வெனிசுலாவில் தற்காலிக அதிபர் நியமனம்!

Friday, January 25th, 2019

வெனிசுலாவில் பாராளுமன்ற சபாநாயகர் ஜூவான் கெய்டோ, தன்னை நாட்டின் தற்காலிக அதிபராக பிரகடனம் செய்திருந்த நிலையில் அதனை அமெரிக்கா அங்கீரித்துள்ளது.

கடந்த சில வருடங்களாக வெனிசுலா அதிபர் மதுராவுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன. அவரது அரசுக்கு எதிராக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கடுமையான கிளர்ச்சி ஏற்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

இதனையடுத்து நடைபெற்ற தேர்தலில் நிகோலஸ் மதுரோ 67% வாக்குகள் பெற்று வெற்றி பெற்று, பதவியை தக்க வைத்துக் கொண்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட எதிர்க் கட்சி வேட்பாளர் ஹென்றி பால்கோன் 21.2% சதவீத வாக்குகளே பெற்றார்.

மதுரோ வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை ஏற்க மறுத்த எதிர்க்கட்சி, இந்த தேர்தலில் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டியது. மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியது. அதேசமயம், பாராளுமன்றத்தில் முழுவதுமாக ஆதிக்கம் செலுத்தி வரும் எதிர்க்கட்சியினர், நிகோலஸ் மதுரோ அதிபர் பதவி ஏற்பதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்தனர். எனினும், கடந்த 10ஆம் திகதி சுப்ரீம் கோர்ட்டு முன்னிலையில் 2-வது முறையாக அந்நாட்டின் அதிபராக நிகோலஸ் மதுரோ பதவி ஏற்றுக் கொண்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் எதிர்க்கட்சிகள், நிகோலஸ் மதுரோ பதவி விலக வேண்டும் என்றும், புதிய தேர்தலை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றன. இதற்கிடையில் பாராளுமன்ற சபாநாயகரான ஜூவான் கெய்டோ(வயது 35), தான் அதிபர் ஆவதற்கு தயாராகி வருவதாக அறிவித்தார். ஒரு கட்டத்தில் அவரை பாதுகாப்பு படை வீரர்கள் கைது செய்து, பின்னர் விடுவித்தனர். இந்த விவகாரம் சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்தது. ஜூவான் கைது செய்யப்பட்டதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்தன. மதுரோவுக்கு எதிராக போராட்டங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், தலைநகர் கராகசில் எதிர்க்கட்சி சார்பில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஜூவான் கெய்டோ, தன்னை நாட்டின் தற்காலிக அதிபராக பிரகடனம் செய்தார். பாராளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவிட்ட நிலையில், சபாநாயகர் தனது அறிவிப்பை அதிரடியாக வெளியிட்டுள்ளார். இதனால் அதிபர் மதுரோ கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்த அரசியல் மாற்றம் வெனிசுலாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே வெனிசுலாவின் தற்காலிக அதிபராக ஜூவான் கெய்டோ தன்னைத்தானே அறிவித்ததை அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகள் அங்கீகரித்து ஆதரவு தெரிவித்துள்ளன.

இதேபோல் மற்ற நாடுகளும் ஜூவான் கெய்டோவை ஆதரிக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கேட்டுக்கொண்டுள்ளார். அதிபர் நிகோலஸ் மதுரோ முறைகேடு செய்து வெற்றி பெற்றதாகவும், மக்களால் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜூவான் கெய்டோ தலைமையிலான தேசிய சபை தான் சட்டப்பூர்வமானது என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: