நிலையற்றதொரு ஆட்சியின் பிரதிபலிப்புகளை இந்த நாட்டு மக்கள் வீதிகளில் அனுபவிக்கின்றனர் – டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Wednesday, September 18th, 2019


இன்று இந்த நாட்டிலே மீண்டும் பொது மக்களது இயல்பு வாழ்வினைச் சீர்குலைக்கின்ற பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற ஆரம்பித்துள்ளன.

ஒரு பக்கத்திலே இலங்கைப் போக்குவரத்துச் சபை சார்ந்த பணி பகிஸ்கரிப்புகள், இன்னொரு பக்கத்திலே அரச மருத்துவர்களது பணிப் பகிஸ்கரிப்புகள் என மக்களின் இயல்பு வாழ்விற்குக் கேள்விக் குறிகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்த நாட்டின் நிலையற்றதொரு ஆட்சியின் பிரதிபலிப்புகளை இந்த நாட்டு மக்களில் இன்று கண்கூடாகவே காணக்கூடியதொரு நிலைமை ஏற்பட்டுள்ளது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற வணிகக் கப்பற்றொழில் திருத்தச் சட்டமூலம் தொடர்பிலான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயெ அவர்’ இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

இந்த நிலையில் வாணிபக் கப்பற்றொழில் தொடர்பில் நாங்கள் வாத, விவாதங்களை நடத்திக் கொண்டிருக்கின்றோம்.

எமது கடல் மார்க்க வாணிபப் பாதையைப் பொறுத்த வரையில் தென் சீனாவிலிருந்து புருனை, தாய்லாந்து, மலக்கா, இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பிலிப்பைன், ஈரான் என விரிந்து செல்கின்றது.

இவ்வாறு தென் சீனாவில் ஆரம்பிக்கின்ற இப்பாதையானது மலக்கா கடல் பாதை தாண்டி இந்து சமுத்திரத்தின் ஊடாக மாந்தோட்டை எனப்படுகின்ற மாந்தை துறைமுகத்தை அடைவதாகக் கூறப்படுகின்ற நிலையில், இந்த மாந்தோட்டை அல்லது மாந்தை எனப்படும் பகுதியானது மன்னாருக்கு நேர்ப்புறமாக அமைந்துள்ளதாக அகழ்வாராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பண்டைய காலத்தைப் பொறுத்தமட்டில் அக்காலகட்டத்து கப்பல்கள் இடைநடுவில் நங்கூரமிட்டுத் தரித்து நின்ற இரு முக்கிய துறைமுகங்கள் இந்த நாட்டில் இருந்துள்ளன எனத் தெரிய வருகின்றது. அதில் ஒன்று திருகோணமலை. மற்றது கொடவாய என்பதாகும். இந்தக் கொடவாய துறைமுகம் தென் பகுதியிலே அம்பாந்தோட்டைப் பகுதியிலே அமைந்திருந்ததாகக் கூறப்படுகின்றது.

இந்த விடயங்களை வைத்துப் பார்க்கின்றபோது வணிகக் கப்பற்துறையைப் பொறுத்தமட்டில் எமது நாட்டுக்கு மிக இலகுவான துறைமுகங்களாக மாந்தை, கொடவாய மற்றும் திருகோணமலை துறைமுகங்கள் காணப்படுகின்றன. இதிலே, மாந்தை துறைமுகத்தின் தற்போதைய நிலைமைகள் சரிவரத் தெரிய வராவிட்டாலும், கொடவாய துறைமுகத்திற்குப் பதிலாகத் தற்போது அம்பாந்தோடடடைத் துறைமுகம் அமையப் பெற்றிருக்கின்றது.

அந்த வகையில் தற்போதைய நிலையில் வாணிப கப்பற்துறையைப் பொறுத்தவரையில், அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை துறைமுகங்கள் மிக முக்கிய துறைமுகங்களாகக் காணப்படுகின்றன.

வாணிப கப்பற்தொழில் குறித்து இன்று கதைக்கின்ற இந்த நாட்டில், அத்தொழிற்துறை சார்ந்த மிக முக்கியமான துறைமுகமாக மேலும் கட்டியெழுப்பப்பட வேண்டிய அம்பாந்தோட்டை துறைமுகத்தை, நெல் மூட்டைகள் களஞ்சியப்படுத்துகின்ற கட்டிடமாகப் பயன்படுத்திய வரலாறும் இருக்கின்றது.

இந்த நெல் மூட்டை களஞ்சியப் படுத்தல் செயற்பாடு காரணமாக எலிகள் அரித்து, சேதமாகியும், அழிந்தும் போன அம்பாந்தோட்டை துறைமுகத்தின் சொத்துகளுக்கு இழப்பீடுகளைச் செலுத்த வேண்டிய சுமையும் இந்த நாட்டு மக்களுக்கே வந்து சேர்ந்துள்ளது

இத்தகையதொரு நிலையில்தான் திருகோணமலை துறைமுகத்தை வெளிநாட்டுக்குத் தாரைவார்த்துக் கொடுக்கின்ற திட்டமும் திரைமறைவில் நடந்து கொண்டிருப்பதாகத் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

சர்வதேச கடல்சார் அமைப்பின் நியதிச் சட்டத்திற்கு அமைவாக வாணிப கப்பற்றொழில் திருத்தச் சட்டமூலம் கொண்டு வரப்படுகின்றது எனக் கூறப்படுகின்றது.

இலங்கையுடன் தொடர்புடைய வாணிபத் துறை குறித்து ஆராய்கின்றபோது, கி. பி. 6ஆம் நூற்றாண்டில் இந்த நாட்டுக்கு வருகை தந்திருந்த சோபேடர் எனும் கிரேக்க நாட்டவர் அறிந்து கொண்டிருந்த விடயங்களின் அடிப்படையில், கொஸ்மஸ் எனும் கிரேக்க நாட்டவரால் எழுதப்பட்ட நாட்டு விபரங்களில், 06ஆம் நூற்றாண்டின்போது, இலங்கையானது மேலைத்தேய மற்றும் கிழக்கு நாடுகளிடையே பிரதான சர்வதேச வர்த்தக மத்திய நிலையமாக இருந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தகைய பெருமைவாய்ந்த இந்த நாட்டின் மிகவும் முக்கியத்துவமிக்க துறைமுகங்கள் பிற நாடுகளின் தேவைகளுக்காக விற்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்கின்றபோது, இந்த நாட்டின் எதிர்காலம் என்னவாகும்? என்பது தெட்டத் தெளிவாகவே விளங்குகின்றது.

இலங்கையானது இந்து சமுத்திரத்தில் மிக முக்கியமானதொரு வாணிப கேந்திர மையம் என்றே ரோம, அராபிய மற்றும் சீன புராண குறிப்புகளிலிருந்து தெரிய வருகின்றது.

இதற்குக் காரணம், இலங்கையில் வடக்குப் பகுதியின் இயற்கையான அமைவிடமும், தென்னிந்தியாவிலிருந்து மிக இலகுவாக இந்த நாட்டில் அப்பகுதி ஊடாக தரையிறங்குவதற்கான வசதியுமே எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கிலே காணப்படுகின்ற இயற்கை அமைவிடங்களைப் பயன்படுத்தி, வாணிப கப்பற்துறை சார்ந்து மிகவும் பயனுள்ள பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ள முடியும். இருப்பினும், அத்தகைய எந்தவொரு முயற்சிகளையும் இதுவரையில் காண இயலாதுள்ளது.

தற்போது இருக்கின்ற காங்கேசன்துறை துறைமுகத்தையாவது தயார் செய்து, தென்னிந்தியாவிலிருந்து நேரடியாகவே பொருட்களை இறக்குமதி செய்ய முடியும். அது இலகுவானதும், மிகவும் இலாபகரமானதாகவும் இருக்கும். இருந்தாலும், இவற்றை எல்லாம் செய்வதற்கு நீங்கள் முன்வருவதாக இல்லை

இருக்கின்ற துறைமுகங்களையே விற்றுக் கொண்டிருக்கின்ற நீங்கள், புதிதாக ஏதேனும் துறைமுகங்களை ஏற்படுத்தவோ, இருக்கின்ற இயற்கைத் துறைமுகங்களை அபிவிருத்தி செய்வதற்கோ முன்வரப் போவதில்லை என்பது தெரிகின்றது.

காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்தாலும், அதனையும் விற்றுவிடுவீர்களோ? என்ற அச்சமே எமது மக்களிடையே காணப்படுகின்றது.

எனவே, இருக்கின்ற இந்த நாட்டு வளங்களைக் காப்பாற்றுங்கள், சொத்துக்களைப் பாதுகாக்க முன்வாருங்கள். அதற்கேற்ப சட்டங்களைக் கொண்டு வாருங்கள் என வலியுறுத்த விரும்புகின்றேன்.

மேலும், வாணிப கப்பற்றொழில் சார்ந்தவர்களுக்கான வழங்கப்படுகின்ற சான்றிதழ்கள் தொடர்பில் ஏற்கனவே பல்வேறு பிரச்சினைகள் காணப்பட்டு வந்தன. இப்போது அவை சீர் செய்யப்படுள்ளனவா என்பது குறித்து அறிய விரும்புவதோடு நேற்று முன்தினம் நடைபெற்ற அரசியல் நிகழ்வு தொடர்பாகவும் எனது கருத்துக்களையும் இங்கு பதிவு செய்ய விரும்புகின்றேன்

தமிழ்த் தேசிய இனத்தின் உரிமைக்கான எழுச்சிக் குரல் என்பது ஒட்டு மொத்தத் தமிழ் மக்களினதும் ஒன்று பட்ட ஒற்றுமையின் குரலாகும்

ஆனாலும் தத்தமது கட்சி அரசியலின் இருப்புக்காகவும் தமிழ் மக்களின் வாக்குகளை அபகரிக்கும் நோக்கிலும் அவ்வப்போது தமிழரின் பேரால் நடத்தப்படும் தமிழர் எழுச்சி நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு அதில் கலந்து கொள்ளும் மக்கள் தொகையின் சிறு கூட்டத்தை வைத்து, இதுதான் தமிழ் மக்களின் எழுச்சி என்றோ, அன்றி இத்தனை மக்கள்தான் உரிமை கேட்டு எழும் மக்கள் தொகை என்றோ யாரும் தப்புக்கணக்குப் போட மாட்டீர்கள் என நான் நம்புகிறேன்.

தமிழர்கள் மத்தியில் ஒரு எழுச்சி நடந்தால் அதை வைத்து சில தென்னிலங்கை அரசியல்வாதிகள் தமது அரசியல் தளத்தை ஊதிப் பெருப்பித்துப் பலப்படுத்துவதும் அதுபோல் தென்னிலங்கையில் தமிழர்களுக்கு எதிராகச் சில அரசியல் சக்திகள் எடுக்கும் நடவடிக்கைகளை வைத்து தமிழர் தரப்பில் உள்ளவர்கள் சிலர் தத்தமது கட்சிகளைப் பலப்படுத்துவதும் என, இருதரப்பு அரசியல் நாடகங்களுமே இன்றும் நடந்தேறி வருகின்றன. இதை நாம் வெறுக்கின்றோம்.

இதில் இரு தரப்பு அப்பாவி மக்களே அரசியலுக்குப் பலியாகி வருகிறார்கள். தமிழ்த் தேசிய இனத்தின் நியாயமான உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் சக்திகளும் தென்னிலங்கையில் இருப்பீர்கள். நீங்கள் தென்னிலங்கை அரசியல் சக்திகளுக்கு தமிழர்களின் நியமான உரிமைகள் குறித்து தெளிவூட்ட வேண்டும்.

அதே போல்  தமிழ்  பேசும் மக்களுக்குத் தெளிவூட்டும் பொறுப்பை நாமே எடுத்திருக்கின்றோம். எம்மைப் பொறுத்த வரையில் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் யாருடன் பேசி எமது மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியுமோ அவர்களோடு அரசியல் பேரம் பேசி எமது மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதையே நாம் விரும்புகிறோம்.

எமது வழிமுறையை எள்ளி நகையாடியவர்கள், தூற்றியவர்கள் எல்லோருமே இன்று எமது வழிமுறைக்கு வந்திருக்கிறார்கள். ஆனாலும், போதிய அரசியல் பலமின்றிக்கூட நாம் முன்னெடுத்து வெற்றி கண்ட பொறிமுறையைக் கையாள.. போதிய அரசியல் பலத்தைக் கொண்டிருக்கும் சக தமிழ்த் தரப்பினர் முன்வந்திருக்கவில்லை.

தமிழ் மக்களை உசுப்பேற்றி வடக்கு மாகாண சபையின் அதிகாரத்தைத் தம் வசம் வைத்திருந்தவர்கள் கூடக் கிடைத்த அதிகாரங்களைப் பயன்படுத்தித் தமிழ் மக்களுக்கு எதையும் பெற்றுக்கொடுத்திருக்கவில்லை.

தமிழ் மக்களின் உணர்வெழுச்சியை நான் மதிக்கின்றேன். ஆனாலும் எமது மக்களின் உணர்வெழுச்சியை வைத்துத் தத்தமது அரசியல் இருப்பைத் தக்க வைக்கும் சுயலாப அரசியலை வெறுக்கின்றேன்.

தமிழ் மக்கள் வீதியில் இறங்கிப் போராடும் அவர்களது ஜனநாயக உரிமைகளை நான் மதிக்கின்றேன். ஆனாலும்,. கையில் வெண்ணையை வைத்திருந்தும் நெய் தேடி ஊர் தோறும் அலைவோரை நான் வெறுக்கின்றேன்.

நாம் மட்டுமல்ல,  தமிழ் மக்களே அதை இன்று வெறுக்கத் தொடக்கி விட்டார்கள். புலத்தில் வாழும்  மக்களிடம் பணம் பொறுக்கி களத்தில் வாழும் மக்களிடம் வாக்குப் பொறுக்கும் வங்கிரோத்து அரசியலைத் தமிழ் மக்கள் இன்று நிராகரிக்கத் தொடங்கி விட்டார்கள்.

இனி எந்தவொரு தமிழ் அரசியல் தரப்பினரும் சரி மக்களை உசுப்பேற்றி வீதிக்கு அழைத்தாலும் அவர்களுக்கும் இதே மறுப்புணர்வையே தீர்ப்பாக தமிழ் மக்கள் வழங்குவார்கள்.

எமக்கெதிரான அவமானங்கள்,. அவதூறுகள்,. எல்லாம் கடந்து நாம் செல்லும் வழியே தமிழர் எழுச்சிக்கும் உரிமைக்கும் தீர்வு காணும் வழிமுறையாகும். 

இனி எந்தவொரு தமிழ் அரசியல் தரப்பினரும் சரி மக்களை உசுப்பேற்றி வீதிக்கு அழைத்தாலும் அவர்களுக்கும் இதே மறுப்புணர்வையே தீர்ப்பாக தமிழ் மக்கள் வழங்குவார்கள்.

கூட்டத்தில் கூடி நின்று கூவிப் பதற்றலன்றி நாட்டத்தில் கொள்ளாரடி கிளியே இதுதான் இன்றைய யாதார்த்தம் ஆனபடியினால் யாரையும் யாரும் எள்ளி நகையாட மாட்டீர்கள் என்று நம்புகின்றேன். எல்லோரும் ஏறிச் சறுக்கிய குதிரையில் சக்கடத்தாரும் ஏறிச் சறுக்கி விழுந்தாராம் என்பதையும் கூறி

எமக்கெதிரான அவமானங்கள்,. அவதூறுகள்,. எல்லாம் கடந்து நாம் செல்லும் வழியே தமிழர் எழுச்சிக்கும் உரிமைக்கும் தீர்வு காணும் வழிமுறையாகும். 

உறவுக்குக் கரம் கொடுப்போம்!

உரிமைக்குக் குரல் கொடுப்போம்.!!

மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி!

வெல்வோம், முயல்வோம், உளம் சோரோம.;

Related posts: