100 ரூபா லஞ்சம் கொடுக்க மறுத்த 2 தொழிலாளர்களை அடித்துக்கொன்ற போலிஸார்!

Sunday, August 7th, 2016

உத்தரபிரதேச மாநிலம் மெயின்புரி மாவட்டத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளிகள் 4 பேர் செங்கல் ஏற்றிக்கொண்டு ஒரு லொறியில் சென்று கொண்டிருந்தனர். சோதனைச்சாவடியில் லொறியை வழிமறித்த போலீஸ்காரர்கள், அவர்களிடம் ரூ.100 லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. ஆனால் அவர்கள் லஞ்சம் கொடுக்க மறுத்து அங்கிருந்து ஓடினர்.

அவர்களில் திலீப் (வயது 22) மற்றும் பன்கஜ் (24) ஆகியோரை பிடித்த போலீஸ்காரர்கள், இருவரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று அடித்து துன்புறுத்தினர். இதில் அவர்கள் இறந்து விட்டனர். உடனே 2 பேரின் உடலையும் அங்கிருந்த குளத்தில் போட்டு விட்டு போலீசார் சென்று விட்டனர்.

இதனை அறிந்ததும் கிராம மக்கள் ஆத்திரம் அடைந்து கிரார் பகுதியில் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையில் போலீசார் தாக்கியதால் தான் இருவரும் இறந்தது தெரியவந்தது. இதனையடுத்து தொழிலாளிகளை அடித்துக் கொன்ற 4 போலீஸ்காரர்கள் மற்றும் 2 ஊர்காவல்படையினர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

Related posts: