது, பலவீனத் தன்மையையே காட்டுவதாக அமையும்.

உலகமயமாக்கல் வர்த்தக ஆற்றல் தொடர்பிலான புள்ளி விபரப் பட்டியலை எடுத்துக் கொண்டால், தேச எல்லைகள் செயற்பாட்டு வினைத்திறனின் உலகமயமாக்கல் தரவரிசையின் பிரகாரம் 136 நாடுகளில் இலங்கையானது 2014ஆம் ஆண்டு 87வது இடத்திலிருந்து 2016ஆம் ஆண்டாகும்போது 97வது இடத்திற்கு தள்ளப்பட்டு வீழ்ச்சி நிலையினைப் பதிவு செய்திருக்கின்றது.

இதற்கான காரணங்களை அறிந்து, அதற்குரிய தீர்வுகளை எடுக்கத் தவறியதன் காரணமாகவே ஏற்றுமதித் துறை தொடர்பில் இலங்கைக்கு இத்தகைய நிலைமைகள் ஏற்படுகின்றன.

வினைத்திறன் இல்லாமை காரணமாக பொருட்கள் போக்குவரத்துகளில் ஈடுபடுத்தப்படுகின்றபோது, ஏற்படுகின்ற ஒவ்வொரு மணித்தியால மேலதிக தாமதங்களாலும் காலம் தாழ்த்திவைக்க இயலாத பொருட்கள் தரத்தினையும், வர்த்தகப் பெறுமதியினையும் இழக்கின்றன.

இது தொடர்பில் ஒரு சிறந்த உதாரணத்தினை ஏற்றுமதியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனார்கள். அதாவது, கொழும்பு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக காலம் தாழ்த்தி வைக்க இயலாத பொருட்களை சோதனை செய்கின்ற முறைமையை இதற்கொரு சிறந்த உதாரணமாகக் காட்டுகிறார்கள்.

ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாத நான்கு துறை சார்ந்தவர்களால் இந்த சோதனைகள் நடத்தப்படுகின்றன. வெவ்வேறாக நான்கு தடவைகள் ஒரே பொருள் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றது. அநேகமான சந்தர்ப்பங்களில் காலம் தாழ்த்தி வைக்க இயலாத பொருட்கள் பொதியிடல் தொடர்பில் பயிற்சிகள் அற்றவர்களாலேயே இந்த சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. சோதனைகள் மேற்கொள்கின்ற நிலையில் சிறு, சிறு திருட்டுகளும் இடம்பெறாது எனக் கூற முடியாது. எவ்விதமான வெப்ப கட்டப்பாடுகளும் இல்லாத இடங்களில் வைத்து சோதனைகள் நடத்தப்படுகின்றன. இத்தகைய செயற்பாடுகள் இடம்பெறுகின்றபோது அவ்வுற்பத்திகளின் தரம், நிறை போன்றவற்றை எப்படிப் பேணுவது? என்ற கேள்வி உருவாகின்றது.

சோதனை வசதி கருதி குறிப்பிட்டளவு பொருட்களை மாத்திரமே பாரவூர்திகளில் விமான நிலையம்வரை ஏற்றிச் செல்ல முடியும் என்பதால், போக்குவரத்து செலவினம் அதிகரிப்பதாகக் கூறப்படுகின்றது. எனவே, இத்தகைய நிலைமைகள் தொடர்பில் முக்கிய அவதானங்கள் உடனடியாக செலுத்துப்பட்டு, அவை அகற்றப்பட வேண்டியது அவசியமாகும்.

அடுத்தாக, நிறுவனங்களுக்கிடையில் நிலவுகின்ற தொலைத் தொடர்பு ஏற்பாடுகளின் பலவீPனங்கள் காரணமாக ஏற்றுமதியாளர்கள் தேவையற்ற காலதாமதங்களுக்கு உட்படுவதாகக் குற்றஞ்சாற்றுகின்றனர். குறிப்பாக, நீரியல் வள ஆய்வு மற்றும் அபிவிருத்தி நிறுவனத்திற்கும், கடற்றொழில் மற்றும் நீரியல வள அமைச்சுக்கும் இடையிலான தொலைத்தொடர்புகளில் காணப்படுகின்ற பலவணினம்; காரணமாக பொருட்களை உற்பத்தி செய்து கொள்வதற்காகத் தேவைப்படுகின்ற சுகாதாரப் பாதுகாப்பு சான்றிதழைப் பெற்றுக் கொள்வதில் பாரிய தாமதங்கள் ஏற்படுவதாக கடலுணவு உற்பத்தியாளர்கள் முறைப்பட்டு வருகின்றனர்.

இத்தகைய நிலைமைகள் உடனடியாக மாறறப்பட வேண்டும். தொடர்ந்தும் இத்தகைய பின்னடைவுகளைக் கொண்டிருப்பதால் ஒருபோதும் எந்தத் துறையிலும் இந்த நாடு முன்னேற்றம் காண முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்

Related posts:

 11.02.2016 அன்று நாடாளுமன்றத்தில் தனி நபர் பிரேரணை ஒன்றை முன்வைத்து நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் ...
காணி உரிமை கோரி வருபவர்களுக்கு மாற்று ஏற்பாடு வேண்டும் என்ற எமது கோரிக்கை அரசியலமைப்பு சபையில் ஏற்க...
வெலிக்கடை சிறைச்சாலைப் படுகொலை விசாரணைகளுக்கு என்ன நடந்தது :  கண்கண்ட சாட்சியாக நானே இருக்கிறேன் – ந...

 இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுக்கள் மாகாண மட்டத்திலும் விஸ்தரிக்கப்பட வேண்டும் -டக்ளஸ் தேவானந்தா
மாகாணசபையின் அதிகாரத்தில் மத்திய அரசாங்கம் தலையீடு செய்வதை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை நாடாளுமன்றத்தில் ...
வடக்கு கிழக்கில் இயற்கை வளங்கள் சூறையாடப்படுவதை உடனடியாகத் தடுத்து நிறுத்த நடவiடிக்கை அவசியமாகும் நா...