வட கொரிய ஜனாதிபதி கிம் மீது அமெரிக்கா தடை விதிப்பு!

Friday, July 8th, 2016

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி வட கொரிய தலைவர் கிம் ஜொங் உன் மீது அமெரிக்கா முதல் முறை தடை விதித்துள்ளது. கிம் தனது நாட்டில் இடம்பெறும் வன்முறைகளுக்கு நேரடி பொறுப்புக் கூற வேண்டும் என்று அமெரிக்க திறைசேரி குறிப்பிட்டுள்ளது. மேலும் பத்து வட கொரிய முக்கிய அதிகாரிகள் மீதும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் வட கொரிய அரசு இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை.

இதன்மூலம் இந்த தனிநபர்களுக்கு அமெரிக்காவில் இருக்கும் எந்தவொரு சொத்தும் முடக்கப்படுவதோடு அமெரிக்க பிரஜைகள் இவர்களுடன் வர்த்தகத்தில் ஈடுபடுவதும் தடுக்கப்படுகிறது.

“கிம் ஜொங் உன்னின் கீழ் வட கொரியா சகிக்க முடியாத கொடுமைகள், கட்டாய உழைப்பு, கட்டாய தொழில் மற்றும் சட்டத்திற்கு அப்பாலான கொலைகள் உட்பட மில்லியன் கணக்கான தனது சொந்த மக்கள் மீது ஒடுக்குமுறைகளை செய்து வருகிறது” என்று அமெரிக்க திறைசேரி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வட கொரிய அத்துமீறல்கள் குறித்து அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்ட சமகாலத்திலேயே இந்த தடைகளும் விதிக்கப்பட்டுள்ளது.

வட கொரிய சிறை முகாம்களில் 80,000 முதல் 120,000 வரையாக கைதிகள் சித்திரவதை, பாலியல் வன்முறை மற்றும் மரண தண்டனைக்கு முகம் கொடுப்பதாக மேற்படி அறிக்கை கணித்துள்ளது. இந்த தடைகள் மூலம் கிம் ஜொங் உன்னை கட்டுப்படுத்துவது சாத்தியமில்லை என்று இராஜாங்க திணைக்கள பேச்சாளர் ஜோன் கிர்பி ஒப்புக்கொண்டுள்ளார். இதற்கு முன்னர் அமெரிக்கா சிரியாவின் பஷர் அல் அஸாத் மற்றும் லிபிய முன்னாள் தலைவர் முஅம்மர் கடாபி ஆகிய அரச தலைவர்களுக்கு எதிராக தடைகளை விதித்துள்ளது.

 

Related posts: