மொரோக்கோ நிலநடுக்கம் – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிப்பு!

Sunday, September 10th, 2023

மொரோக்கோவில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 12 ஆக பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் இரண்டாயிரத்து 500க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும், மொரோகோவின் தெற்கில் உள்ள மாகாணங்களில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த நாட்டின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்தநிலையில், அந்த நாட்டின் மன்னரான ஆறாம் முகமது மொரோக்கோரவில் மூன்று நாட்கள் தேசிய துக்க தினத்தை பிரகடனப்படுத்தியுள்ளார்.

அத்துடன், இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டவர்களுக்கான தங்குமிடம், உணவு மற்றும் பிற உதவிகளை வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு உள்ளுர் நேரப்படி 11 மணியளவில் ஏற்பட்ட 6.8 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம் மராகேஷ் உள்ளிட்ட பல நகரங்களைத் தாக்கியது.

இந்த நிலநடுக்கம் மரகேஷிலிருந்து தென்மேற்கே 71 கிலோமீற்றர் தொலைவில் உள்ள ஹை அட்லஸ் மலைகளில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கமானது, 350 கிலோமீற்றர் தொலைவில் உள்ள தலைநகர் ரபாத் மற்றும் காசாபிளாங்கா, அகாதிர் மற்றும் எஸ்ஸெளயிரா ஆகிய இடங்களிலும் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தினால் அல் ஹெளஸ் மாகாணத்தில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், தொடர்ந்தும் மீட்பு பணிகள் இடம்பெற்றுவருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது

Related posts: