2023 ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரை இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடத்த இணக்கம் – இந்தியா – பாகிஸ்தான் முறுகலுக்கும் தீர்வு!

Sunday, June 11th, 2023

2023 ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை பரிந்துரைத்த கலப்பு முறையில் நடத்துவதற்கு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

அதன்படி, இலங்கை மற்றும் பாகிஸ்தானில் போட்டிகளை நடத்த ஆசிய கிரிக்கெட் பேரவையின் (ஏசிசி) தலைவர் ஜெய் ஷா ஒப்புக்கொண்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில், நாளைமறுதினம் (13) செவ்வாய்க்கிழமை இது தொடர்பான முடிவு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆசிய கிண்ணத் தொடர் எப்படி நடத்தப்படும் என்பதில் ஏறக்குறைய ஆறு மாத கால இழுபறி நிலவியது.

எவ்வாறாயினும், தற்போது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையும் (பிசிசிஐ) இறுதியாக ஒரு கலப்பின வடிவத்திற்கு இணக்கம் வெளியிட்டுள்ளது.

இந்திய செய்தி முகவரகமான PTI இன் கூற்றுப்படி, இந்திய அணி பங்கேற்காத அனைத்து போட்டிகளும் பாகிஸ்தானில் நடத்தப்படும்.

அதே நேரத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பங்குபெறும் போட்டிகள் மற்றும் இந்திய அணியின் அனைத்து போட்டிகளும் இலங்கையில் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இந்த ஆண்டு ஐசிசி ஒருநாள் உலகக் கிண்ணத் தொடருக்காக பாகிஸ்தான் அணி, இந்தியா செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: