வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தம்: 2 நாட்களுக்கு மழை பெய்யும் என அறிவிப்பு!

Saturday, August 27th, 2016

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதையொட்டி அடுத்து 2 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் தென் மேற்கு பருவமழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே லேசான மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என்று வானிலை மையம் நேற்றுமுன்தினம் அறிவித்து இருந்தது. அதன்படி நேற்று குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மண்டல ஆராய்ச்சி மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:- மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஆந்திராவுக்கு வடக்கே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. ஏற்கனவே உருவான மேலடுக்கு சுழற்சியும் அந்த பகுதியில் உள்ளது. அடுத்து 2 நாட்களுக்கு மழை இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் சில இடங்களில் இன்றும் (சனிக்கிழமை) நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) மழை பெய்யும் அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும்.

சென்னையில் வானம் மேக மூட்டமாக காணப்படும். நகரின் சில பகுதிகளில் சில நேரங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-
மழை அளவு சேலம் மாவட்டம் ஏற்காடு 7 செ.மீ., கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் 5 செ.மீ., நாமக்கல் மாவட்ட தலைநகரம் 4 செ.மீ., நாகப்பட்டினம் மாவட்டம் மயி லாடுதுறை, கடலூர் மாவட்டம் தொழுதூர், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தலா 3 ெ-.ச.மீ., சேலம் மாவட்டம் ஆத்தூர், அரியலூர் மாவட்ட தலைநகர் அரியலூர், தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி, திருச்சி மாவட்டம் சமய புரம், சேம் மாவட்டம் வால்பாறை தலா 2 செ.மீ., நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி, பெரம்பலூர் மாவட்டம் வெம்பாவூர், கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு பெரம்பலூர் மாவட்ட தலைநகர் பெரம்பலூர், சேலம் மாவட்டம் சங்ககிரி, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தலா 1 செ.மீ.மழை பெய்துள்ளது.

Related posts: