5 தசாப்த பகைக்கு முற்றுப்புள்ளி: கியூபா – அமெரிக்கா இடையே ஒப்பந்தம்!

Tuesday, January 10th, 2017

ஐந்து தசாப்தகாலமாக நீடித்துவந்த  பகைமைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அண்டை நாடுகளான கியூபா அமெரிக்கா இடையே வணிக ரீதியிலான புதிய ஒப்பந்தம்  கைச்சாத்தாகியுள்ளது.

அமெரிக்காவும், அதன் அண்டை நாடான கியூபாவும் அரை நூற்றாண்டுக்கும் மேலாக பரம எதிரிகளாக இருந்தன. 1959-ம் ஆண்டு அமெரிக்காவின் ஆதரவுடன் அங்கு நடைபெற்று வந்த ஆட்சியை பிடெல் காஸ்ட்ரோ தலைமையிலான கம்யூனிஸ்ட் புரட்சிப்படை தூக்கியெறிந்த பின்னர் இருநாடுகளுக்கும் இடையில் தீராப்பகை நிலவி வந்தது.

பின்னர், அமெரிக்க அதிபர் ஒபாமாவும், கியூபாவின் தற்போதைய அதிபர் ரவுல் காஸ்ட்ரோவும் செய்த தொடர் முயற்ச்சியால் இரு நாடுகளுக்கிடையே உள்ள உறவில் சமரசம் ஏற்பட்டது.

இந்நிலையில், சுமார் 55 ஆண்டிற்குப் பிறகு கியூபாவில் இருந்து அமெரிக்காவிற்க்கு காய்கறிகளின் படிமங்களால் உருவாக்கப்படும் மரக்கரி (vegetable charcoal) ஏற்றுமதி செய்ய இரு நாடுகளுக்கிடையே வணிக ரீதியிலான ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது. ஒரு டன் மரக்கரி 420 அமெரிக்க டாலர் என்ற விலையில், முதல் கட்டமாக 40 டன் மரக்கரி ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.

இந்த ஒப்பந்தம் கியூபா – அமெரிக்கா உறவில் புதிய பாலமாக இருக்கும் என கருதப்படுகிறது. ஆண்டுக்கு 40,000 முதல் 80,000 டன் மரக்கரியை ஐரோப்பிய நாடுகளுக்கு கியூபா ஏற்றுமதி செய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

1-9

Related posts: