அரசியலுரிமைக்காக மட்டுமன்றி அழிவு யுத்த வன்முறைகளில் இருந்தும் எமது மக்கள் மீண்டெழ வேண்டும் – நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா

Tuesday, March 8th, 2016

அரசியலுரிமைக்காக மட்டுமன்றி அழிவு யுத்த வன்முறைகளில் இருந்து எமது மக்கள் மீண்டெழுந்து வரவேண்டும் என்பதற்காகவும் உண்மையோடும், உறுதியோடும், மதிநுட்ப சிந்தனை வழி நின்றும் உழைத்து வந்திருந்த பொறுப்புள்ள ஓர் அரசியல் கட்சியின் தலைவர் என்ற வகையில், இந்த நாடாளுமன்ற சபையில் கொண்டுவரப்பட்டிருக்கும் காணாமல் போன எமது உறவுகள் மற்றும் தமிழ் அரசியல் கைதிகள் குறித்த ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் நானும் கலந்து கொண்டு காத்திரமான சில கருத்துக்களை முன் வைக்க விரும்புகின்றேன் என இன்றைய தினம் (08) காணாமல்போன உறவுகள் மற்றும் தமிழ் அரசியல் கைதிகள் குறித்து இடம்பெற்ற ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தனது உரையில் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம்  அவர் ஆற்றிய உரை தொடர்பாக கேட்டபோது அவர் தெரிவித்த கருத்துக்களை எமது EPDPNEWS.COM இணையத்தள வாசகர்களுக்காக பதிவிடுகின்றோம்.

நடந்து முடிந்த அழிவு யுத்த சூழலில் காணாமல் போன எமது மக்களின் அவஸ்தைகளை எடுத்துக்கூறும் வலி சுமந்த துயரங்கள் யாவும் ஆவணங்களாகவும், வரலாற்றுப்பதிவுகளாகவும் இன்னமும் இருக்கின்றன.

ஓர் ஊர்வலத்தில்

நான் காணாமல் போயிருந்தேன்.

என்னைத் தேடிக்கண்டு பிடித்த போது

எனக்காக ஓர் ஊர்வலம் போனது.

அது என் இறுதி ஊர்வலம்!

இவ்வாறு கவிஞன் ஒருவன் எழுதியிருந்தான். அது போல்,…

ஆடு மேய்க்க சென்ற சிறுவனின்

தகவலின் பின்னால் தோண்டப்பட்ட

ஆறு புதைகுழிகளில் இருந்து

நீயும் சடலமாக மீட்கப்பட்டாய்!

                                                                                                            (சுழிபுரம், மணியந்தோட்டம்)

இவ்வாறு இன்னொரு கவிஞனும் எழுதியிருந்தான்.

யுத்தத்தின் வடுக்களை எடுத்துக்கூறும் இந்தப் பதிவுகளை இங்கு நான் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.

கடந்த கால அழிவு யுத்த சூழலின் போது இது போன்ற அவஸ்தைகளுக்கும், அவலங்களுக்கும் முகம் கொடுத்த படி சுடு நெருப்பிலேயே எமது மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.

ழிவு யுத்தம் இந்த நாட்டில் தொடரும் வரை படுகொலைகள், காணாமல் போதல், கைது செய்யப்படுதல் மற்றும் மனித அவலங்கள் உட்பட பல்வேறு இழப்புகள் போன்ற துன்பங்கள் எமது மக்கள் மத்தியில் தொடர்ந்தபடியே இருக்கும் என நாம் மிகவும் எச்சரிக்கை உணர்வோடு கருத்து கூறியும், எமது மக்களை அவற்றிலிருந்து இயன்றவரையில் காப்பாற்றும் வகையிலும் செயற்பட்டும் வந்திருக்கின்றோம்.

ஆகவே, அழிவு யுத்தத்தைத் தடுத்து நிறுத்தி அரசியல் தீர்விற்கான பேச்சு வார்த்தைகளை நடத்தி, இது போன்ற அவலங்களுக்கும் தீர்வு காணுங்கள் என்றே நாம் தொடர்ந்தும் குரல் கொடுத்து வந்திருக்கின்றோம்.

இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் நாம் தேசிய நீரோட்டத்தில் கலந்து கொண்டு அரசியல் பேச்சுவார்த்தைகளின் மீதே நம்பிக்கை வைத்து செயற்பட்டு வருகின்றோம். அந்த வகையில், அழிவு யுத்தத்திற்கும் அதனால் ஏற்படக்கூடிய படுகொலைகள், காணாமல் போதல், கைது செய்யப்படல் மற்றும் ஏனைய வன்முறைகளுக்கு எதிராகவே நாம் குரல் கொடுத்தும், செயற்பட்டும் வந்திருக்கின்றோம்.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் நாம் ஒரு போதும் எமது

மக்கள் மீது பேரவலங்களை சுமத்தும் யுத்தத்திற்கு ஆதரவளித்தவர்கள் அல்ல என்பதற்கு உண்மையுள்ள எமது மக்களே சாட்சி. ஊர் பார்த்த உண்மைகள் சாட்சி, இந்த நாடாளுமன்ற பதிவேடுகள் சாட்சி.

நாம், காணாமல் போன எம் உறவுகளை மீட்பதற்காக வெறுமனே குரல்களை மட்டும் எழுப்பிக்கொண்டிருந்தவர்கள் அல்ல. 1995 ஆம் ஆண்டில் இருந்து 2000 ஆம் ஆண்டு வரையும் காணாமல் போனவர்களது பெற்றோர் பாதுகாவலர் சங்கம் அமைத்து மாபெரும் வெகுஜனப் போராட்டங்களை நடத்தியிருக்கின்றோம்.

அதன் மூலமும், தொடர்ந்தும் எமது உறவுகள் காணாமல் போகும் அவலங்களை முடிந்தளவிற்கு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தோம்.

காணாமல் போதல் – காணாமற் போகச் செய்தலுக்கு எதிராக நாம் நடத்திய போராட்டங்களும், நாடாளுமன்றத்தில் நாம் எழுப்பிய குரல்களும், இந்த நாடாளுமன்றத்தில் அன்று இருந்த அனைத்து மக்கள் பிரதிநிதிகளினதும் மனச்சாட்சிகளின் பார்வைகளை எம் பக்கம் திருப்பியிருந்தது.

ஆனாலும், காணாமல் போனவர்களின் எம் உறவினர்களுக்கு பரிகாரம் காணப்படவென நாம் எடுத்த முயற்சிகளும், சில அரசியல் காரணங்களினால் குழப்பங்கள் விளைவிக்கப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டதையும் இங்கு நான் ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் அவர்கள், காணாமல் போனவர்களுக்கான நஷ்டஈடுகளை வழங்க வேண்டும் என்று நாம் அன்றே வலியுறுத்தி, சில அரசியல் காரணங்களால் குழப்பியடிக்கப்பட்ட அதே விடயத்தையே கூறிச் சென்றிருக்கின்றார்.

அதேநேரம், அரசியல் உள்நோக்கங்கள் காரணமாக சில சக தமிழ் அரசியல் கட்சிகளால் என் மீதும், எனது கட்சி மீதும் சுமத்தப்பட்டிருந்த அவதூறுகள் யாவும் இன்று நீதியான விசாரணைகளின் மூலம் அம்பலப்படுத்தப்பட்டு வருகின்றன. உண்மையான குற்றவாளிகள் இனங்காணப்பட்டு வருகின்றனர். சுயலாப உள்நோக்க குற்றச்சாட்டுகள் அம்பலமாகி வருவதையும் இங்கு நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

சந்தணம் ஒரு போதும் சேறாகாது. வெறும் அவதூறுகளால் பூக்கடை சாக்கடையும் ஆகாது. தொடர்ச்சியாக நீதி விசாரணைகள் எந்தளவிற்கு நடக்கின்றதோ அந்தளவிற்கு  உண்மைகள் வெளியாகும்.

வெளிவராத இரகசியங்களும் இல்லை. அறியப்படாத உண்மைகளும் இல்லை. உண்மையான குற்றவாளிகளை இனம் காண்பதை கைவிட்டு  வெறும் அரசியல் நோக்கங்களுக்காக அடுத்தவர் மீது பழி சுமத்துவதால் உண்மையான குற்றவாளிகள் தப்பித்துக்கொள்கிறார்கள்.

இதேவேளை, காணாமல் போனவர்கள் எங்காவது மறைத்து வைக்கப்பட்டோ அல்லது மறைந்து வாழவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உட்பட்டோ இருக்கலாம் என பலர் சந்தேகிப்பதால் அது தொடர்பில் முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும். அவ்வாறு எவரேனும் உயிருடன் இருந்தால், அவர்களை மீட்டு பெற்றோர்களிடம் – உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும். அல்லது அவர்கள் இல்லையென்றால் அவர்களுக்கு என்ன நடந்தது என வெளிப்படுத்த வேண்டுமெனவும் நாம் வலியுறுத்த விரும்புகின்றோம்.

யுத்த சூழலின் போது கைது செய்யப்பட்டவர்களுக்காக மறைந்த சட்டத்தரணி மகேஸ்வரி வேலாயுதம் அவர்களின் மூலம் இலவச சட்ட ஆலோசனைகளை வழங்கி பல நூறு அரசியல் கைதிகளை நாம் விடுவித்திருக்கின்றோம்.

இவ்வாறு சிறை மீட்கப்பட்டவர்களை எனது வீட்டில் வைத்திருந்து, திருமலையில் இருந்து கப்பல்கள் மூலம் அனுப்பி, அவர்களை தத்தமது பெற்றோர்களிடமும் உறவினர்களிடமும் ஒப்படைத்திருக்கின்றோம்.

இது போன்ற ஆக்க பூர்வமான விடயங்களை அர்ப்பணிப்புடன் செய்வதற்கு இன்று போதிய அரசியல் அதிகாரத்துடனும், பல சட்டத்தரணிகளையும் கொண்டிருக்கும், இந்த ஒத்திவைப்பு வேளை விவாதத்தை முன்வைத்தவர்களும்; முன்வருவார்களேயானால், அதற்கு நாம் பூரண பங்களிப்பு வழங்கி, அவர்களோடும் சேர்ந்துழைக்க நாம் தயாராகவே இருக்கின்றோம்.

அரசியல் முரண்பாடுகளுக்கு அப்பால், பொது நோக்கில் ஒன்று பட்டு செயற்பட்டால், சிறையில் இருக்கும் எஞ்சிய நம் உறவுகளையும் மீட்டெடுக்க முடியும்.

கடந்த ஆட்சியின் போது 12,000 க்கும் மேற்பட்ட முன்னாள் போராளிகளை விடுவித்து, அவர்களை நாம் அவர்களது பெற்றோர்களிடமும் உறவினர்களிடமும்; ஒப்படைக்க பெரும் பங்காற்றியிருக்கின்றோம்.

இன்று இந்த நாட்டின் ஜனாதிபதியாக இருக்கும் கௌரவ மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கும் இதில் பாரிய பங்களிப்பு இருந்திருக்கின்றது.

நாம் எந்த வழி முறைக்கு ஊடாக இவைகளை சாதித்தோமோ, அதே வழிமுறையையும், பொறிமுறையையும் கையாண்டு எஞ்சியுள்ள ஏனைய அரசியல்

கைதிகளையும் மீட்டெடுக்க இன்று தமிழர் தரப்பில் அரசியல் பலத்தோடு இருப்பவர்கள் முன்வருவார்களேயானால் அதற்கு நாம் பூணர ஆதரவு வழங்க காத்திருக்கின்றோம்.

ஆகவே, எஞ்சிய நம் உறவுகளை சிறையில் இருந்து மீட்பதற்கு ஜனாதிபதி அவர்களோடும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களோடும் நாம் அனைவரும் அரசியல் வேற்றுமைகளுக்கு அப்பால் ஒன்றுபட்டு பேசுவதற்கும் நாம் தயாராகவே இருக்கின்றோம்.

காணாமல் போனவர்களின் எமது உறவுகளுக்கு நீதியும், பரிகாரமும் தேவை. அதேபோன்று, கைது செய்யப்பட்டு தடுப்பில் இன்னமும் எஞ்சியிருப்போரை விடுவித்து, அவர்களை அவர்களது பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

அதேநேரம் சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ள முன்னாள் புலிகள் இயக்கம் உட்பட்ட ஏனைய இயக்கங்களின் போராளிகளும், மீள் குடியேற்றம் செய்யப்பட்ட எமது உறவுகளும் போதிய வாழ்வாதாரங்களின்றி பெரிதும் சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். இவர்களது நிலைமையினை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு உரிய ஏற்பாடொன்றை செய்து கொடுப்பதற்கு இந்தப் புதிய அரசாங்கம் முன்வரவேண்டும்.

அன்று மிருசுவில் பகுதியில் காணாமல் போன எட்டுப்பேர் புதை குழியில் மூடப்பட்டார்கள்.

அதை நேரில் கண்ட ஒருவர் தப்பி வந்து, சாட்சி சொல்வதற்கு முடியாமல் உயிர் ஆபத்து என்ற அச்சத்தில் ஒதுங்கியிருந்தார்.

ஆனாலும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாம் மிருசுவில் படுகொலைக்கு சாட்சியாக இருந்தவருக்கு பாதுகாப்பு வழங்கி, அவரை நீதி மன்றத்திற்கு தொடர்ச்சியாக அழைத்துச் சென்று, சாட்சி சொல்லும் துணிச்சலை கொடுத்திருந்தோம். இதன் மூலம் இன்று மிருசுவில் படுகொலைக்கு நியாயமான தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது என்பதை இங்கு நான் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.

அதேபோன்று கிருசாந்தி படுகொலை, செம்மணி படுகொலை புதைகுழிகள் தொடர்பான விசாரணைகள், புங்குடுதீவு சாரதாம்பாள் படுகொலை, புத்தூர், வாதரவத்தை படுகொலை, அம்பாறையில் கோணேஸ்வரி படுகொலை போன்ற சம்பவங்கள் தொடர்பான நீதியான விசாரணைகளுக்காக நாமே குரல் கொடுத்து செயலாற்றியும் வந்திருக்கின்றோம் என்பதை  இங்கு நான் நினைவுபடுத்த விரும்புகின்றேன்.

அது போலவே காணாமல் போன நம் அனைத்து உறவுகளுக்கும் நீதியும் பரிகாரமும் தேவை என்பதை நான் மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றேன். அதேபோன்று, காணாமல் போனவர்களை கண்டறியும் முகமாக நியமிக்கப்பட்டிருக்கும் ஜனாதிபதி ஆணைக் குழுவானது, சாட்சியங்களை வெறுமனே பதிவு செய்யும் செயற்பாடுகளை மட்டும் கொண்டிராமல், அச் சாட்சியங்கள் தொடர்பில் உரிய, பக்கசார்பற்ற முறையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, உண்மைகள் பகிரங்கப்படுத்தப்படல் வேண்டும்.

ஏனெனில், இங்கு சாட்சியமளித்துள்ளவர்களில் சிலர், அறியாமை காரணமாகவும், பலரது அழுத்தங்கள் காரணமாகவும் தங்களது சாட்சியங்கள் என்ற வகையில் சில கருத்துக்களை முன்வைத்துள்ளனர். எனவே, இங்கு முன்வைக்கப்பட்ட சாட்சியங்கள் முறையான விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

காணாமல் போன எமது மக்களின் உறவுகள் யாருடைய அழுத்தங்களும் இன்றி

சுதந்திரமாகவும் உண்மையுள்ளவர்களாகவும் சாட்சியம் அளிப்பதற்கான

சந்தர்ப்பத்தை அவர்களுக்கு சகலரும் வழங்க முன்வர வேண்டும்.

சாட்சியங்களின் மூலம் நிரூபிக்கப்படுகின்ற குற்றங்கள் தொடர்பிலான குற்றவாளிகள் இனங்காணப்பட்டு, சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, அவர்களுக்கு உரிய தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். அத்துடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடன் பரிகாரங்கள் காணப்பட வேண்டும்.

யுத்தம் எதற்காக தொடங்கியதோ, அதற்காக அரசியல் தீர்வொன்றை காண்பதற்காக இந்த அரசாங்கம் புதிய அரசியல் யாப்பைத் தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதை நாம் வரவேற்கின்றோம்.

அது போல், யுத்தம் தொடங்கியதால் நடந்த இது போன்ற காணாமல் போனவர்கள், கைது செய்யப்பட்டவர்கள் போன்ற தொடரும் சில பிரச்சினைகளுக்கும் யதார்த்தமான தீர்வு காணப்படல் வேண்டும்.

எமில் காந்தன் என்ற நபர் என் மீது களுத்துறை சிறையில் வைத்து தாக்குதல் நடத்தினார் என்ற குற்றச்சாட்டு  அதேபோல், எனது கட்சியில் ஊடுறுவி என்னைக் கொல்வதற்கான முயற்சியில் ஈடுபட்டவர்களையும் விடுவிப்பதற்கு எனது பங்கை ஆற்றியிருக்கிறேன். (கோமகன் – சத்தியலீலா)

இதே வேளை, காணாமல் போனவர்களின் உறவினர்கள் நடத்தும் போராட்டங்களில் கலந்து கொள்வோருக்கு எதிராக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக அமைச்சர் மனோகணேசன் அவர்களை மேற்கோள்காட்டி, யாழில் இருந்து வெளியாகும் பத்திரிகை ஒன்று பி.பி.சி. செய்தி நிறுவனத்தை ஆதாரம் காட்டி செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஆனாலும், இந்த செய்தியை நான் நம்பவில்லை. காரணம் குறித்த இந்தப் பத்திரிகை பொய்யான செய்திகளை வழங்கியே தமிழ் மக்களை கடந்த காலங்களில் அழிவுக்குள் தள்ளுவதற்கும் பெரிதும் துணை போயிருந்தது.

இருப்பினும், எனது நண்பரும் அமைச்சருமான மனோகணேசன் அவர்களை மேற்கோள் காட்டியே இந்தச் செய்தி வெளியாகியுள்ளது. ஆகவே, இன்றும் அவ்வாறான அச்சுறுத்தல்கள் தொடர்வது உண்மையாயின், அது குறித்து இந்த நாடாளுமன்றத்தில் இதில் சம்பந்தப்படுத்தப்பட்டுள்ள அமைச்சர் மனோ கணேசன் அவர்கள் விளக்கம் அளிப்பார் என எதிர் பார்த்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கொண்டு வந்திருக்கும் இப்பிரேரணையானது ஆக்க பூர்வமான செயற்பாட்டையும் கொண்டிருக்க வேண்டும் என்ற விருப்பத்தோடும் எதிர்பார்ப்போடும் அதற்கு ஆதரவளித்து எனது உரையை நிறைவு செய்கிறேன்.

Related posts:

புத்தபெருமானின் சிலையை ஒரு ஆக்கிரமிப்பு அடையாளமாக சில இனவாதிகள் பாவிப்பது தடுக்கப்பட வேண்டும்-நாடாளு...
போதையற்ற தேசத்தை உருவாக்குவது எந்த வகையில் சாத்தியமாகும்? - சபையில் டக்ளஸ் தேவானந்தா கேள்வி
நாட்டில் அரசியல் குடும்பிச் சண்டை நீடிக்கின்றதே அன்றி மக்கள் நிம்மதியாக வாழக் கூடிய சூழல் இன்னமும் உ...