ஹொங்கொங் போராட்ட குழு தலைவர் மீது சுத்தியல் தாக்குதல்!

Friday, October 18th, 2019

ஹொங்கொங்கின் மிக பெரியதொரு ஜனநாயக ஆதரவு குழுவின் தலைவர் தாக்கப்பட்டதை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சிவில் மனித உரிமை முன்னணி என்ற குழுவின் தலைவர் ஜிம்மி ஷாம் ரத்த வெள்ளத்தில் தெருவில் விழுந்து கிடப்பதை சமூக ஊடகங்களில் வெளியான புகைப்படங்கள் காட்டுகின்றன.

நாடாளுமன்றத்தில் இடையூறு செய்யப்பட்டதால், ஆண்டு கூட்ட உரையை ஹொங்கொங் நிர்வாக தலைவர் கேரி லாம் ரத்து செய்த பின்னர் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

ஹொங்கொங்கிற்கு அதிக ஜனநாயக உரிமைகளை வழங்க வேண்டும் என்று கோரி, கடந்த ஜூன் மாதம் தொடங்கிய பெருதிரள் மக்கள் போராட்டங்கள் தணிவதற்கான அறிகுறிகள் எதுவும் இன்னும் தென்படவில்லை.

கவுலூன் தீபகற்பத்தின் மோங் கோக் மாவட்டத்தில் சுத்தியல்களோடு வந்த ஐந்து ஆண்கள், ஜிம்மி ஷாமை தலையில் தாக்கியதாக சிவில் மனித உரிமை முன்னணி தெரிவித்தது.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, சுய நினைவோடு இருந்த அவரது உடல் நிலை, இப்போது நிலையாக இருப்பதாகவும் அது கூறியுள்ளது.

ஹொங்கொங்கில் இந்தப் போராட்டங்கள் தொடங்கிய பின்னர், ஜிம்மி ஷாம் தாக்கப்படுவது இது இரண்டாவது முறை.

சமீபத்திய மாதங்களில் பிற ஜனநாயகத்திற்கு ஆதரவான செயற்பாட்டாளர்களை தாக்கியதாக சந்தேப்படும் அரசு ஆதரவாளர்கள் இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்றும் சிவில் மனித உரிமை முன்னணி கூறியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை புதிதாக ஒரு பேரணியை நடத்துவதற்கு பொலிஸாரின் அனுமதிக்கு விண்ணப்பித்திருப்பதாக கோடைகாலத்தில் பெரிய பேரணிகள் பலவற்றை நடத்தியுள்ள இந்த அமைதி வழியிலான போராட்டக் குழு கூறியுள்ளது.

சமீபத்தில் இந்த குழு கோரிய அனுமதிகள் மறுக்கப்பட்டுள்ளன. ஆனால், பிற செயற்பாட்டாளர்கள் தடைகளை மீறி போராட்டங்களை நடத்தி பொலிஸாரோடு மோதிய நிகழ்வுகள் அரங்கேறியுள்ளன.

ஷாம் மீது நடைபெற்ற தக்குதல் சம்பவம் தொடர்பாக புலனாய்வு மேற்கொள்ளப்பட வேண்டுமென அம்னெஸ்டி இன்டர்நேஷனல் வலியுறுத்தியுள்ளது. ஹாங்காங்கில் குற்றவாளிகள் என சந்தேகிக்கும் நபர்களை சீனாவிடம் ஒப்படைக்கும் சர்ச்சைக்குரிய மசோதாவுக்கு எதிராகக் கடந்த ஜூன் மாதம் போராட்டம் தொடங்கியது. இந்த மசோதா அந்நாட்டின் நீதிக்கான சுதந்திரத்தைப் பாதிக்கும் என அஞ்சப்பட்டது.

அந்த மசோதா கைவிடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டாலும், போராட்டக்காரர்கள் முழுமையான ஜனநாயகம் கோரியும், பொலிஸாரின் மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கோரியும் போராடிவருகின்றனர்.

சீனாவை பிரிக்க யாராவது முயற்சி செய்தால் நொறுங்கிய எலும்புகளும், நசுங்கிய உடல்களுமே மிஞ்சும் என்று ஹாங்காங் போராட்டக்காரர்களுக்கு சில தினங்களுக்கு முன்பு சீன அதிபர் ஷி ஜின் பிங் எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: