6 வாரம் சசிகலா புஷ்பா எம்.பி.யை கைது செய்வதற்கு தடை!

Friday, August 26th, 2016

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவை, 6 வாரங்களுக்குக் கைது செய்யக் கூடாது என உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதால், எங்கும் ஓடிவிட மாட்டார் என்று நீதிமன்றம் கருத்துத் தெரிவித்தது. அதே நேரத்தில், தன் மீதான வழக்கில், உயர்நீதிமன்ற உத்தரவின்படி வரும் திங்கட்கிழமை சசிகலா விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

சில வாரங்களுக்கு முன்பு, டெல்லி விமான நிலையத்தில் திமுக எம்.பி. திருச்சி சிவாவை கன்னத்தில் அறைந்ததாக சர்ச்சையில் சிக்கினார் சசிகலா. பிறகு மாநிலங்களவையில், அந்த எம்.பி.க்கும், திமுக தலைவர்களுக்கும் தனது வருத்தத்தை வெளியிட்டார். அதுமட்டுமன்றி, தனது கட்சித் தலைவி தன்னைக் கன்னத்தில் அறைந்தார் என்று அவையில் புகார் கூறினார். அடுத்த சில நிமிடங்களில், அவர் கட்சியை விட்டு நீக்கப்படுவதாக கட்சித் தலைமை அறிவித்தது.

ஆனால், தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை இராஜிநாமா செய்ய சசிகலா மறுத்துவிட்டார். இந் நிலையில், பாலியல் தொல்லை கொடுத்ததாக அவர் மீதும் அவரது குடும்பத்தார் மீதும் தூத்துக்குடியில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில், தன்னைக் கைது செய்ய வாய்ப்பு இருப்பதால், முன் ஜாமீன் கோரி, சசிகலா, அவரது கணவர் லிங்கேஸ்வரன் மற்றும் மகன் பிரதீப் ராஜா ஆகியோர் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் சசிகலா மனுத்தாக்கல் செய்தார்.

அந்த வழக்கில் தன்னைக் கைது செய்ய வாய்ப்பு இருப்பதால், உயர்நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் சசிகலா புஷ்பா மனுத்தாக்கல் செய்தார். அந்த மனு வெள்ளிக்கிழமை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தாகூர் தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.

சசிகலா தனது முன் ஜாமீன் மனுவை அவராகவே திரும்பப் பெற்றுக் கொண்டதாக தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், சசிகலாவின் குற்றச்சாட்டை அடுத்து, பதில் நடவடிக்கை எடுக்க அரசு துடிப்பதன் பின்னணியில் ஏதோ இருப்பதாக சந்தேகம் எழுகிறது என நீதிபதிகள் கருத்துத் தெரிவித்தனர்.

மேலும், அவர் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற காரணத்தால் அவர் எங்கும் செல்ல மாட்டார் என்று கூறிய நீதிபதிகள், 6 வாரங்கள் அவரைக் கைது செய்யக்கூடாது என அறிவுறுத்தினர். அதே நேரத்தில், சசிகலா புஷ்பா வரும் திங்கட்கிழமை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Related posts: