வட கொரியாவின் சரக்கு கப்பலை தடுத்து நிறுத்தியது பிலிப்பைன்ஸ்

Sunday, March 6th, 2016

 

கடந்த 2006-ம் ஆண்டில் வடகொரியா அணுகுண்டு சோதனையை நடத்தியதால் அந்த நாட்டின் மீது ஐ.நா. சபை பொருளாதாரத் தடைகளை விதித்தது. கடந்த ஜனவரி 6-ம்தேதி சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் குண்டு சோதனையை வடகொரியா நடத்தியது.

ஹைட்ரஜன் குண்டு, ஏவுகணை சோதனைகளுக்கு அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் உள்பட உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. வடகொரியாவின் நட்பு நாடுகளான சீனாவும் ரஷ்யாவும் கூட அதிருப்தி வெளியிட்டன.

இதைத்தொடர்ந்து வடகொரியாவுக்கு எதிராக கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிப்பது குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நேற்றுமுன்தினம் முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது.

மொத்தம் 15 உறுப்பினர்கள் கொண்ட பாதுகாப்பு கவுன்சிலில் வடகொரியாவுக்கு பொருளாதாரத் தடைகளை விதிக்கும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அதன்படி உணவு, மருந்து பொருட்களைத் தவிர்த்து அந்த நாட்டுக்கு வேறு அத்தியாவசியப் பொருட்களை ஏற்றுமதி செய்யக்கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

வடகொரியாவின் மீது கடுமையான பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளதால் வடகொரியாவின் சரக்கு கப்பலை பிலிப்பைன்ஸ் பறிமுதல் செய்து துறைமுகத்தில் இருந்து வெளியேற்ற மறுத்துவிட்டது.

வடகொரியாவின் 6830 டன் எடை கொண்ட ஜின் டெங் சரக்கு கப்பல் பிலிப்பைன்சின் சுபிக் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. இதை அந்த அரசு பறிமுதல் செய்துள்ளது. அத்துடன் துறைமுகத்தில் இருந்து வெளியேற்றவும் மறுத்து விட்டது. இந்த கப்பல் கடந்த 27-ந்தேதி சியாரோ லியோன் நாட்டின் கொடியுடன் பிலி்ப்பைன்ஸ் நாட்டிற்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

கடுமையான பொருளாதார தடை விதிப்பிற்குப்பின் வட கொரியாவிற்கு எதிராக முதல் தடை இதுவாகும். வடகொரியாவின் 31 கப்பல்கள் இந்த பட்டியலில் உள்ளது.

Related posts: