தேர்தலில் ரஷ்யா தலையிடலாம் –  பொரிஸ் ஜோன்சன்!

Sunday, May 14th, 2017

எதிர்வரும் ஜூன் மாதம் 8ஆம் திகதி பிரித்தானியாவில் நடத்தப்படவுள்ள பொதுத் தேர்தலில் ரஷ்யா தலையிடுவதற்கான சாத்தியப்பாடு உள்ளதாக பிரித்தானியாவின் வெளியுறவுச் செயலாளர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

தெற்கு வேல்ஸில் இருந்து பொதுத் தேர்தல் தொடர்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் கருத்து தெரிவித்த பொரிஸ், “அமெரிக்க தேர்தல்களில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தலையீடு செய்தார். அதைப் போலவே பிரித்தானிய தேர்தல்களிலும் தலையீடு செய்யலாம். அதனால் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்” என தெரிவித்தார்.

அத்துடன், எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரித்தானிய தொழிற்கட்சியின் தலைவர் ஜெரமி கோர்பின் வெற்றி பெற்றால் அது புடினை மகிழ்ச்சிக்குள்ளாக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த வருடம் ஜூலை மாதம் வெளியுறவுச் செயலாளர் எனும் பதவியை ஏற்ற பொரிஸ் ஜோன்சன், அன்று தொடக்கம் இன்று வரை ரஷ்யா மற்றும் அதன் வெளியுறவுக் கொள்கைகள் தொடர்பில் வெளிப்படையாக விமர்சனம் செய்து வருகின்றமை  குறிப்பிடத்தக்கது.அதே சமயம், ரஷ்யா மீதான தடைகளை தளர்த்துவது தொடர்பிலும் பொரிஸ் அக்கறை செலுத்தி வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

Related posts: