கதவுகள் திறந்திருக்கின்றது: தலிபான் அறிவிப்பு!

Wednesday, September 18th, 2019

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எதிர்காலத்தில் பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிக்க விரும்பினால், தங்களின் கதவுகள் திறந்திருப்பதாக தலிபான் அறிவித்துள்ளது.

தலிபானின் தலைமை பேச்சுவார்த்தையாளர் ஷேர் மொஹம்மட் அபாஸ் ஸ்டனிக்ஷாய் பிபிசிக்கு வழங்கிய செவ்வியில் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவதற்கு பேச்சுவார்த்தையே ஒரு வழி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவுக்கும், தலிபான்களுக்கும் இடையிலான சமாதான பேச்சுவார்த்தை செயலிழந்து விட்டதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவித்து ஒருவாரம் கடந்துள்ள நிலையில், தலிபான்களின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

18 ஆண்டுகால மோதலை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் கடந்த 8 ஆம் திகதி டொனால்ட் ட்ரம்புக்கும், தலிபான் தலைவர்கள் மற்றும் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஸ்ரப் காணி  ஆகியோருக்கும் இடையில் சமாதான பேச்சுவார்த்தை இடம்பெறவிருந்தது.

எனினும், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் கடந்த 6ஆம் திகதி தலிபான்கள் நடத்திய தாக்குதலில் அமெரிக்க சிப்பாய் ஒருவர் உட்பட 11 பேர் கொல்லப்பட்டதை அடுத்து, டொனால்ட் ட்ரம்ப் அந்தப் பேச்சுவார்த்தையை இரத்து செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: